டெல்லியின் தென் பகுதியில் வயதான தம்பதியினரால் நடத்தப்படும் ஒரு சிறிய உணவகம், கொரோனா காலத்தில் பெரும் நெருக்கடியை சந்தித்தது. ஆனாலும் தொடர்ந்து அவர்கள் நடத்திய வாழ்வாதார போராட்டம், இன்று பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நிறுவனங்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் அவர்களுக்கு, உதவிட வைத்துள்ளது.
நெட்டிசன் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்து, இந்த வீடியோ என்னுடைய இதயத்தை உண்மையாகவே உடைத்து விட்டது, டெல்லிவாழ் மக்கள் தயவுசெய்து இந்த பாபாவின் உணவகத்தில் சென்று உணவருந்துங்கள் என்று கூறியிருந்தார்.
நேற்று முந்தினம்இரவில் இவர் செய்த இந்த ஒற்றை ட்வீட் மூலம், நேற்றூ காலையில் வீடியோவில் உள்ள வயதான தம்பதியினரின் உணவகத்திற்கு ஏராளமான உதவிகள் கிடைத்து வருகின்றன.
வீடியோவில், ஆரஞ்சு நிற டி-ஷர்டுடன், முகக்கவசம் அணிந்த காந்தாபிரசாத்(வயது 80) என்ற முதியவரும், அவரது மனைவியும் தங்கள் வீட்டுமுறை உணவகத்தில் இருந்து, தங்களுடைய உணவகம் பற்றியும், கொரோனாவால் தாங்கள் நடத்தும் போராட்டம் குறித்தும் பேசுகின்றனர்.
காந்தா பிரசாத், மற்றும் அவரது மனைவியும் காலை 6.30 மணிக்கு சமைக்கத் தொடங்குவதாகவும், அன்றைய காலை 9.30 மணிக்கு பருப்பு வகைகள், கறிகள், ரொட்டிகள் மற்றும் அரிசி சாதம் ஆகிய உணவுடன் தங்கள் உணவகம் செயல்பட துவங்குவதாகவும் கூறுகின்றனர். இவ்வுணவுகள் ஒரு தட்டில் ரூபாய் 30 முதல் 50 வரை விற்பனை செய்வதாகவும் கூறுகின்றனர்.
பின் வீடியோ எடுப்பவர் இன்று இவ்வளவு நேரம் வரை எவ்வளவு சம்பாதித்தீர்கள் என்று கேட்கிற பொழுது, முதியவர் உடைந்து அழும் குரலுடன், நடுங்கும் கைகளில் நான்கைந்து 10 ரூபாய் தாள்களை எடுத்து காட்டுகிறார். நான்கு மணி நேரத்தில் இவர்கள் சம்பாதித்தது வெறும் 50 ரூபாய் மட்டுமே.
மேலும் முதியவர் காந்தாப்ரசாத் கூறுகையில், ``கொரோனா பெருந்தொற்றுக்கு முன், அடுத்த நாளுக்கான வருமானம் மட்டுமாவது கிடைத்து வந்தது, ஆனால் கொரானாவுக்குப் பின் இந்த சிறிய உணவகம் பெரும் துன்பத்திற்கு ஆளானது. நாங்கள் வாழ்க்கையில் பெரும் போராட்டம் நடத்தி வருகிறோம்” என்றார். இத்தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் முதிய தம்பதியினர் இவர்களிடம் இருந்து எந்த உதவியும் பெறுவது இல்லை.
இரவில் பகிரப்பட்ட இந்த வீடியோ சில மணி நேரங்களில் சமூக வலைத்தளங்களில் மிக பெரிய அளவில் வைரல் ஆகியுள்ளது. சமூக வலைதளம் மூலம் இந்த வீடியோவை பார்த்தவர்கள், முதிய தம்பதியினரின் கண்ணீரை துடைத்து வருகின்றனர்.
காலை முதல் பாபாவின் உணவகம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், நடிகர், நடிகைகள் முதற்கொண்டு சாமானிய மக்கள் வரை இம்முதிய தம்பதியினரின் உணவகத்திற்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு தெரிவித்தும் பொருள் மற்றும், நிதி உதவிகளும் அளித்தும் வருகின்றனர். மேலும் பலர் மதிய உணவுக்கு புதிய ஆர்டர்களை வழங்கியுள்ளனர்.
இந்த முதிய தம்பதிக்காக ட்வீட் செய்தவர்களில் நடிகர் சோனம் கபூர், கிரிக்கெட் வீரர் ஆர். அஸ்வின், ஐபிஎல் அணி டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் உணவு விநியோக பயன்பாடு ஜொமாடோ ஆகியவை முக்கியமானவர்கள்.
இந்நிலையில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட கெளரவ் வாசன், ``நேற்றிரவு(நேற்று முந்தினம்) நான் அவர்களின் உணவகத்திற்கு சென்று இருந்தேன், அவர்களின் நிலையையும், போராட்டத்தையும் கண்டு நான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். அதனால் தான் வீடியோ பதிவிட்டேன். தற்போது இவர்களை பார்க்கையில் டெல்லியில் உள்ள வேறு எந்த உணவகத்தையும் விட, பாபாவின் உணவகத்துக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் வருவார்கள் என்று நான் நம்புகிறேன். பணத்தைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் இந்த வாரம் பாபாவுக்கு கூடுதலாக ஒரு பணியாளர் தேவைப்படுவார்” என்று தெரிவித்தார்.
மேலும் உதவிகள் சேர்ந்த பின் மற்றொரு வீடியோவில் காந்தா பிரசாத், `நாங்கள் தற்போது மிக நம்பிக்கையுடன் உணர்கிறோம், தற்போது எங்கள் உணவகத்திற்கு நிறைய மக்கள் வருகின்றனர். நாங்கள் பொது மக்களுக்கு மிகவும் நன்றி கடன் பட்டிருக்கோம்” என்றார். அவர் மனைவி பாதாமி தேவி கூறுகையில், `ஊரடங்கு காரணமாக நாங்கள் மிக கடினமான நிலைமையில் இருந்தோம், தற்போது மக்கள் வெள்ளத்தில் மிதக்கிறோம். எங்களுக்கு உதவி புரிந்த மக்கள் அனைவருக்கும் எங்களுடைய ஆசீர்வாதங்களை தெரிவித்து கொள்கிறோம்” என்றார். தொடர்ந்து காந்தா பிரசாத், `இதுபோன்று நான் மட்டுமில்லை, என்னை போன்று ஊரடங்கால் வருமானத்தை இழந்த பலர் உள்ளனர்' என்ற வரிகளையும் முன் வைக்கிறார்.
source https://www.vikatan.com/news/general-news/old-couple-got-help-because-of-a-twitter-post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக