Ad

செவ்வாய், 6 அக்டோபர், 2020

கடலூர்: இட்லிக்குள் பல்லி! - அரசு மருத்துவமனை கொரோனா நோயாளி அதிர்ச்சி

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்திருப்பதை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் சித்தா மற்றும் ஹோமியோபதி சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. கடலூரில் இதுவரை 20,869 பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 19,255 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர். 237 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

கடலூர் கொரோனா சித்த மருத்துவப் பிரிவு

அதையடுத்து கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையையொட்டி இருக்கும் பெரியார் அரசு கலைக் கல்லூரி, 150 படுக்கைகளுடன் சித்தா மற்றும் ஹோமியோபதி சிகிச்சை மருத்துவமனையாக மாற்றப்பட்டிருக்கிறது.

அங்கு 24 பெண்கள், 52 ஆண்கள், 4 குழந்தைகள் உள்ளிட்ட 80 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களுக்கு உணவு வழங்கும் பணி டெண்டர் மூலம் நடைப்பெற்று வருகிறது. இன்று காலையில் கொரோனா பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு வழக்கம்போல இட்லி பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

போராட்டத்தில் நோயாளிகள்

அந்த இட்லிகளை சாப்பிடத் துவங்கிய சிறிது நேரத்தில் ஒரு நோயாளியின் இட்லிக்குள் உயிரிழந்த பல்லி ஒன்று புதைந்து கிடந்தது. அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்,`இட்லியில் பல்லி கிடக்கிறது. யாரும் சாப்பிட வேண்டாம்’ என்று கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் பெரும்பாலானவர்கள் அந்த இட்லியை சாப்பிட்டு முடித்திருந்தனர்.

அதிர்ச்சியடைந்த அவர்கள் மருத்துவர்களிடம் முறையிட்டனர். தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் தங்களுக்கு சுத்தமான மற்றும் தரமான உணவுகளை வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து அங்கு வந்த சித்தா சிகிச்சை மைய அதிகாரி செந்தில், நோயாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதையடுத்து இட்லி சாப்பிட்ட அனைவருக்கும் உடனடியாக மிளகு சூப் கொடுக்கப்பட்டது.

Also Read: புதுச்சேரி:`கொரோனா நெகட்டிவ்... ஆனா, தப்பு நடந்துபோச்சு’ - அதிர்ச்சி கொடுத்த அரசு மருத்துவமனை

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``உணவருந்திய சிலருக்கு மாற்று மருந்து அளிக்கப்பட்டிருக்கிறது. நோயாளிகள் அனைவரும் தற்போது நலமுடன் இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/lizard-found-in-food-given-to-corona-patient-in-cuddalore-government-hospital

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக