Ad

சனி, 17 அக்டோபர், 2020

`குடும்பத்தின் நிலையை எண்ணிப் பாருங்கள்!’ ராணுவ வீரர்களின் அன்பான பேச்சு; சரணடைந்த தீவிரவாதி

இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீரில் நடந்த சம்பவம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோவில், 20 வயது மதிக்கத்தக்க தீவிரவாதி ஒருவர், பாதுகாப்புப் படையினர் பேசிய அன்பான பேச்சால், மனம் மாறி சரணடைந்தார். அவரிடமிருந்து ஏ.கே 47 உள்ளிட்ட துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளது.

வீடியோவில், பாதுகாப்பு கவசங்கள் அணிந்து, கையில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படை வீரர் ஒருவர், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது மறைவிடத்தில் மறைந்து இருந்த ஜஹாங்கீர் பட் எனும் தீவிரவாதியிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர் சில நொடிகளில் ஜஹாங்கீர், கைகளைத் தூக்கியபடியே வந்து ராணுவ வீரர்களிடம் சரணடையும் காட்சி இடம்பெற்றிருக்கிறது.

இந்திய ராணுவம்

``ஜஹாங்கீர், உங்களுக்கு எதுவும் ஆகாது. யாரும் உங்களை சுட மாட்டார்கள், உங்கள் ஆயுதங்களை போட்டுவிட்டு சரணடையுங்கள். நீங்கள் மறைந்திருக்கும் இந்த இடத்தை நாங்கள் சுற்றி வளைத்துள்ளோம்.

உங்கள் குடும்பத்தின் நிலையை எண்ணிப் பாருங்கள். கடவுளை நினைத்து எங்களிடம் சரணடையுங்கள். எங்கள் பக்கம் வாருங்கள்" என்று ராணுவ வீரர்கள் கூற, தன் மறைவிடத்தில் இருந்து வெளியே வந்த ஜஹாங்கீர், இந்திய ராணுவத்திடம் அமைதியாக வந்து சரணடைந்தார்.

சரணடைந்த ஜாஹாங்கீரிடம், ``உங்களுக்கு ஒன்றும் நடக்காது ஜஹாங்கீர். அவருக்கு குடிக்கத் தண்ணீர் கொடுங்கள்" என்கிறார் இந்திய ராணுவ வீரர் ஒருவர். அதைத்தொடர்ந்து, ராணுவத்தால் வெளியிடப்பட்ட மற்றொரு வீடியோ பதிவில், ஜஹாங்கீரின் தந்தை, தனது மகனைக் காப்பாற்றியதற்காகப் பாதுகாப்புப் படையினருக்கு நன்றி தெரிவிக்கிறார்.

Also Read: `44 பாலங்கள் திறப்பு; ஒரே ஆண்டில் 102 பாலங்கள்!’ - எல்லைப் போக்குவரத்தை வலுப்படுத்தும் ராணுவம்

நன்றி தெரிவித்து கண்ணீர் மல்க நின்ற அவரது தந்தையிடம், ``உங்கள் மகன் நல்ல காரியத்தை செய்துள்ளார். அவரது கடந்தகால தவறுகள் அனைத்தும் மறக்கப்படும். மீண்டும் தயவுசெய்து அவரைத் தீவிரவாதிகளிடம் செல்லவிடாதீர்கள்" என்று இந்திய ராணுவ வீரர்கள் கூறுகிறார்கள்.

இச்சம்பவம் குறித்து பேசிய லெப்டினென்ட் ஜெனரல் பி.எஸ்.ராஜு, ``ராணுவப் படைகள் அவர் உயிரை காப்பாற்றி, அழைத்து வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்றார்.

இது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``அக்டோபர் 13 ம் தேதி, சிறப்புக் காவல்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். அன்றைய தினம் முதல் ஜஹாங்கீர் பட் தலைமறைவாகினார். ஜஹாங்கீரைக் கண்டுபிடிக்க அவரது குடும்பத்தினர் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. ராணுவத்தின் கூட்டு நடவடிக்கையில், ஜஹாங்கீர் சுற்றி வளைக்கப்பட்டார். இந்திய ராணுவம், அவரை சரணடைய வைக்க முயற்சி எடுத்தது. அவரும் சரணடைந்தார்.

சரணடைந்த தீவிரவாதி

ஜஹாங்கீரின் தந்தை அந்த இடத்தில் இருந்தார். இளைஞர்களைத் தீவிரவாதிகளிடமிருந்து மீட்கும் முயற்சி பலனளித்துள்ளது. பயங்கரவாத ஆட்சேர்ப்பைத் தடுக்க இந்திய ராணுவம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட மோதலின்போது, ​​ஜம்மு-காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தின் கிலூரா கிராமத்தில் ஒரு தீவிரவாதி சரணடைந்தார். இருப்பினும், அவரது கூட்டாளிகள் 4 பேர் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டனர்.



source https://www.vikatan.com/news/india/indian-army-officer-convinces-terrorist-to-surrender

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக