Ad

செவ்வாய், 20 அக்டோபர், 2020

கடலூர்: நெய்வேலி என்.எல்.சி-யில் மீண்டும் விபத்து! - படுகாயமடைந்த தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில், அனல்மின் நிலையம் – I மற்றும் விரிவாக்கம், அனல்மின் நிலையம் – II மற்றும் விரிவாக்கம், என்.என்.டி.பி என 5 அனல்மின் நிலையங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இதில், நிரந்தரம் மற்றும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இரண்டாவது அனல்மின் நிலையத்தில் மட்டும் நாளொன்றுக்கு 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

நெய்வேலி என்.எல்.சி நிறுவனம்

7 யூனிட்டுகள் கொண்ட இந்தப் பிரிவில் சுமார் 3,000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த மே மாதம் 7-ம் தேதி 6-வது யூனிட்டில் உள்ள கொதிகலனுக்குள் நிலக்கரியை அனுப்பும்போது பாய்லர் வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட தீ விபத்தில் 8 தொழிலாளர்கள் படுகாயமடைந்த நிலையில், 5 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். பாதுகாப்பு விஷயத்தில் என்.எல்.சி நிர்வாகம் காட்டிய அலட்சியம்தான் தொழிலாளர்களின் உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று அப்போது குற்றம் சுமத்தின தொழிற்சங்கங்கள்.

அந்த சோகம் மறைவதற்கு முன்பே கடந்த 1-ம் தேதி மீண்டும் அதே இடத்தில் அதேபோன்று 5-வது யூனிட்டில் கொதிகலன் வெடித்துச் சிதறியதில் சம்பவ இடத்திலேயே பத்மநாபன்(28), அருண்குமார்(27), வெங்கடேசபெருமாள்(28), சிலம்பரசன்(28), ராமநாதன்(48), நாகராஜ் உள்ளிட்ட 6 பேர் உடல் சிதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களை தொடர்ந்து சிகிச்சையில் இருந்த 10 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

Also Read: நெய்வேலி: `தொடரும் விபத்துகள்; 5 கோடி அபராதம்!’ - தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி

இந்த விபத்து குறித்து என்.டி.பி.சி.யின் ஓய்வு பெற்ற தொழில்நுட்ப இயக்குநர் மொகாபத்ரா தலைமையில் உயர் மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. அதேபோல என்.எல்.சியின் உள்கட்ட அமைப்புக்கள் குறித்து ஆய்வு செய்ய என்.எல்.சி மின்சார இயக்குநர் தலைமையில் மூத்த நிர்வாகிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஆனால் விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே மத்திய நிலக்கரி அமைச்சகம் என்எல்சி-யின் மின்சார இயக்குநரைக் கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

நெய்வேலி

இந்நிலையில் இன்று அனல்மின் நிலையம் II விரிவாக்க வளாகத்தில், கொதிகலனில் இருந்து வரும் சாம்பலை அப்புறப்படுத்தும் பணியில் முதனை கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி சிவசுப்பிரமணியன் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கிருந்த சுடுமண் குழாயின் வால்வு திறக்காததோடு, பயங்கர சத்தத்துடன் வெடித்ததாகக் கூறப்படுகிறது. அதில் முகம் மற்றும் வயிற்றுப் பகுதியில் பயங்கர தீக்காயங்கள் ஏற்பட்டு தொழிலாளி சுப்பிரமணியன் கீழே விழுந்திருக்கிறார். மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த அவர், மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.



source https://www.vikatan.com/news/general-news/accident-in-neyveli-nlc-thermal-power-plant

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக