Ad

சனி, 24 அக்டோபர், 2020

கண் தசை பாதிப்பு, செவித்திறன் பிரச்னை... கேட்ஜெட் அதிகம் பயன்படுத்தும் பிள்ளைகளா? அலெர்ட்!

ப்போதுள்ள குழந்தைகள் அப்பா, அம்மா இல்லாமல்கூட இருந்துவிடுவார்கள். ஆனால், ஆண்ட்ராய்டு இல்லாமல் இருக்க மாட்டார்கள்! அந்த அளவுக்கு கேட்ஜெட்களில் மூழ்கி இருக்கும் அவர்களுக்கு வரப்பிரசாதமாக வந்து அமைந்தது லாக்டௌன். பள்ளிக்குச் செல்லத் தேவையில்லை; வகுப்புகளும் ஆன்லைனிலேயே என்றான பிறகு, எப்போதும் போனும் கையுமாக, இயர் போனும் காதுமாகவும்தான் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்.

மொபைல், லேப்டாப், இயர் போன், ஹெட்செட் போன்ற கேட்ஜெட்களைக் குழந்தைகள் தொடர்ந்து பயன்படுத்துவதன் விளைவாக அவர்களின் பார்வை மற்றும் செவித்திறன் பாதிக்கப்படலாம் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

அதிக நேரம் மொபைல் மற்றும் லேப்டாப்பை பார்த்துக்கொண்டிருப்பதால் குழந்தைகளின் பார்வைத்திறனில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து கண் மருத்துவர் சரவணனிடம் பேசினோம்.

கண் மருத்துவர் சரவணன்

``குழந்தைகள் தொடர்ந்து மணிக்கணக்கில் மொபைல், லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்தும்போது அந்த கேட்ஜெட்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகளால் கண்கள் வெகுவாகப் பாதிக்கப்படும். முக்கியமாகக் கண்களில் உள்ள விழி வெண்படலமும் (Cornea), சிலியரி தசைகளும் (Ciliary muscle) பாதிப்படைகின்றன.

சாதாரணமாக நாம் ஒரு நிமிடத்துக்கு 10 - 15 முறை கண் சிமிட்டுவோம். ஆனால், மொபைல் பார்த்துக்கொண்டிருக்கும்போது குழந்தைகள் கண் இமைக்கவே மறந்துவிடுவார்கள். இரண்டு, மூன்று நிமிடங்கள்கூட கண் இமைக்காமல் மொபைலையே கூர்ந்து நோக்கிக் கொண்டிருப்பார்கள். இது போன்ற நேரத்தில் கண்ணின் விழி வெண்படலத்துக்கு மேலுள்ள ஈரப்பதம் வறட்சியடைந்து கண்களில் எரிச்சல், நீர் வடிதல், அழுத்தம், வலி ஏற்படும். கண்கள் சிவந்து தலைவலியும் ஏற்படலாம்.

eye sight

Also Read: குழந்தைகள், இளைஞர்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள்... அனைவருக்குமான கண் பராமரிப்பு டிப்ஸ்!

வெகுநேரம் குறுகிய தொலைவில் ஏதேனும் காட்சிகளைப் பார்க்கும்போது கண்களின் சிலியரி தசைகள் பாதிக்கப்படும். இதனால் குழந்தைகள் கண்ணாடி அணிய வேண்டிய சூழல் உருவாகலாம். இந்தப் பிரச்னையைக் கவனிக்கத் தவறும்போது பார்வைத்திறன் குறைந்து கிட்டப்பார்வை (Myopia), தூரப்பார்வை (Hyperopia), மாறுகண் (Heterotropia) போன்ற பிரச்னைகள் தோன்றலாம்.

குழந்தைகளின் கண்களில் ஏதேனும் அலர்ஜி, வீக்கம், வலி போன்றவை ஏற்பட்டால் உடனடியாகக் கண் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். கண்ணாடி அணிய வேண்டிய நிலை ஏற்பட்டால் தாமதப்படுத்தாமல் மருத்துவரின் பரிந்துரையின்படி உடனடியாகப் பொருத்தமான கண்ணாடியை வாங்கி அணிய வேண்டியது அவசியம். கண்களில் வலி, எரிச்சல் ஏற்பட்டால் நீங்களாகவே மருந்தகங்களில் கண் சொட்டு மருந்து வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிருங்கள்.

eye glasses

மொபைல், ஐபேட், லேப்டாப் போன்ற கேட்ஜெட்களை குறைந்தபட்சம் 30 சென்டிமீட்டர் தொலைவில் வைத்துதான் பார்க்க வேண்டும். இவற்றை அதிக வெளிச்சத்திலோ, மிகவும் குறைவான வெளிச்சத்திலோ வைத்துப் பார்க்காமல் மீடியமான வெளிச்சத்தில் வைத்துப் பயன்படுத்த வேண்டும். 20 நிமிடத்துக்கு மேலாகத் தொடர்ந்து இந்த கேட்ஜெட்களைப் பயன்படுத்தக் கூடாது. சிறிது நேரம் இடைவெளி எடுத்துக்கொண்டு தூரத்தில் உள்ள பசுமையான இடங்களைப் பார்க்க வேண்டும். இவ்வாறு செய்வது சிலியரி தசைகளுக்கு நல்லது" என்றார் கண் மருத்துவர் சரவணன்.

கேட்ஜெட்களின் பயன்பாட்டால் குழந்தைகளின் செவித்திறன் பாதிக்கப்படுவது குறித்து காது, மூக்கு, தொண்டை மருத்துவர் சுதா மகேஷ்வரியிடம் பேசினோம்.

காது, மூக்கு, தொண்டை மருத்துவர் சுதா மகேஷ்வரி

``காது நுண்ணுணர்வு மிகுந்த ஓர் உறுப்பு. இயர்போன், ஹெட்செட் போன்ற எலெக்ட்ரானிக் பொருள்களைத் தொடர்ந்து காதுகளில் பொருத்தியிருப்பதால் அது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக, குழந்தைகள் இந்த கேட்ஜெட்களைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது அவர்களின் செவித்திறன் பாதிக்கப்படும். அதனுடன் சேர்ந்து ஒற்றைத் தலைவலியும் ஏற்படலாம்.

ஒரு குழந்தை மணிக்கணக்கில் தொடர்ந்து இயர்போனை காதில் அணிந்திருக்கும்போது அதிலிருந்து வெளிப்படும் வெப்பம் காரணமாகக் காதின் உள் மற்றும் வெளிப்பகுதிகளில் கட்டிகள், வீக்கம் ஏற்படலாம். ஒவ்வாமை காரணமாகக் காதுப்பகுதியின் சருமம் சிவந்துபோகலாம். இயர்போனை அல்லது ஹெட்செட்டை காதில் மாட்டிக்கொண்டு அதிக சத்தத்தில் பாடல்களைக் கேட்கும்போது காதில் ஒருவித எரிச்சலும் வலியும் ஏற்படும்.

Also Read: பட்ஸ் வைத்து காது குடையலாமா... மருத்துவம் சொல்வது என்ன? #ENT

இவை செவித்திறன் பாதிக்கப்படுவதற்கான முதல் கட்ட அறிகுறிகள். இதைக் கவனத்தில் கொள்ளாமல் தொடர்ந்து இந்த கேட்ஜெட்களைப் பயன்படுத்தும்போது காதின் உள் நரம்புகள் பாதிக்கப்பட்டு கேட்கும் திறன் முழுவதுமாகப் பறிபோகலாம். குழந்தைகளுக்கு கேட்ஜெட்களால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்த தெளிவு இருக்காது. அதனால் பெற்றோர்கள் இதுகுறித்த எச்சரிக்கையைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். அவர்கள் தொடர்ந்து இயர்போன், ஹெட்செட் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தக் கூடாது. அவர்களுக்குக் காதில் ஏதேனும் வலி, எரிச்சல், ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச்சென்று பரிசோதிப்பது நல்லது" என்றார் அவர்.



source https://www.vikatan.com/health/healthy/how-overuse-of-gadgets-can-affect-kids-eyesight-and-hearing

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக