Ad

செவ்வாய், 20 அக்டோபர், 2020

`சர்ச்சைப் பேச்சு, பார்வதி விலகல், மோகன் லாலின் அமைதி!' - மலையாள திரையுலகில் என்ன நடக்கிறது?

பிரபல மலையாள நடிகைக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம், 2017-ம் ஆண்டு இந்தியா முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் நடிகர் திலீப் பெயர் சிக்கவே, அவர் மலையாள நடிகர் சங்கமான `அம்மா'வில் Association of Malayalam Movie Artists (AMMA) இருந்து நீக்கப்பட்டார். சங்கத்தின் தலைவராக நடிகர் மோகன்லால் பொறுப்பேற்றதும், திலீப் மீண்டும் சங்கத்தில் சேர்க்கப்பட்டார். இதற்கு எதிராகவும், நீதி கேட்டும், பாதிக்கப்பட்ட நடிகையுடன், கீது மோகன்தாஸ், ரம்யா நம்பீசன், ரீமா கலிங்கல் உள்ளிட்ட நடிகைகள் சங்கத்திலிருந்து விலகினர்.

Mohanlal

இதையடுத்து பெண் கலைஞர்கள் ஒன்றிணைந்து, `டபிள்யூ.சி.சி' என்ற அமைப்பைத் தொடங்கினர். நடிகைக்கு நிகழ்ந்த குற்றச் சம்பவம் காவல்துறை விசாரணை, நீதிமன்றம் வரை செல்ல, அடுத்தடுத்து அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்தன. மலையாளத் திரையுலகில் தினந்தோறும் அதிர்வலைகள் எழுந்தன. சிறை சென்ற நடிகர் திலீப் ஜாமீனில் விடுதலையாகி, மீண்டும் சினிமாவில் நடித்துவருகிறார். திருமணம் முடிந்த நிலையில், பாதிக்கப்பட்ட நடிகையும் தற்போது கன்னடப் படங்களில் மட்டும் நடித்துவருகிறார். ஆனால், அந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில்தான் இன்னும் இருக்கிறது. இந்த விவகாரத்தின் நீட்சியாக `டபிள்யூ.சி.சி' அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளுடன் தொடர்ந்து குரல் கொடுத்துவருகின்றனர்.

இந்த நிலையில் `அம்மா' சங்கத்தின் பொதுச் செயலாளரான இடவேளா பாபு, மலையாள செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள சமீபத்திய பேட்டி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அந்தப் பேட்டியின் முக்கிய சாராம்சத்திலிருந்து...

இடவேளா பாபு

கேள்வி : `அம்மா' சங்கத்தின் புதிய திட்டமிடல்கள் என்ன?

இடவேளா பாபு : சங்கத்துக்கான புதிய கட்டடம் கட்டுவதற்காகப் பல வகையிலும் நிதி திரட்டுகிறோம். அதில் ஒரு பகுதியாகத் திரைப்படம் ஒன்றை எடுக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.

கேள்வி : கடந்த முறை சங்கத்தின் வளர்ச்சிக்காக எடுக்கப்பட்ட `ட்வென்டி: 20' படத்தில், பாதிக்கப்பட்ட நடிகை முக்கியமான ரோலில் நடித்திருந்தார். நீங்கள் கூறிய புதிய படத்தில் அவரை நடிக்க வைக்க வாய்ப்பிருக்கிறதா?

இடவேளா பாபு : அவர் சங்கத்தில் தற்போது உறுப்பினராக இல்லை. இறந்த ஒன்றை மீண்டும் கொண்டு வருவது சரியாக இருக்காது.

கேள்வி : நடிகை ரேவதி உள்ளிட்டோர் சங்க நடவடிக்கை குறித்து குரல் எழுப்புகிறார்களே...

இடவேளா பாபு : ஒருவர் வீடு கட்டிவிட்டால், `அது இடிந்து விடாதா?' என்ற பொறாமையில் அவருக்கு எதிராகச் சிலர் நினைப்பார்கள். அதுபோலவே, சினிமாவில் தற்போது புகழ்பெற முடியாதவர்கள், சங்கத்தின் ஒற்றுமையைக் கெடுக்கும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துகளைத் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பேட்டி வெளியான பிறகு, நடிகை பார்வதி `அம்மா' சங்கத்தில் இருந்து விலகியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், ``தோழிகள் பலர் அம்மாவில் இருந்து விலகியபோதும், சங்கத்தை மீட்டெடுக்க யாராவது ஒருவர் வேண்டுமே என்ற நம்பிக்கையில்தான் நான் தொடர்ந்து உறுப்பினராக இருந்து வந்தேன். ஆனால், இடவேளா பாபுவின் பேச்சுக்குப் பிறகு அந்த நம்பிக்கை சுத்தமாகப் போய்விட்டது. அவரது கருத்துக்கு சங்க உறுப்பினர்கள் சிலரும் துணை போவார்கள். அதனால் இனியும் அம்மாவில் நான் நீடிக்க விரும்பவில்லை" என்று கூறியிருக்கிறார்.

நடிகை பார்வதி

பாதிக்கப்பட்ட மலையாள நடிகைக்கு ஆதரவாக தொடக்கம் முதலே குரல் கொடுத்து வருவதில் நடிகை ரேவதி முக்கியமானவர். பாதிக்கப்பட்ட நடிகை விவகாரம் வேறு வடிவங்களில் தற்போது மீண்டும் விவாதமாகி இருக்கும் நிலையில், இடவேளா பாபுவின் கருத்துக்கு ரேவதியும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவரிடம் பேசினோம்.

``சமீபத்திய பேட்டியில் இடவேளா பாபு கூறிய சில கருத்துகள் எங்களை மிகவும் காயப்படுத்துவதாக இருந்தன. பாதிக்கப்பட்ட நடிகை `அம்மா' சங்கத்தின் வளர்ச்சிக்காக நிறையவே உழைத்திருக்கிறார். ஆனால், அவரைப் பற்றி பாபு பேசிய கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது. அந்த நடிகை குறித்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. அது குறித்துப் பொதுவெளியில் மற்றவர்கள் பேசுவது சரியாக இருக்காது. ஆனால், இடவேளா பாபு தனது பேட்டியில், அந்த வழக்கு குறித்தும், அதில் காவல்துறையினரின் விசாரணை குறித்தும் பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்.

நடிகர் திலீப்

எங்கள் பெண்கள் அமைப்பைப் பற்றி மிகவும் துச்சமாகப் பேசியுள்ளதுடன், நாங்கள் பொறாமையில் `அம்மா' சங்கத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் கூறியிருக்கிறார். எங்களுக்கு வேறு வேலையில்லையா? சொல்லப்போனால், `அம்மா' சங்கத்தை இன்னும் வலுவான அமைப்பாக மாற்றவே நினைக்கிறோம். அதற்காக எங்கள் பிரதான வேலைகளைத் தாண்டியும் போராடிக்கொண்டிருக்கிறோம். பாலியல் ரீதியான பிரச்னைகளில் பாதிக்கப்படும் பெண் கலைஞர்கள் தைரியமாகப் புகார் அளிக்கவும், அவர்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையிலும், ஏற்கெனவே இருக்கும் சங்க விதிகளில் சில மாற்றங்களைச் செய்ய வலியுறுத்திவருகிறோம்.

`அம்மா' சங்கத்தில் நடக்கும் எந்த விவகாரமாக இருந்தாலும், அது மக்களின் கவனத்தை ஈர்க்கிறது. அதனால், நமக்குப் பெரிய பொறுப்புணர்வு இருப்பதைத்தான் திரும்பத்திரும்பச் சொல்கிறோம். குழந்தைக்குச் சொல்வதுபோல சொல்லியும் எந்த மாற்றமும் இதுவரை ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட நடிகை விவகாரம் இன்றுவரை எந்த நிலையில் இருக்கிறது என உங்களுக்கே தெரியும். `அம்மா' சங்கத்தில் பெண் கலைஞருக்கு ஒரு பிரச்னை என்றால் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இதுவரை எங்களுக்கு ஏற்படவில்லை. அந்த விவகாரம் குறித்து சங்கத்துக்குப் பலமுறை மெயில் அனுப்பியும் பதில் மெயில் ஒன்றுகூட வரவில்லை. இந்த நிலையில்தான், இடவேளா பாபுவின் சமீபத்திய சர்ச்சை பேச்சுக்குப் பிறகு ஆதங்கத்துடன் பார்வதி சங்கத்தில் இருந்து விலகியிருக்கிறார்.

actress revathi

அவர் தனிப்பட்ட நபராக இல்லாமல், `அம்மா'வின் பொதுச் செயலாளராகவே பேசியிருக்கிறார். பொறுப்புணர்வுடன் பேசாத அவரின் செயல் கண்டிக்கத்தக்கது. இடவேளா பாபுவின் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து, சங்கத்தின் தலைவர் மோகன்லாலுக்கு மெயில் அனுப்பினோம். ``இது நடந்திருக்கக்கூடாது. நடந்த விவகாரம் குறித்து விசாரிக்கிறோம்" என்று பதில் அனுப்பினார். பிறகு, இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. உரிய முடிவுகள் எடுக்கும் பொறுப்பில் இருக்கும் நடிகர் மோகன்லால், அதன்படி ஏன் செயல்படுவதில்லை என்பதற்கான காரணம் எங்களுக்குப் புரியவில்லை" என்று ஆதங்கத்துடன் கூறும் ரேவதி, சிறிய இடைவெளிக்குப் பிறகு தொடர்ந்தார்.

`` `POSH' சட்டப்படி, `அம்மா' சங்கத்தில் புகார் கமிட்டி (Internal Complaints Committee) இன்னும் அமைக்கப்படவில்லை. இதற்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கிறோம். ஆனால், `சில பெண்களுக்கு நடக்கும் இதுபோன்ற பிரச்னைக்கு கமிட்டி அமைக்க வேண்டுமா?' எனப் பேசுகிறார்கள். ஒருவர் பாதிக்கப்பட்டாலும் அது பெரிய அநீதிதான். அவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டுமல்லவா! இந்த கமிட்டியானது அனைத்து நிறுவனங்களிலும் அமைக்கப்படுகிறது. ஆனால், `அம்மா' சங்க நிர்வாகிகளுக்கு அந்த கமிட்டியின் நோக்கம் புரியவில்லையோ என்றுதான் தோன்றுகிறது. தற்போது திரைத்துறையில் இளைய தலைமுறை பெண்கள் அதிகளவில் பணியாற்ற வருகின்றனர். அவர்களுக்கும் வருங்காலத்தில் எந்தப் பிரச்னையும் வரக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன்தான் `டபிள்யூ.சி.சி' அமைப்பிலுள்ள பெண்கள் குரல் கொடுக்கிறோம்.

பார்வதி

எங்களுக்கு மற்ற பெண் கலைஞர்கள்கூட ஆதரவு தரவில்லை. `பட வாய்ப்புகள் தரமாட்டார்களோ?' என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கலாம் அல்லது இந்த விஷயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படாமல் இருக்கலாம். இந்திய திரையுலகில் மலையாளம், வங்காள மொழிப் படங்களின் பங்களிப்பு பெரியது. திறமையான கலைஞர்கள் பலர் இருக்கும் இந்த மலையாள திரையுலகில், எங்கள் கோரிக்கைகளுக்குப் பலம் சேர்க்க பலரும் குரல் கொடுக்காததுதான் வருத்தமளிக்கிறது. பெண்கள் கேள்விகள் கேட்கும்போது ஒடுக்கப்படுகிறார்கள். இந்தச் சவாலைக் கடந்த சில ஆண்டுகளாக கண்கூட எதிர்கொண்டுவருகிறோம்.

* இடவேளா பாபுவின் சமீபத்திய சர்ச்சை பேச்சு குறித்து, சங்கத்திலுள்ள மற்ற 16 நிர்வாக உறுப்பினர்களின் கருத்து என்ன? அவர் பேசியது சரியானதுதானா?

* சங்கத்திலுள்ள ஓர் உறுப்பினர், சங்கத்தைப் பற்றியும் மலையாளத் திரையுலகைப் பற்றியும் தாறுமாறாக கருத்து சொன்னால் சங்கம் நடவடிக்கை எடுக்கும் என்கிறீர்கள். பாபுவின் பேச்சுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?

* `POSH' சட்டப்படி, சங்கத்தில் புகார் கமிட்டி (Internal Complaints Committee) இன்னும் அமைக்கப்படவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தியும், இந்த கமிட்டியை அமைப்பதில் உங்களுக்கு எது தடையாக இருக்கிறது?

- இந்த மூன்று கேள்விகளுக்குப் பதில் கேட்டு நாங்கள் தொடர்ந்து `அம்மா' சங்கத்தில் குரல் எழுப்புகிறோம். எங்கள் குரல் தொடர்ந்து ஒலிக்கும்" என்று முடித்தார் ரேவதி.

`அம்மா' சங்கம்

சர்ச்சைக்குரிய பேட்டி குறித்து `அம்மா' சங்கத்தின் பொதுச் செயலாளர் இடவேளா பாபுவிடம் பேசினோம். ``அந்தப் பேட்டியில் யாரையும் குற்றம் சாட்டும் எண்ணத்துடன் நான் பேசவில்லை. `ட்வென்டி : 20' படம் பற்றி என்னிடம் கேட்டார்கள். அந்தப் படத்தில், பாதிக்கப்பட்ட நடிகையின் கதாபாத்திரம் இறந்துபோவதுபோல் முடிந்திருக்கும். எனவேதான், அப்படிச் சொன்னேன். ஆனால், என் பேட்டியை சிலர் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர். `அம்மா' சங்க நடவடிக்கைகள் குறித்து சில நடிகைகள் புகார் கூறுகிறார்கள். ஆனால், சங்கத்தின் விதிப்படியே நாங்கள் செயல்படுகிறோம்.

அந்த நடிகை பாதிக்கப்பட்ட விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. அதனால், மேற்கொண்டு அந்த விஷயம் குறித்து எதுவும் பேசக்கூடாது. பெண்கள் அமைப்பைச் சேர்ந்த சில நடிகைகள்தான் எங்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர். மற்ற பெருவாரியான நடிகர், நடிகைகள் யாருமே குற்றம் சாட்டுவதில்லையே. இந்த விவகாரம் குறித்து இதற்கு மேல் பேச விருப்பப்படவில்லை. எங்கள் சங்கம் ஒன்றுகூடி உரிய முடிவுகள் எடுக்கும்" என்று முடித்தார்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/actress-revathi-speaks-about-edavela-babus-comment-on-bhavana-and-amma

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக