புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே தொண்டமான் ஊரணியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி சரிதா, போலியோவால் பாதிக்கப்பட்டவர். கணவருக்கு ஊரடங்கால் வேலை இல்லாமல் போக, மகன், மகள் என இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு சாப்பாட்டுக்கே திண்டாடிக்கொண்டிருந்தார். அவரை பற்றி, 'பழுதாபோன மூணு சக்கர சைக்கிள சரி பண்ணக்கூட வழியில்ல!'' - மாற்றுத்திறனாளி சரிதாவின் சோகம்' என்ற தலைப்பில் விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
சரிதாவின் நிலையறிந்து நெக்குருகிப்போன விகடன் வாசகர்கள் அவருக்கு உதவி செய்ய முன்வந்தனர். சரிதாவின் வங்கிக் கணக்குக்கு தங்களால் இயன்ற பணத்தை வாசகர்கள் அனுப்பிவைக்க, அவருக்கு இப்போது ரூ.2,08,000 கிடைத்தள்ளது. இந்தத் தொகை சரிதாவின் வீட்டைப் புதுப்பிக்க உதவியதோடு, அவருக்கு வாழ்வாதார உதவிகளையும் செய்து கொடுத்திருக்கிறது. சரிதாவின் குடும்பமே நெகிழ்ச்சியில் உள்ளது.
சரிதாவிடம் பேசினோம்.
''கல்யாணம் கட்டிக்கிட்டு வந்து 15 வருஷம் ஆச்சு. எத்தனையோ கஷ்டங்களை எல்லாம் சமாளிச்சு வந்துட்டோம். ஆனா, இந்தக் கொரோனா ஊரடங்கு ரொம்பவே கஷ்டத்தைக் கொடுத்திடுச்சு. அவருக்கு வேலையில்லை. சாப்பாட்டுக்கே திண்டாட்டமாகிருச்சு. ஒரு நாள் சாப்பாட்டுக்குக்கூட வழி தொலைஞ்சு போன நிலையில இருந்தேன். அந்த நேரம் விகடன் வெளியிட்ட செய்தியால, எங்கெங்கோ இருந்து முகம் தெரியாதவங்க அனுப்பின பண உதவியால, இன்னைக்கு மூணு மாசத்துக்குத் தேவையான மளிகைப் பொருள் வீட்டுல இருக்கு.
நான் பிறந்ததிலிருந்தே குடியிருக்கச் சரியான வீடு இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டவ.
புகுந்த வீட்டுக்கு வந்த நேரத்துல ஆண்டவன் புண்ணியத்துல கவர்ன்மென்ட் வீடு வந்துச்சு. மேற்கொண்டு போட்டுக் கட்ட பணம் இல்லை. கழிப்பறை கட்டமுடியலை. திறந்தவெளி கழிப்பறைதான். பிள்ளைங்க சைக்கிள்ல வெச்சு என்னை அங்க தள்ளிட்டுப் போவாங்க. வாசல்லதான் அடுப்படி. மழை, வெயிலுக்கு ரொம்பவே சிரமமா இருக்கும். அடுப்படியையும் கழிப்பறையையும் எடுத்துக் கட்டிருவோம்னு பல வருஷமா போராடினேன். ஆனா, முடியாம போயிருச்சு.
கான்கிரீட்டிலிருந்தும் மழை நீர் கசிஞ்சிக்கிட்டு இருக்குது, இன்னும் கொஞ்ச நாள்ல குடியிருக்கவே வீடு இருக்காதுன்னுதான் நெனச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, இன்னைக்கு எல்லாமே மாறியிருக்கு. அடுப்படி கட்டியாச்சு. மாடிப்படி சீரமைச்சுட்டோம். தண்ணீர் கசியாம இருக்க மாடியில யானையடிக்கல்லும் போட்டுட்டோம். எங்க வீடு அப்படியே மாறிப்போச்சு.
கழிப்பறையும் கட்டிக்கிட்டு இருக்கோம். எங்க வீட்டை மறுபடியும் எடுத்துக் கட்டுவேன்னு நான் கனவுலகூட நெனச்சுப் பார்க்கலை. முகம் தெரியாதவங்களோட உதவியால எங்க தேவையெல்லாம் நிறைவேறிருச்சு.
புகுந்த வீட்டுக்கு வரும்போது நான் பெருசா எந்த சீதனமும் எடுத்துக்கிட்டு வரலை. விகடன் மூலமா எனக்குக் கிடைச்ச இந்த உதவிகளை பொறந்தவீட்டு சீதனமாத்தான் பார்க்கிறேன். நான் பெட்டிக்கடை வைக்கிறதுக்கும் ஏற்பாடுகள் நடந்துக்கிட்டு இருக்கு. அதை வெச்சு பிள்ளைகளை படிக்கவெச்சு கரை சேர்த்திடுவேன்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் நேரடியாக வந்து சாப்பாட்டுக்கு உதவி செஞ்சிட்டு, மாத உதவித்தொகை 1,500 ரூபாய் கிடைக்க வழி செஞ்சிருக்காங்க. அதோட, ஸ்கூட்டிக்கும் லோனுக்கும் உடனே ஏற்பாடு செஞ்சு கொடுக்கிறதா சொல்லியிருக்காங்க. என் வாழ்க்கையவே மேடேத்திவிட்ட விகடனையும் விகடன் வாசகர்களையும் காலம் உள்ள வரைக்கும் மறக்கமாட்டேன்" என்றார் உருக்கமாக.
source https://www.vikatan.com/news/common/vikatan-readers-helped-pudukkottai-woman-saritha-to-rebuilt-her-home
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக