உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயது மாணவி பட்டியலின இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் குடும்பத்தினரை அரசியல் கட்சித் தலைவர்களும் ஊடகத்தினரும் சந்திக்க 2 நாள்களாக அனுமதி மறுக்கப்பட்டது.
Also Read: ஹத்ராஸ் சம்பவம்: `செய்தியாளரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதா?' - ஆடியோவால் புதிய சர்ச்சை
தடையை மீறி ஹத்ராஸ் செல்ல முயன்ற காங்கிரஸின் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அதேபோல், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெரிக் ஓ பிரையன் உள்ளிட்டோரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். போலீஸார் அத்துமீறி அவர்களைத் தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்க அரசியல் கட்சியினருக்கும் ஊடகத்தினருக்கும் உ.பி அரசு அனுமதியளிக்க வேண்டும் என பா.ஜ.க மூத்த தலைவரும் மத்தியப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான உமா பாரதி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ட்விட்டர் வழியாக அறிவுரை வழங்கியிருக்கிறார்.
`ஹத்ராஸில் நடைபெற்ற சம்பவங்களும் உ.பி போலீஸாரின் மர்மமான நடவடிக்கைகளும் தங்களது ஆட்சிக்கும் பாரதிய ஐனதா கட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஊடகத்தினரும் சந்திக்க அனுமதி கொடுங்கள். நான் தங்களை விட வயதில் மூத்தவர். எனவே, தங்களது மூத்த சகோதரியாகக் கருதி இக்கோரிக்கையினை கருத்தில் கொள்ள வேண்டும்'' என்று உமாபாரதி ட்விட்டரில் வலியுறுத்தியிருக்கிறார்.
Also Read: `ஹத்ராஸ் இளம்பெண்ணுக்கு நீதி வேண்டும்!'- கட்டுப்பாடுகளை மீறி டெல்லியில் வெடித்த பெரும் போராட்டம்
கொரோனா பாதிப்பால் ரிஷிகேஷிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தாம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நல்ல உடல்நிலையில் இருந்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக தாம் கூடவே இருந்திருப்பேன் என்றும் உமா பாரதி குறிப்பிட்டிருக்கிறார். கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்டபின்னர், ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்திப்பேன் என்றும் அவர் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
மேலும்,``அவர்களைச் சந்திக்க வரும் எதிர்கட்சித் தலைவர்களையும் ஊடகத்தினர் மீதும் தடை விதித்தும், மீறி வருபவர்கள்மீது அடக்குமுறையைக் கையாள்வதும் சரியன்று. ஆகவே, அந்தக் குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதியளிக்க வேண்டும்'' என்றும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ட்விட்டர் வாயிலாக உமா பாரதி கோரிக்கை விடுத்திருக்கிறார். விசாரணைக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காகவும் சட்டம் ஒழுங்கு காரணங்களுக்காகவும் ஊடகங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நுழைவதற்கான தடை அமலிலுள்ளது என்று மாவட்ட துணை சூப்பிரண்டு பிரகாஷ் குமார் கூறியிருந்தார்.
இந்தநிலையில், ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ஊடகத்தினர் சந்திக்க இரண்டு நாள்களுக்குப் பின்னர் மாவட்ட நிர்வாகம் இன்று அனுமதியளித்தது. அதேநேரம், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
source https://www.vikatan.com/news/politics/hathras-case-uma-bhartis-advice-to-up-cm-yogi-yogi-adityanath
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக