Ad

வெள்ளி, 9 அக்டோபர், 2020

`முழுமனதுடன்தான் திருமணம்!' - எம்.எல்.ஏ பிரபுவின் மனைவி சவுந்தர்யா நீதிமன்றத்தில் ஆஜர்

கள்ளக்குறிச்சி அ.தி.மு.க எம்.எல்.ஏ பிரபு, தியாகதுருக்கத்தைச் சேர்ந்த கோயில் குருக்கள் சுவாமிநாதன் என்பவரின் மகள் சவுந்தர்யாவை, கடந்த 5-ம் தேதி திருமணம் செய்துகொண்டார். காதலித்துத் திருமணம் செய்துகொண்டதாக பிரபு தரப்பில் கூறப்பட்டநிலையில், தனது மகளைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துகொண்டதாக சவுந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் புகார் தெரிவித்தார். மேலும், பிரபுவின் ஆதரவாளர்கள் தனக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

குருக்கள் சுவாமிநாதன்

இந்தநிலையில், தனது மகளை மீட்டுத் தரக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சவுந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், எம்.எல்.ஏ பிரபு, சவுந்தர்யா ஆகிய இருவரையும் இன்று ஆஜர்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தனர். இந்தநிலையில், பிரபு, அவரின் மனைவி சவுந்தர்யா இருவரும் வழக்கறிஞர்களுடன் உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்பாக இன்று ஆஜராகினர்.

Also Read: `இது சரியில்லை பிரபு, எம்பொண்ணை அனுப்பிடு!’ - எம்.எல்.ஏ-விடமிருந்து மீட்டுத்தர தந்தை கோரிக்கை

அப்போது, தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும், முழுமனதுடனேயே தான் திருமணம் செய்துகொண்டதாகவும் நீதிமன்றத்தில் சவுந்தர்யா தெரிவித்தார். அதேபோல், தன்னுடைய கணவர் பிரபுவுடன் செல்லவே தான் விரும்புவதாகவும் அவர் கூறினார். இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், அவருடைய தந்தை சுவாமிநாதன் தரப்பிலும் விசாரித்தனர். அப்போது, 19 வயதுகூட நிரம்பாத தனது மகளை பிரபு கட்டாயப்படுத்தி திருமணம் செய்துகொண்டதாகவும், அவரைத் தன்னுடன் அழைத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் சுவாமிநாதன் தரப்பில் வாதிடப்பட்டது.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு

இருதரப்பினரையும் சிறிது நேரம் தனிமையில் பேசி முடிவெடுக்கும்படி நீதிபதிகள் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. சுமார் 15 நிமிடங்கள் பேசிய பிறகும், தான் கணவருடனேயே செல்ல விரும்புவதாக சவுந்தர்யா நீதிபதிகளிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் சட்டவிரோதமாகக் கட்டாயப்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்த நீதிமன்றம், சவுந்தர்யாவை அவருடைய கணவர் பிரபுவுடன் செல்ல அனுமதித்தது. அவருடைய தந்தை சுவாமிநாதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவையும் சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்தது.



source https://www.vikatan.com/news/tamilnadu/madras-hc-quashes-habeas-corpus-petition-filed-by-mla-prabhu-wifes-father

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக