Ad

வெள்ளி, 9 அக்டோபர், 2020

கேரளாவுக்குச் செல்லும் புகையிலை, ரேஷன் அரிசி மூட்டைகள்... கடத்தல் கேந்திரமான குமரி எல்லை?

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் எல்லையான பளுகல் பகுதியில், கடந்த 3-ம் தேதி போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை களியக்காவிளை இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையிலான போலீஸார் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரியில் `ஆப்பிள் பிராண்ட்’ என அச்சிடப்பட்ட சாக்கு மூட்டைகள் இருந்தன. அவற்றில் தமிழக அரசு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசிகள் இருந்தன. நூதன முறையில் ரேஷன் அரிசியைக் கேரளாவுக்குக் கடத்த முயன்றதாக லாரி ஓட்டுநரான நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராசு (41), பாஸ்கர் (19) இருவரையும் போலீஸார் மடக்கிப் பிடித்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ.4,18,610 பணத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தென்காசி பகுதியிலிருந்து ரேஷன் அரிசி கடத்திவந்தது தெரியவந்தது. அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

கேரளாவிற்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்

அதேபோல கன்னியாகுமரி மாவட்ட எல்லைப்பகுதியான களியக்காவிளையில் தடைசெய்யப்பட்ட புகையிலைகளைக் கேரளாவுக்குக் கடததுவதற்காகப் பதுக்கிவைத்திருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து தக்கலை சரக டி.எஸ்.பி ராமசந்திரன் தலைமையில், காவலர்கள் களியக்காவிளையில் அதிரடியாக சோதனையில் இறங்கினர். அங்கிருக்கும் அன்வர் டிராவல்ஸ் நிறுவனத்தின் பின்புறமுள்ள அன்வர் என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில் நடத்திய சோதனையில் சேமியா பாக்கெட்டுகளுக்கு இடையே சுமார் ஒரு டன் புகையிலை பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கேரளாவுக்குக் கடத்துவதற்காக அந்தப் புகையிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிற்றது. இதையடுத்து புகையிலை பதுக்கியதாக அன்வர் கைதுசெய்யப்பட்டார். இது தொடர்பாக மேலும் மூன்றுபேரை போலீஸார் தேடிவருகின்றனர். மேலும் அதே 7-ம் தேதி குழித்துறை வழியாக மினி டெம்போவில் கேரளாவுக்குக் கடந்த முயன்ற இரண்டரை டன் ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அதிகாரி தினேஷ் சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.

குழித்துறையில் பிடிக்கப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்

கொரோனா லாக்டெளன் தளர்வுகள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசி, போதைப்பொருள்கள் உள்ளிட்டவை கடத்துவது அதிகரித்திருப்பது போலீஸாரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரள தலைநகரான திருவனந்தபுரத்தை அடைவது சுலபம் என்பதால் புகையிலை, ரேஷன் அரிசி எனக் கடத்தல் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. `போலீஸார் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினால் மட்டுமே கடத்தல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியும்’ என்கிறார்கள் பொதுமக்கள்.



source https://www.vikatan.com/news/crime/smugglers-using-kumari-border-to-enter-kerela

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக