Ad

திங்கள், 26 அக்டோபர், 2020

கிச்சிலிச்சம்பா, வாடன்சம்பா, நார்ப்பெட்டி... மதுரை புவனேஸ்வரியின் `இயற்கை விவசாய' கொலு!

நவராத்திரி கொலுவில் பொம்மைகளை அடுக்கி 9 நாள்கள் வரை வீடுகளில் வழிபாடு செய்வார்கள் பெண்கள். மதுரை, கருப்பாயூரணி ஒத்தவீட்டைச் சேர்ந்த பூங்குழலி என்ற புவனேஸ்வரி, தன் வீட்டு கொலுவில் பாரம்பர்ய ரக அரிசி வகைகளை வைத்துள்ளார். இதுகுறித்து புவனேஸ்வரியிடம் பேசினோம். “தஞ்சை மாவட்டத்துல உள்ள கல்யாண ஓடை கிராமம்தான் என்னோட சொந்த ஊரு. காவிரி ஆற்றோட கடைமடையே எங்க ஊருதான்.

நெல் வயலில் புவனேஸ்வரி

தலைமுறை தலைமுறையா விவசாயம்தான் செய்துட்டு வந்தோம். 100 ஏக்கருக்கு மேல அப்பா நெல் சாகுபடி செய்துட்டு வந்தாங்க. தண்ணீர்ப் பற்றாக்குறையால சாகுபடி பரப்பளவு படிப்படியாகக் குறைஞ்சுட்டு. ஒரு கட்டத்துல விவசாயமே நின்னுபோச்சு. 'விவசாயமெல்லாம் ஒண்ணும் வேண்டாம்ப்பா. வேற வேலைகளைப் பாருங்க'னு அண்ணன், தம்பிகளை விவசாயம் செய்ய வேண்டாம்னு சொல்லி வேற வேலைகளைச் செய்யச் சொல்லிட்டாங்க அப்பா. நானும் மதுரைக்குக் கல்யாணமாகி வந்துட்டேன்.

இருந்தாலும், விவசாயம் மேல எனக்குத் தீராத ஆர்வம். எப்படியாவது நம்ம பாரம்பர்ய விவசாயத்தை செய்யணும்ங்கிறதுல ரொம்ப வைராக்கியமா இருந்தேன். வீட்டை கவனிச்சுக்கிறது, குழந்தைகளைக் கவனிச்சுக்கிறதுன்னு நேரம் சரியா இருந்துச்சு. ஏக்கர் கணக்குல விவசாயம் செய்ய முடியாவிட்டாலும், மூலிகைகள், கீரைகள், கரும்பு, மஞ்சள், வெற்றிலைக்கொடி, வாழை, காய்கறிகள்னு வீட்டுத்தோட்டத்தில் வீட்டுத்தேவைக்கு மட்டும் சாகுபடியை செஞ்சு சமையலுக்குப் பயன்படுத்திட்டு வந்தேன். என் பாட்டி, அம்மா எனக்குச் சொல்லிக்கொடுத்த மாதிரி எல்லா நோய், நொடிகளுக்கும் கைவைத்திய முறைகளைப் பின்பற்றினேன்.

நெல் வயலில் புவனேஸ்வரி

பிள்ளைகளுக்குக் கல்யாணம் செஞ்சு கொடுத்த பிறகு நிறைய நேரம் கிடைச்சது. அந்த நேரத்தை விவசாயத்துல செலவிடலாம்னு முடிவெடுத்தேன். கடந்த 2013-ல முதலில் சோதனை அடிப்படையில் 50 சென்ட்டுல கிச்சிலிச்சம்பா நெல் விதைக்கலாம்னு நிலத்தை தயார் செஞ்சேன். அடியுரமா தொழுவுரம், மண்புழு உரம், வேப்பம் பிண்ணாக்கினை போட்டு நாற்றை நட்டேன். பூச்சி, நோய்த்தாக்குதல்கள் இருந்துச்சு. மூலிகைப்பூச்சி விரட்டியைப் பயன்படுத்தினேன்.

'என்னம்மா இது, இந்தக் காலத்துலயும் கொப்பு, குழைகளைத் தட்டி சாறெடுத்து மாட்டுக் கோமியத்துல கலந்து தெளிக்கணும்னு சொல்றீங்க..? பூச்சி மருந்து தெளிச்சாலே தாக்குதல் கட்டுக்குள்ள வர மாட்டேங்குது. இதைத் தெளிச்சா மட்டும் சரியாயிடுமா?'னு வேலையாட்கள் கேட்டாங்க. ஆனா, மூலிகைப் பூச்சிவிரட்டியைத் தெளிச்சதும் பூச்சித்தாக்குதல் கட்டுக்குள் வந்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டாங்க. அந்த அறுவடையில், ஓரளவு கணிசமான மகசூல் கிடைச்சது.

கொலுவில் பாரம்பர்ய அரிசி ரகங்கள்

நாம் தொலைத்த பாரம்பர்ய ரகங்களை மட்டும்தான் விதைக்கணும்கிறதுல ரொம்ப உறுதியா இருந்தேன். தொடர்ந்து கருப்புக்கவுனி, துளசிவாசனை சீரகச்சம்பா, குழிவெடிச்சான், வாடன்சம்பா, கருடன்சம்பா, சொர்ணமசூரி என 12 வகையான ரகங்களை தொடர்ந்து விவசாயம் செய்துட்டு வர்றேன். பல பெண்கள் இயற்கை விவசாயத்தின் பக்கம் திரும்பியுள்ளனர்” என்றவர் கொலு குறித்துச் சொன்னார்.

“நவராத்திரின்னாலே கொலுதான் எல்லாரோட நினைவுக்கும் வரும். எங்க வீட்லயும் பொம்மைகளைத்தான் அடுக்கி வச்சு வழிபாடு நடத்துவோம்.

ஆனா, ரெண்டு வருசமா கொலு படிகளில் என் நிலத்தில் இயற்கை முறை சாகுபடியில் கிடைத்த மகசூல் நெல்லை அரிசியாக்கி, அந்த அரிசியை கும்பா, நார்ப்பெட்டி, பித்தளை பாத்திரங்களில் குவித்து வைத்து அதை ஒவ்வொரு படிகளிலும் வச்சிருக்கேன். நவராத்திரி 9 நாளும் எங்க வீட்டுக் கொலுவை பாரம்பர்ய அரிசிதான் அலங்கரிக்கும். ஆத்தூர் கிச்சிலிச்சம்பா, குழிவெடிச்சான், வாடன்சம்பா, கருங்குறுவை, அறுவதாம்குறுவை, சொர்ணமசூரி, சீரகச்சம்பா, வெள்ளைப்பொன்னி ஆகிய ரகங்களில் கைகுத்தல் பச்சரிசி, புழுங்கல் அரிசியை கும்பா, நார்ப்பெட்டி, பக்கா ஆகியவற்றில் வச்சிருக்கேன்.

தொழுவத்தில் புவனேஸ்வரி

அத்துடன் அம்மி, உரல், உலக்கை, திருகைனு பாரம்பர்யப் பொருள்களையும் வச்சிருக்கேன். வீட்டுக்கு கொலு பார்க்க வர்ற எல்லாரும் இதை ஆச்சர்யமா பார்த்துட்டுப் போறாங்க. அந்தந்த மண்ணுக்கேத்த சுவை, மருத்துவ குணங்களை உடையவைதான் நம் பாரம்பர்ய நெல் ரகங்கள். ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், மென்பொருள் துறையில் பணிபுரிந்தவர்கள்னு பல தரப்பினரும் இயற்கை விவசாயத்தை நோக்கித் திரும்புறது வரவேற்புக்குரியதுதான். ஆனா, விதைக்கும் நெல் ரகமும் பாரம்பர்ய ரகங்களாக இருக்கணும்” என்றார் புவனேஸ்வரி.



source https://www.vikatan.com/news/agriculture/madurai-woman-bhuvaneswari-setup-golu-using-traditional-paddy-varieties

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக