Ad

வெள்ளி, 9 அக்டோபர், 2020

தூத்துக்குடி: `உங்க கடையில எதுவும் சரியில்லை!’ - சிக்கிய போலி உணவு பாதுகாப்பு அதிகாரி

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பஜார் பகுதியில் கடந்த 2-ம் தேதி மாலை காரில் வந்த டிப்டாப் இளைஞர் ஒருவர், தன்னை மத்திய உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் எனச் சொல்லி, உணவு பாதுகாப்புத்துறையிடம் லைசென்ஸ் பெற்றிருக்கிறார்களா, உணவு பாதுகாப்புச் சட்டத்தைப் பின்பற்றி வருகிறார்களா என்பதை அறியவும், உணவுப் பொருள்களின் தரம் குறித்து ஆய்வு செய்யவும் வந்திருப்பதாகக் கூறியிருக்கிறார். கடைகளின் தரத்துக்கு ஏற்ப ரூ.500 முதல் ரூ.2,000 வரை வசூலித்திருக்கிறார். `அரசு விடுமுறையான காந்தி ஜயந்தி நாளன்று ஆய்வுக்கு வந்திருக்கிறீர்களே?’ என்று சில வணிகர்கள் கேள்வி எழுப்ப, மழுப்பலாக பதில் கூறியிருக்கிறார். அடுத்த சில நிமிடங்களில் அங்கிருந்து கிளம்பிச் சென்றிருக்கிறார். இதையடுத்து, அபராதமாகக் கேட்கப்பட்ட பணத்தைக் கொடுத்து ஏமாந்த வியாபாரிகள், எட்டயபுரம் வர்த்தக சங்க நிர்வாகிகளுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

எட்டயபுரம் பேருந்து நிலையம், மேலவாசல், நடுவிற்பட்டி ஆகிய பகுதிகளிலுள்ள டீக்கடைகள், பேக்கரிகள், மளிகைக்கடைகள், ஹோட்டல்கள், பெட்டிக்கடைகளில் அவர் ஆய்வு செய்திருக்கிறார். ஒவ்வொரு கடைக்கும் சென்று, `உணவு பாதுகாப்புத்துறை சான்றிதழ் இருக்கிறதா?’, `உணவுப் பொருள்கள் தரமாக இருக்கின்றனவா...’ என்று அதிகார தொனியில் பேசியிருக்கிறார். சில கடைகளில், ``பொருள்கள் தரமில்லை. இந்த ஒரு முறை மன்னித்துவிடுகிறேன். இனி இது போன்ற தவறு நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று எச்சரித்திருக்கிறார்.

விசாரணை செய்த அதிகாரிகள்

இதையெடுத்து சங்க நிர்வாகிகள், சில கடைகளில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை எடுத்து, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலரிடம் கொடுத்திருக்கிறார்கள். சிசிடிவி காட்சிகளைப் பார்த்த பிறகு, ``வசூலில் ஈடுபட்ட இளைஞர் உணவு பாதுகாப்புத்துறை அலுவலரே கிடையாது’’ என அதிகாரிகள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். போலி அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அதிகாரிகள் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்தநிலையில், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியில் சுற்றித்திரிந்த அந்த இளைஞரை மடக்கிப்பிடித்தனர். வசூலுக்குப் பயன்படுத்திய காரைப் பறிமுதல் செய்ததுடன், எட்டயபுரம் பகுதிக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில், ``என் பெயர் கார்த்திகேயன். சிங்கம்புணரியில் மெடிக்கல் நடத்திட்டு வர்றேன். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதிதான் என்னோட பூர்வீகம். என் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் பணம் தேவைப்பட்டதால், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எனச் சொல்லி, ரெய்டு நடத்தி, வசூல் செய்தேன்’’ என்று கூறியிருக்கிறார்.

``அந்தப் பையன் நடந்து வந்தவிதம், பேச்சு எல்லாத்தையும் பார்த்து அதிகாரினு நினைச்சுட்டோம். டீக்கடையில் டீ கேட்டார்.

சிக்கிய போலி அதிகாரி கார்த்திகேயன்

டீயைக் குடிக்காமல் கிளாஸைப் பார்த்தபடியே, `இது என்ன டீயா?’ எனக் கோபமாகப் பேசினார். ஹோட்டல்களுக்குச் சென்று சமையலறை வரை போனார். `கடை முன்னால என்ன குப்பை தேங்கிக்கிடக்கு...’ என்று பெட்டிக்கடைகளில் வசூலை நடத்தினார். `கொரோனா டைம்ல சர்டிஃபிகேட் ரெனிவல் செய்யாததுனால மன்னிச்சுவிடுறேன்’ எனப் பேசினார். சில வியாபாரிகள் மன்னிப்பெல்லாம் கேட்டார்கள். ஆனால், சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்த கடைக்காரர்களிடம் மட்டும் அதிகமாகப் பேசாமல் நகர்ந்தார். அபராதம் கட்டினாலும் ரசீதே இல்லாம ஏமாந்துட்டோம். 15,000 முதல் 20,000 ரூபாய் வரை கடைகளில் வசூல் செஞ்சிருப்பார். நல்லவேளை கார் நம்பரை குறிச்சிவெச்சோம்” என்றனர் வியாபாரிகள்.

இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் பேசினோம். ``போலி அதிகாரியாக வலம்வந்த கார்த்திகேயனிடம் விசாரணை நடத்தியதில் தவற்றை ஒப்புக்கொண்டார். இதற்காகப் பயன்படுத்திய கார், போர்டை பறிமுதல் செய்திருக்கிறோம். அவர் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் 2006, பிரிவு 62-ன் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சார்ஜ் சீட் தயார் செய்திருக்கிறோம்.

விசாரணை செய்த அதிகாரிகள்

கோவில்பட்டி நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தவிருக்கிறோம். அவருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வாய்ப்பிருக்கிறது” என்றனர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எனக் கூறி வியாபாரிகளை ஏமாற்றி, இளைஞர் ஒருவர் வசூல் வேட்டை நடத்திய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/a-fake-officer-was-caught-in-raiding-shops-in-thoothukudi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக