Ad

வெள்ளி, 16 அக்டோபர், 2020

`அதிகரிக்கும் நோபல் பரிசு பெறும் பெண்களின் சதவீதம்... ஆனாலும்..!' - ஓர் அலசல்

உலகின் மிக உயரிய விருதாக அறியப்படும் நோபல் பரிசு இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பான பங்களிப்பை ஆற்றியவர்களுக்கும் மற்றும் உலக அமைதிக்குப் பாடுபட்டவர்களுக்கும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உயரிய விருதை யாரெல்லாம் வெல்லப்போகிறார்கள் என உலகமே உற்று நோக்கும். இந்த ஆண்டு 11 தனி நபர்களுக்கும் உலக உணவு திட்ட அமைப்புக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

Nobel Laureates 2020

விருதைப் பெறுபவர்களுக்கும் அவர்கள் சார்ந்திருக்கும் நாட்டுக்கும் மிகப்பெரிய கௌரவத்தை அளிக்கும் நோபல் பரிசைப் பெற்றவர்களில் பெண்களின் எண்ணிக்கை மிகக்குறைவே. 1901-ம் ஆண்டிலிருந்து 2020-ம் ஆண்டு வரை மொத்தம் 962 பேர் நோபல் பரிசு பெற்றுள்ளனர். இவர்களில் பெண்கள் 58 பேர் மட்டுமே. அதாவது, வெறும் 6.05 சதவிகிதம் மட்டுமே. பெண்கள் அதிக எண்ணிக்கையில் பரிசு பெற்றிருப்பது அமைதிக்குத்தான்.

இந்தியாவுக்குத் தொண்டாற்றிய அன்னை தெரசா உட்பட இதுவரை அமைதிக்கான நோபல் பரிசு 134 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 17 பேர் பெண்கள். இந்தியாவில் தொண்டாற்றியதற்காக 1979-ம் ஆண்டு அன்னை தெரசாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தென்கிழக்கு ஐரோப்பிய நாடான வடக்கு மாசிடோனியாவின் தலைநகரான ஸ்கோப்யாவில் பிறந்தவர் அன்னை தெரசா. இந்தியாவில் ஆதரவற்ற மக்களுக்கும் ஏழை மக்களுக்கும், தொழுநோயாளுகளுக்கும் தொண்டாற்றியதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இலக்கியத்துக்காக வழங்கப்பட்ட 117 நோபல் பரிசுகளில் 16 பரிசைப் பெண்கள் பெற்றிருக்கிறார்கள். அமைதிக்கான நோபல் பரிசுக்கு அடுத்து பெண்கள் அதிக அளவில் பெற்றிருப்பது இலக்கியத் துறையில்தான்.

இலக்கியத்துக்கு அடுத்தபடியாக பெண்கள் அதிகம் சாதித்திருப்பது மருத்துவத்துறையில்தான். 222 பேருக்கு இதுவரை மருத்துவத்துறையில் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அதில் பரிசு பெற்ற பெண்களின் எண்ணிக்கை 12.

இயற்பியல் துறையில் 216 பேருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதில் 4 பெண்கள் மட்டுமே. இந்த ஆண்டு இயற்பியலுக்கான பரிசைப் பெற்றவரில் ஆண்ட்ரியா கெஸ் என்ற பெண்ணும் ஒருவர் குறிப்பிடத்தக்கது. 1903-ல் நோபல் பரிசு வென்றதன் மூலம் நோபல் பரிசுபெற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றவர் மேரி கியூரி.

போலந்து நாட்டில் பிறந்த இவர் கதிரியக்கத்தையும் அதை வெளிப்படுத்தும் பொருள்களையும் கண்டுபிடித்ததற்காகப் பரிசு பெற்றார், அதோடு மட்டுமல்லாமல், ரேடியம், பொலோனியம் ஆகிய தனிமங்களைக் கண்டுபிடித்து, ரேடியத்தைத் தனியே பிரித்தெடுத்து அதன் பண்புகளை ஆராய்ந்ததற்காக 1911-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசையும் பெற்றார்.

இவர் கண்டுபிடித்த ரேடியம் வெளிப்படுத்தக்கூடிய காமா கதிர்கள்தான் புற்றுநோய் சிகிச்சைக்குப் பெருமளவில் பயன்படுகின்றன. மேரி கியூரி பரிசுபெற்ற 24 ஆண்டுகளுக்குப் பின் அவரின் மகளான ஐரின் கியூரிக்கும் அவரின் கணவர் ஜோலியர் கியூரிக்கும் 1935-ம் ஆண்டில் வேதியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. வேதியியல் துறையில் இதுவரை 186 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. அதில் பெண்கள் 7 பேர் மட்டுமே.

இந்த ஆண்டுக்கான வேதியியல் விருதை 2 பெண்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். மரபணு மாற்றம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டததற்காக இம்மானுவேல் சார்பென்டியர் மற்றும் ஜெனிஃபர்.ஏ.டூட்னா ஆகிய இருவரும் இந்தப் பரிசைப் பெறுகின்றனர்.

பொருளாதாரம் மிகவும் குறைவு!

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற பெண்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளது. 84 பேர் இதுவரை பொருளாதாரத்துக்கான பரிசைப் பெற்றுள்ளனர். இதில் பெண்கள் இருவர் மட்டுமே. இயற்பியல், வேதியியல், பொருளாதாரத் துறையில் நோபல் பரிசு பெற்ற பெண்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தைக்கூட தாண்டவில்லை. இந்த ஆண்டு மொத்தம் 4 பெண்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் சதவிகிதம்!

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பெண்களின் விகிதம் குறைவாகத் தெரிந்தாலும், பெண்கள் நோபல் பரிசு பெறும் விகிதம் மெல்ல அதிகரித்து வருகிறது. 1900-களில் 5.4 சதவிகிதமாக இருந்தது 2000-ம் ஆண்டுகளில் 9.2 சதவிகிதமாக அதிகரித்திருந்தது. 2010 முதல் இது 11 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. நோபல் பரிசு பெறுவதில் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு மாறுபட்டுக்கொண்டிருக்கிறது. எனினும், ஒட்டுமொத்தமாக பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து மிகக்குறைவாக இருப்பதைக் காண முடிகிறது.

நோபல் பரிசு பெற்ற பெண்களின் எண்ணிக்கை

Also Read: நோபல் பரிசு 2020: உலக உணவுத்திட்டத்திற்கு அமைதிக்கான நோபல்... ஏன்?

மைல்ஸ் டு கோ 

இந்த ஆண்டு நோபல் பரிசைப் பெற்ற 11 பேரில் 4 பெண்கள் இருப்பது, முன்னேற்றத்தை காட்டுகிறது. எனினும் பெண்கள் போராடி எட்ட வேண்டிய தூரம் அதிகம் என்பதையும் மறுப்பதற்கில்லை.



source https://www.vikatan.com/news/women/an-analysis-on-percentage-of-female-nobel-laureates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக