Ad

வியாழன், 1 அக்டோபர், 2020

`ஆலோசகர் மூலம் பரவியதா?’ - அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மெலனியாவுக்கு கொரோனா பாசிட்டிவ்!

உலக அளவில் கொரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் 3.44 கோடி பேர் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில், 2.56 கோடி பேர் குணமடைந்தநிலையில், 10.27 லட்சம் பேர் உயிரிழந்தனர். தொற்று பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அங்கு 70 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில், 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகியிருக்கிறார்கள்.

டொனால்ட் ட்ரம்ப் - ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நிர்வாகம் கொரோனா பேரிடரை மோசமாகக் கையாள்வதாகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ட்ரம்ப் - ஜோ பைடன் இடையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான முதல் நேரடி விவாதத்தில் கொரோனா விவகாரம் பிரதானமானதாக இருந்தது. கொரோனா விவகாரத்தில் ட்ரம்பை நேரடியாகவே ஜோ பைடன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

Also Read: 10 வருடங்களாக வருமான வரி செலுத்தாத ட்ரம்ப்... நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட ஷாக் தகவல்!

இந்தநிலையில், அதிபர் ட்ரம்பின் உயர்மட்ட ஆலோசகரான ஹோப் ஹிக்ஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கிளைவ்லேண்டில் நடந்த அதிபர் தேர்தல் விவாதத்தின்போது ட்ரம்புடன் ஹோப் ஹிக்ஸும் கலந்துகொண்டிருந்தார்.

ட்ரம்பின் ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ்

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த ட்ரம்ப், ``இடைவெளி எதுவும் எடுக்காமல் கடுமையாக உழைத்துக்கொண்டிருந்த ஹோப் ஹிக்ஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால், எனக்கும், எனது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. எங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருக்கிறோம்’’என்று பதிவிட்டிருந்தார்.

Also Read: `ரஷ்ய அதிபரின் கைப்பாவை... புத்திசாலி இல்லை!'- அனல்பறந்த ட்ரம்ப் - ஜோ பைடன் நேரடி விவாதம்

சிறிதுநேரத்தில், தனக்கும் மெலனியாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக ட்ரம்ப் அறிவித்தார். ``எனக்கும், மெலனியாவுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. உடனடியாக எங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு அதற்கான சிகிச்சைகளை எடுக்கத் தொடங்கியிருக்கிறோம். இதிலிருந்து இருவரும் ஒன்றாக இணைந்தே மீண்டுவருவோம்’’ என்று ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - மெலனியா ட்ரம்ப்

74 வயதான ட்ரம்புக்கு வெள்ளைமாளிகையில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்படும் என்று அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உலக அளவில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரேசில் அதிபர் பொல்சரோனா உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பின்னர் அதிலிருந்து மீண்டனர்.



source https://www.vikatan.com/government-and-politics/international/us-president-trump-first-lady-melania-trump-tested-covid-positive

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக