Ad

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

`தந்திர பூமிக்கு எதிராகத் தந்திரம் வேண்டாம்'...தி.மு.க தலைமையின் புதுக் கணக்கு!

``கருணாநிதியையே கலக்கம் அடையச் செய்தது டெல்லி அரசியல். தலைநகர் டெல்லிக்கு எதிராக நாம் எந்த தந்திரத்தையும் இப்போது கையில் எடுக்கவேண்டாம். சமாதானப் போக்கே சாலச்சிறந்தது” என்று ஸ்டாலினுக்கு ஆலோசனை கொடுத்துள்ளனர் கட்சியின் சீனியர் நிர்வாகிகள்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்துவிடவேண்டும் என்கிற உத்வேகத்தில் தி.மு.க இருக்கிறது. அதற்காக கட்சியைப் பலப்படுத்தும் பணிகள் முதல், கூட்டணி வியூகங்கள் வரை கட்சியில் வேகமெடுத்துள்ளது. கடந்த முறைபோன்று அதிக எண்ணிக்கையிலான இடங்களைக் கூட்டணிக் கட்சிகளுக்குத் ஒதுக்கி சிக்கலான நிலையை ஏற்படுத்த வேண்டாம் என தி.மு.க தலைமை நினைக்கிறது. அதே கருத்தை பிரசாந்த் கிஷோர் தரப்பும் உறுதியாகச் சொல்லியுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் தி.மு.க-வுக்கு, சாதகமான தொகுதிகள் எது, பாதகமான தொகுதிகள் எவை என்பதையெல்லாம் ஆராய்ந்து வருகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக தி.மு.க அமைத்த கூட்டணியே இப்போது வரை தொடர்கிறது. ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தக் கூட்டணி பலத்தை எல்லாம் தாண்டி தி.மு.க பெருவெற்றியைப் பெறுவதற்கு தமிழகத்தில் நிலவிய பா.ஜ.க எதிர்ப்பு அலையும் ஒரு காரணம். அந்த எதிர்ப்பலையை தங்களுக்குச் சாதகமாக அறுவடை செய்துகொண்டது தி.மு.க . அதேபோல் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க-வுக்கு எதிராக பிரசாரத்தை வேகப்படுத்தி ஆட்சியை பிடிக்கத் திட்டமிட்டுள்ளது தி.மு.க. இந்தநிலையில் தற்போது அ.தி.மு.க -பா.ஜ.க-வுடன் இணக்கமான போக்கை கடைப்பிடித்து வந்தாலும், சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்தால் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற அச்சம் அ.தி.மு.க வினரிடம் உள்ளது.

அ.தி.மு.க கூட்டணி கட்சிகள்

ஆனால், பா.ஜ.க தரப்போ, ``அ.தி.மு.க, தங்களுடன் கூட்டணி வைத்தாலும் சரி, வைக்காவிட்டாலும் சரி, தி.மு.க ஆட்சி அமைத்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பகுத்தறிவு இயக்கங்களும் இந்துத்துவாவுக்கு எதிரான அமைப்புகளின் செயல்பாடுகளும் அதிகரித்துவிடும். ஏற்கெனவே, பா.ஜ.க-வுக்கு எதிராகத் தமிழகத்தில் செய்யப்படும் பிரசாரங்களை முறையடிக்கவே அந்தக்கட்சிக்கு பெரும் வேலையாக உள்ளது. இப்போதுதான் பா.ஜ.க-வை நோக்கி பிற கட்சியிலிருந்து ஆள்கள் வரும் நிலையே ஏற்பட்டுள்ளது. இரண்டு கழகங்களுக்கு மாற்றாக பா.ஜ.க உருவெடுக்கும் என்கிற நம்பிக்கை அந்த கட்சிக்கு கொஞ்சம் துளிர்விட்டுள்ளது. இந்தநிலையில் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பா.ஜ.க-வின் வளர்ச்சி பாதிக்கப்படும்’’ என்று தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் டெல்லிக்குத் தகவல் கொடுத்தனர்.

தமிழகத்தில் பா.ஜ.க வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக தி.மு.க-வே பிரதானமாக இருக்கிறது என்பதை டெல்லி தலைமையும் ஒப்புக்கொண்டுள்ளது. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு செக் வைக்கும் வேலைகளை ஆரம்பித்துவிட்டது மத்திய அரசு. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தூங்கிக்கொண்டிருந்த 2ஜி வழக்குக்கு உயிர் கொடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது சி.பி.ஐ. அதேபோல, முன்னாள் மத்திய அமைச்சர் ஜகத்ரட்சகன், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்.கௌதமசிகாமணி, துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் ஆகியோர் மீது மத்திய அரசிடமிருந்த வழக்குகளை வேகப்படுத்தியுள்ளது. இது தி.மு.க தரப்பை வருத்தமாக்கியுள்ளது. மத்திய அரசு தங்களுக்கு எதிராக சதி வலை பின்னுவதை தி.மு.க தலைமையும் உணர ஆரம்பித்துள்ளது.

அமித்ஷா - மோடி

இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு ஸ்டாலினுடன், துரைமுருகன் உள்ளிட்ட சீனியர்கள் பேசிக்கொண்டிருந்தபோது ``டெல்லியை எப்போதுமே நம்ப முடியாது. உங்கள் அப்பா டெல்லிக்கு எதிராக எவ்வளவோ அரசியல் செய்துபார்த்தார். ஆனால், அவர்களை முடக்க முடியவில்லை. அந்த பூமியே ஒரு தந்திர பூமி. ஆட்சியில் இருப்பவர்களையும், இல்லாதவர்களையும் அவர்கள் வளைக்க நினைத்தால் வளைத்துவிடுவார்கள். அதனால் பா.ஜ.க-வுக்கு எதிராக நமது செயல்பாடுகளில் கவனமாக இருக்க வேண்டும்” என்று எதார்த்தத்தைச் சொல்லியுள்ளனர். ஸ்டாலினும் அதை ஆமோதிக்கும் விதமாக இருந்துள்ளார்.

Also Read: ஸ்டாலினுக்கு எடுபடாத எக்ஸ்ட்ரா புரொமோஷன்கள்... ஏன்?

இதற்குப் பின்னால் மற்றொரு மூவும் நடந்திருக்கிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் டெல்லிக்குப் பயணப்பட்டார். அவருக்கு நெருக்கமான நபர்களின் மூலம் பா.ஜ.க பிரமுகர்களைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தார். காத்திருப்புக்குப் பின் பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு அந்த பிரமுகருக்குக் கிடைத்தது. அப்போது, ``மத்திய அரசுக்கு எதிராக நாங்கள் கொள்கைரீதியாக மட்டுமே சில எதிர்ப்புகளைப் பதிவு செய்கிறோம். அரசியல் ரீதியாக எங்களுக்கு எந்த முரண்பாடும் இல்லை. வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் உங்களுக்குப் போதிய ஒத்துழைப்பு எங்களிடமிருந்து கிடைக்கும். அதற்குப் பலனாக எங்கள் மீது கொடுக்கப்படும் அழுத்தங்களைக் குறைத்துக் கொள்ளுங்கள்” என்று சமாதானம் பேசியுள்ளார்.

ஆனால், இதற்கு பா.ஜ.க தரப்பிலிருந்த எந்த ரியாக்ஷனும் இல்லையாம். குறிப்பாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினர் மீது அமலாக்கப் பிரிவு பதிவு செய்த பழைய வழக்குகள் பென்டிங்கில் இருப்பதாக ஒரு அறிக்கையும் மத்திய அரசுக்குச் சென்றுள்ளது. அந்த விவகாரத்தை இப்போது கிளப்பவேண்டாம் என்று தி.மு.க தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.

பி.ஜே.பி தமிழகத் தலைவர் முருகன்

இந்தநிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் முருகன், ``தி.மு.க-வுக்கு எதிராக வீரியமாகச் செயல்பாட்டால் மட்டுமே தமிழகத்தில் பா.ஜ.க-வை வளர்க்க முடியும். அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால் நமக்கு நெருக்கடியாக மாறிவிடும்” என்று டெல்லி தலைமையிடம் சொல்லியிருக்கிறார். இதனால் தங்கள் மீதான மத்திய அரசின் பார்வை சாந்தப் பார்வையாக இருக்குமா? அக்னி பார்வையாக இருக்குமா? என்கிற கேள்வி தி.மு.க தலைமையிடம் எழுந்துள்ளது.

மேலும், தி.மு.க-வுக்கு தேர்தல் நிதி வருவதைத் தடுப்பதற்கான வேலைகளையும் மத்திய அரசு செய்ய ஆரம்பித்துள்ளது. ஏற்கெனவே மத்திய அரசு தரப்பிலிருந்து பல முன்னணி நிறுவனங்களிடம் தேர்தல் நேரத்தில் தி.மு.க-வுக்கு எந்த நிதியும் கொடுக்க வேண்டாம் என்று எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில் வழக்குகளை வரிசையாக தூசி தட்டி எடுப்பதால் தங்கள் மீதான பிடி இறுகுவதைத் தடுக்க இப்போதே சில சமாதான நடவடிக்கைகளை முன்னெடுக்க தி.மு.க தலைமை ஆலோசனை செய்துவருகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-partys-new-strategy-to-deal-bjp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக