Ad

வெள்ளி, 9 அக்டோபர், 2020

வெல்வெட் ஷாம்பும், நிவாரண் 90-யும் சந்தையை வென்றது எப்படி? - சி.கே.ராஜ்குமாரின் கதை!

பிசினஸில் நிறைய சாதிக்க வேண்டும் என்று துடிப்போடு செயல்பட்டு, ஓரளவுக்கு சாதிக்கவும் செய்துவிட்டு, தற்போது உலகை விட்டு மறைந்திருக்கிறார் டாக்டர் சி.கே.ராஜ்குமார்.

1990-களில் வெல்வெட் ஷாம்ப்பும் நிவாரண் 90-யும் பயன்படுத்தாதவர்கள் தமிழகத்தில் இருக்க முடியாது. இதுமாதிரியான பல புதுமையான புராடக்டுகளைத் தயாரித்துத் தந்த சி.கே.ராஜ்குமாரின் பிசினஸ் வாழ்க்கை சவால்கள் நிறைந்தது.

சின்னிகிருஷ்ணனின் மகன்

கடந்த நூற்றாண்டில் உலகத்தையே மாற்றியமைத்த புத்தாக்கங்களில் முக்கியமானது சாஷே பேக்கிங் தொழில்நுட்பம். இந்த சாஷே தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியவர் கடலூரைச் சேர்ந்த சின்னிகிருஷ்ணன். அந்த சாஷே தொழில்நுட்பத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்ற பெருமை கொண்டவர் சின்னகிருஷ்ணனின் மகனான சி.கே.ராஜ்குமார். இவருடைய சகோதரர்கள்தாம் கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் சி.கே.ரங்கநாதனும், நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் சி.கே.குமரவேலும்.

டாக்டர் படித்தவர்...

கடலூரில் பள்ளிப்படிப்பை படித்து முடித்த சி.கே.ராஜ்குமார், பிற்பாடு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்தார். மருத்துவம் படித்திருந்தாலும் அவர் மருத்துவர் தொழிலுக்குச் செல்லவில்லை. தன் தந்தை சின்னிகிருஷ்ணன் எதிர்பாராத விதமாக இளமைப் பருவத்திலேயே இறந்ததால், சாஷே தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து, அவர் தொடங்கி இருந்த தொழிலை தொடர்ந்து நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

C.K.Rajkumar with his brothers C.K.Ranganathan and C.K.Kumaravel

கைகொடுத்த காத்ரேஜ் நெட்வொர்க்

டாக்டருக்கு முடித்த கையோடு வெல்வெட் ஷாம்பு தயாரிக்கும் வேலையில் இறங்கினார். புதுமையான சாஷே தொழில்நுட்பத்தில் 1 ரூபாயில் வெல்வெட் ஷாம்பு விற்பனை செய்யப்பட்டதால், பலரும் வாங்கத் தொடங்கினர். ஆரம்பத்தில் கடலூரில் மட்டும் விற்பனை செய்யப்பட்டுவந்த வெல்வெட் ஷாம்பு, மெல்ல மெல்ல சுற்றியுள்ள மாவட்டங்களிலும் பிரபலமடையத் தொடங்கியது.

இப்படிப் புகழ்பெற்று வந்த வெல்வெட் ஷாம்பு காத்ரேஜ் நிறுவனத்தின் கண்ணில் பட்டது. இந்த ஷாம்பை தன்னுடைய மார்க்கெட்டிங் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி, இந்தியா முழுக்கக் கொண்டு செல்ல உதவத் தயார் என்றது காத்ரேஜ் நிறுவனம். தமிழகத்தின் சில மாவட்டங்களில் மட்டுமே தெரிந்த வெல்வெட் ஷாம்பு இந்தியா முழுக்கத் தெரிந்தது அந்தச் சமயத்தில்தான்.

இந்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் ராஜ்குமார். சில ஆண்டுகளுக்குப் பிறகு காத்ரேஜ் நிறுவனம் வெல்வெட் ஷாம்பை மார்க்கெட்டிங் செய்வதை நிறுத்திக்கொண்டபோதும், அதிலிருந்து கிடைத்த அனுபவத்தைக் கொண்டு, தொழிலை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்லத் தொடங்கினார்.

1994-ம் ஆண்டு தமிழகத்தில் ஷாம்பு சந்தையில் வெல்வெட் ஷாம்பின் பங்கு மட்டும் 18 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருந்தது. ஒரு நாளைக்கு 50,000 லிட்டர் ஷாம்புவைத் தயாரிக்கும் உற்பத்தித்திறன் கொண்டிருந்தாலும், தினமும் 10,000 லிட்டர் வரை ஷாம்பு தயாரித்தார் அவர். புதுமையான மார்க்கெட்டிங் உத்தி மூலம் 1,200 டிஸ்ட்ரிபியூட்டர்களை நியமிக்கும் திட்டத்தையும் தீட்டினார்.

ஆனால், சிறுதொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசாங்கம் அளித்து வந்த சலுகையைத் திடீரென திரும்பப் பெற, உற்பத்திச் செலவு அதிகரித்தது. இதைத் தொடர்ந்து இந்துஸ்தான் லீவர் போன்ற பெரும் நிறுவனங்கள் சாஷே தொழில்நுட்பத்தில் ஷாம்பு தயாரித்து வெளியிட, பெரியளவில் போட்டி உருவானது ராஜ்குமாருக்கு.

வெல்வெட்டுக்கு அடுத்து நிவாரண்-90

Nivaran 90

சாஷே தொழில்நுட்பத்தில் வெல்வெட் ஷாம்பு நாடு முழுக்க பிரபரலமான தயாரிப்பாக மாறிய பிறகு, அடுத்த தயாரிப்பில் இறங்கினார் ராஜ்குமார். தான் ஒரு டாக்டர் என்பதால், மருத்துவம் தொடர்பாக என்ன தயாரிப்பை வெளியிட முடியும் என்று யோசித்தார். நம் மக்களில் பலரும் அடிக்கடி இருமல் ஏற்படுவதைப் பார்த்தார் அவர். இதற்கென நிவாரண்-90 என்கிற பெயரில் ஒரு புராடக்ட்டைத் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினார். 4 எம்.எல் கொண்ட நிவாரண்-90 சாஷே 50 காசுக்கும் 8 எம்.எல் கொண்ட நிவாரண்-90 சாஷே ரூ.1-க்கும் விநியோகம் செய்தார் ராஜ்குமார். சாதாரண நிலையில் இருக்கும் ஏழை மக்கள்தாம் தன் வாடிக்கையாளர்கள் என்பதைச் சரியாக உணர்ந்து செயல்பட்டார் அவர்.

போட்டிக்கு வந்த சமஹான்

அந்தச் சமயத்தில் நிவாரண-90-க்குப் போட்டியாக வந்தது இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சமஹான். என்றாலும் சமஹானை பெரிய எதிரியாக அவர் நினைக்கவில்லை. காரணம், ஒரு பாக்கெட் சமஹான் விலை 3 ரூபாய். அதனால் குறைந்த சதவீதத்தினர் மட்டுமே இதைப் பயன்படுத்துவார்கள் என்று நினைத்தார்.

ஆனால், பிற்பாடு சமஹான் தயாரித்த இலங்கையைச் சேர்ந்த மகாராஜாவுடன் கூட்டணி சேர்ந்தார். அந்த நிறுவனத்தில் ரூ.20 லட்சத்தை முதலீடு செய்தார். இலங்கைக்கு அடுத்து மலேசியாவில் உள்ள தொழில் நிறுவனத்துடனும் கூட்டணி அமைக்கும் திட்டமும் ராஜ்குமாரிடம் இருந்தது. ஆனால், அந்தத் திட்டம் பிற்பாடு நிறைவேறாமலே போனது.

மறதிக்கு மெமரி ப்ளஸ்

நிவாரண்-90-க்குப் பிறகு மெமரி ப்ளஸ் என்கிற தயாரிப்பை அவர் உருவாக்கி விநியோகிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். ஆனால், மெமரி ப்ளஸ் தொடர்பான ஆய்வு குறித்த தகவல்களை மத்திய அரசாங்கம் கேட்டதால், அதைத் தொடர்ந்து தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மட்டுமே சுமார் 8 கோடி ரூபாய் வருமானத்தை இழந்தார் ராஜ்குமார்.

முயற்சி உடையார்

ஒரு பிசினஸ்மேனிடம் இருக்க வேண்டிய முக்கியமான குணம், தொடர்ந்து புதுமையான புராடெக்ட்டுகளை உருவாக்கிக்கொண்டே இருப்பது. அந்த வகையில் தொடர்ந்து பல புதுமைகளைச் செய்தவர் டாக்டர் சி.கே.ராஜ்குமார். தொழில் செய்து முன்னேறத் துடிக்கும் அனைவருக்கும் அவர் ஓர் உதாரணமாகவே இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.



source https://www.vikatan.com/business/news/success-story-of-ck-rajkumar-and-his-products-velvette-shampoo-and-nivaran-90

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக