Ad

சனி, 17 அக்டோபர், 2020

தளபதிகளை இழந்துவரும் தினகரன்...தாக்குப்பிடிப்பாரா அரசியல் களத்தில்?

வெற்றிவேல்... அ.ம.மு.க கட்சியைப் பொறுத்தவரை இதுவெறும் பெயர் மட்டுமல்ல, உற்சாகத்தை கரைபுரண்டு ஓடவைக்கும் டானிக்கும் கூட. டிசம்பர், 2017-ல் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், குக்கர் சின்னத்தில் டி.டி.வி.தினகரன் சுயேச்சையாக போட்டியிட்டார். ஒருபக்கம் இரட்டை இலை சின்னத்தோடு, அமைச்சர்களின் பிரசார அணிவகுப்பால் அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனனின் பிரசாரம் சரவெடி கொளுத்தியது. மறுபக்கம், தங்கள் கட்சி வேட்பாளர் மருது கணேஷை வெற்றி பெறவைக்க தி.மு.க-வின் மொத்த தலைவர்களும் ஆர்.கே.நகரின் 6.24 சதுர கி.மீ பரப்பளவையும் அளந்து கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு இடையே தினகரனை ஒரு போட்டியாளராக முன்னிறுத்தி ஜெயிக்க வைத்தவர் வெற்றிவேல். கொரோனாவால் பாதிக்கப்பட்டு வெற்றிவேல் திடீரென மறைந்திருப்பது, அ.ம.மு.க-வின் தன்னம்பிக்கையை அசைத்துப் பார்த்திருக்கிறது.

தினகரனுடன் மேலூர் சாமி

``எனக்கு சாமி தான் முக்கியம்”

1998-ம் ஆண்டு அம்மா பேரவைச் செயலாளராக தினகரன் இருந்தபோது, இளைஞரணிக்கு பொறுப்பு வகித்த மேலூர் சாமியும் மாணவரணிக்கு பொறுப்பு வகித்த தங்கத் தமிழ்ச்செல்வனும் தினகரனுக்கு நெருக்கமானார்கள். மூன்று பேருமே மாவட்டவாரியாக கூட்டங்களை நடத்தி உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்தினர். இந்த நெருக்கம், அடுத்த இருபது வருடங்களுக்குத் தொடர்ந்தது. இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில், ஏப்ரல் 2017-ல் தினகரன் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். ஜூன் மாதம் ஜாமீனில் வெளியே வந்த தினகரன், தன்னுடைய பலத்தை டெல்லிக்குக் காட்டுவதற்காக பிரம்மாண்ட கூட்டத்தைக் கூட்டத் திட்டமிட்டார். அந்த சமயத்தில் ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான் உள்ளிட்ட 36 எம்.எல்.ஏ-க்கள் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

Also Read: என்ன செய்கிறார்கள் சசிகலா சொந்தங்கள்?

ஆகஸ்ட் 2017-ல், மதுரை மேலூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக் கூட்டத்தை நடத்த முடிவு செய்த தினகரன், அதற்கான பொறுப்பை மேலூர் சாமியிடம் ஒப்படைத்தார். ஆவேசமான ராஜன் செல்லப்பா,``இருபது வருஷத்துக்கு மேல நான் மாவட்டச் செயலாளரா இருக்கேன். என்கிட்ட பொறுப்பை ஒப்படைக்காம, அவர்கிட்ட கொடுக்குறீங்களே?” என தினகரனிடம் முரண்டு பிடித்தார். அதற்கு தினகரன்,``உங்களைவிட எனக்கு சாமிதான் முக்கியம். 1996 தேர்தல்'ல கட்சி தோற்ற பின்னாடி, சின்னத்தை முடக்குறதுக்காக கையெழுத்து போட்டவர் தானே நீங்க..” என ஒரே போடாகப் போட, ராஜன் செல்லப்பாவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லையாம். அந்தக் கோபத்தில்தான், தினகரன் ஆதரவு நிலையில் இருந்து திசைமாறி எடப்பாடி பக்கம் அணி தாவியதாகக் கூறுகிறார்கள். இப்படி தினகரனுக்கு வலதுகரமாக இருந்த சாமி, மே 2018-ல் மறைந்தார். அவருக்குப் பிறகு மதுரையில் அ.ம.மு.க-வை கரைசேர்க்க ஆளில்லை.

தங்க தமிழ்ச்செல்வன்

``எனக்கு அண்ணன் தான்ப்பே!”

தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களில் ஒருவர் தங்க தமிழ்ச்செல்வன். புதுச்சேரி, கர்நாடகாவின் கூர்க்கிலுள்ள ரிசார்ட்டுகளில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை அடைகாத்ததில் தங்கத்தின் பங்கு அதிகம். தேனி மாவட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேர் எதிரியாக செயல்பட்ட தங்கத்தின் பிம்பம், அ.ம.மு.க-வுக்குள் ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருந்தது. கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக ஊடகங்கள் மூலம் தமிழக மக்களுக்கு நன்கு பரிச்சயமானார். ``அ.தி.மு.க-வுக்குள்ள நிறைய ஸ்லீப்பர் செல் வைச்சிருக்கோம். எந்நேரத்துலயும் அது வெடிச்சிரும்” என வெடிக்காத வெடியைக் கூட கிள்ளி எறிந்து பயம் காட்டுவதில் தங்கம் கில்லாடி.

Also Read: “தினகரன் ஒரு தலைவலி!” - புகழேந்தி பொளேர்...

``தர்மயுத்தம் நடத்திய காலக்கட்டத்தில் தினகரனைச் சந்தித்து ஓ.பி.எஸ் பேசினார்” என ஒரு டி.வி விவாதத்தின்போது தங்கம் உடைத்த தேங்காய், பன்னீரின் பிம்பத்தை சுக்கு நூறாக நொறுக்கியது. ``எனக்கு எப்பவும் அண்ணன் தான்ப்பே” என மூச்சுக்கு முன்னூறு தடவை தினகரனின் பெயரை உச்சரித்துவந்த தங்கம், பின்னாளில் அதே தினகரனை வசைபாடிய ஆடியோ வெளியாகி பரபரப்பூட்டியது. இருவருக்கும் இடையேயான விரிசல் அதிகமாகி, கட்சியிலிருந்தே ஒதுங்கிக் கொண்டார் தங்க தமிழ்ச்செல்வன். இன்று தேனி வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளராக இருக்கும் தங்க தமிழ்ச்செல்வனை, தங்கள் கட்சியில் இருந்து வெளியேற தினகரன் விட்டிருக்கக் கூடாது என்பதுதான் அ.ம.மு.க-வினரின் எண்ணம்.

செந்தில்பாலாஜி

“எனக்கு எடப்பாடி வரக் கூடாது!”

கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நேரெதிர் அரசியல் செய்துவந்தவர், ஜெயலலிதா ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி. கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்கள் கூடி புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பது குறித்து விவாதித்தபோது, யார் செலவை ஏற்றுக் கொள்வது என்கிற கேள்வி எழுந்தது. அப்போது,``செலவை நான் பார்த்துக்குறேன். எனக்கு எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சரா வரக்கூடாது. அவரைத்தவிர வேற யாரை முதல்வரா முன்னிறுத்தினாலும் பணத்தை திரட்டித்தர நான் தயார்” என்று சசிகலாவையே அதிரடித்தாராம் செந்தில்பாலாஜி. சசிகலா சிறை சென்றபிறகு, தினகரனின் கொங்கு மண்டலத் தளபதியாக இருந்த செந்தில்பாலாஜி, பின்னாளில் தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து விலகினார். இன்று கொங்கு மண்டலத்தில் அ.ம.மு.க-வை வழிநடத்த ஆள் இல்லை.

போர்ப் படை தளபதிகளான மேலூர் சாமி, தங்கத் தமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி விட்டுச் சென்ற இடம் இன்றுவரை கட்சிக்குள் நிரப்பப்படவில்லை. தற்போது வெற்றிவேலின் மறைவால் சென்னை மண்டலத்தில் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. கட்சியின் தூண்கள் ஒவ்வொன்றாக காலியாகின்றன. இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு தினகரன் என்ன செய்தார் என்பதுதான் கேள்வி. கட்சிக்குள் சரியாக களப்பணியாற்றுபவர்களைக் கண்டறிந்து, இரண்டாம் கட்டத் தலைவர்களாக தினகரன் முன்னிறுத்தாதவரை சறுக்கல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். சீட்டுக் கட்டு கோபுரம் முழுவதுமாக சரிந்து விழுவதற்குள் காப்பாற்றிக் கொள்வது தினகரன் கையில்தான் இருக்கிறது.



source https://www.vikatan.com/news/politics/will-ttv-dinakaran-sustain-in-tn-politics

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக