Ad

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

வேளாண் சட்டங்கள்: `மோடி எப்போதும் சரியானவர் என்றனர்!’- பஞ்சாபில் அடுத்த பா.ஜ.க நிர்வாகி ராஜினாமா

விவசாயிகளுக்கான வேளாண் சட்டங்களைக் கண்டித்து நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் பெரும் போராட்டங்கள் இன்றளவும் நடந்து வருகின்றன.இதன் ஒரு பகுதியாக பஞ்சாப் மாநிலத்தின் பா.ஜ.க. நிர்வாகிகள் கட்சியின் பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்து வருகின்றனா்.

விவசாயிகளுக்கு ஆதரவாக இம்மசோதாவை கடுமையாக எதிர்த்துவந்த பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகியும் பஞ்சாப் மாநில பா.ஜ.க.வின் பொதுச்செயலாளருமான மால்விந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளாா்.

இது தொடர்பாக மால்விந்தர், ``நாட்டில் வாழும் சிறு, குறு விவசாயிகள், விவசாயத்தை சார்ந்து இயங்கும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது சங்கங்களின் சார்பாக கட்சியின் பொதுச்செயலாளர் என்கிற பொறுப்பில் இயங்கும் நான் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள விவசாயிகள் சட்ட மசோதவினால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பலமுறை மேலிடத்தில் தெளிவுபடுத்த முயற்சித்தேன். ஆனால், அவர்களிடத்திலிருந்து எதிர்பாா்க்கக்கூடிய பதில்கள் ஏதும் வராததால் நான் என்னை மாநிலத்தின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்கிறேன்" என்று அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

மால்விந்தர் சிங்

இதுதொடர்பாக ஊடகங்களிடம் பேசிய மால்விந்தர் சிங்,``இது தொடர்பாக கட்சியின் பொதுக்கூட்டங்களில் நான் பேசியபொழுது. பிற நிர்வாகிகள் என்னிடம் ஆவேசமாகப் பேசி என் வாயை அடைத்து அமர வைத்துவிட்டாா்கள். ஒரு முறை கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் தருண் சாக் முன்னிலையில் நான் இதைப் பற்றி கூற முற்பட்டபொழுதும் இதுவே நிகழ்ந்தது.

பஞ்சாப் மாநில பா.ஜ.க-வானது மாநில மக்களின் நலனுக்காக செயல்படுவதில்லை. பலமுறை நான் என் கருத்தை கூறியபொழுது, எனது குரல்கள் நிராகரிக்கப்பட்டே வந்தது. மேலும் நான் சில ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மூலம் முயற்சித்தபொழுதும் எவ்வித அடுத்தக்கட்ட நகர்வும் நிகழவில்லை.

`மோடி ஒரு முறை ஒரு முடிவை எடுத்துவிட்டாா் என்றால், அது சரியானதாக மட்டும்தான் இருக்கும். நீங்கள் அதனை எதிர்க்கும் செயலானது முற்றிலும் தவறு’ என்று கூறி என்னை கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து நிராகரித்து வந்தனர்’’ என்று கூறியுள்ளார்.

விவசாயம்

சமீபத்தில், விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பஞ்சாப் மாநில பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகியான அஷ்வானி ஷர்மா ராஜினாமா செய்ததார். தற்பொழுது, மால்விந்தர் சிங் ராஜினாமா செய்தது. இது, பஞ்சாப் மாநிலத்தில் பா.ஜ.க-வுக்குப் பெரும் பின்னடைவாகப் பாா்க்கப்படுகிறது. மேலும், கட்சியின் சில நிர்வாகிகள் இதனைக் கடுமையாக எதிர்த்து வருவதாகவே கூறப்படுகிறது.

இந்நிலையில், அக்டோபர் 19ஆம் தேதி கூடவிருக்கும் பஞ்சாப் சட்டசபைக் கூட்டத் தொடரில் இது குறித்து விவசாயிகளுக்கு ஆதரவான முறையில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-ns-malvinder-singh-resigns-from-party-over-farm-laws

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக