Ad

செவ்வாய், 20 அக்டோபர், 2020

நவராத்திரியில் அவசியம் தரிசிக்க வேண்டிய 9 அம்பிகையர்... சிறப்புகள் என்னென்ன?

லட்சுமி மற்றும் சரஸ்வதி அஷ்டோத்திரத்தில் பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நமஹ என்கிற திருநாமம் காணப்படுகிறது. இதன்பொருள் பிரம்மனாகவும் விஷ்ணுவாகவும் சிவனாகவும் விளங்குபவள் அந்த ஆதி சக்தி எனக்கொள்ளலாம். மும்மூர்த்திகளாக மட்டுமல்ல, முப்பத்துமுக்கோடி தேவர்களுக்குள்ளும் கோடானகோடி ஜீவர்களுக்குள்ளும் உள்ளார்ந்த ஒளியாக விளங்கும் சக்தியே அன்னை ஆதி பராசக்தி. அந்தப் பராசக்தி எழுந்தருளியிருக்கும் அற்புதத் திருத்தலங்கள் அநேகம்.

அவற்றுள் போற்றிவழிபட உகந்த 9 திருத்தல தரிசனமும் அறிந்துகொள்ள வேண்டிய அற்புதத் தகவல்களும் உங்களுக்காக...
ஞானபிரசுனாம்பிகை

ஞானபிரசுனாம்பிகை

காளஹஸ்தியில் அருளும் அன்னைக்கு ஞானபிரசுனாம்பிகை என்பது திருநாமம். ஸ்ரீ - காளம் - அத்தி அதாவது சிலந்தி - பாம்பு - யானை - ஆகிய மூன்றும் வழிபட்டுப் பேறு பெற்ற சிறப்புடைய தலம் என்பதால் ஶ்ரீகாளஹஸ்தி என்று போற்றப்படுகிறது. மலையடிவாரத்தில் உள்ள அருமையான திருக்கோயில். மலை, கைலாசகிரி என்று வழங்கப்படுகிறது. இங்கு அம்பாள் கிழக்கு நோக்கிய சந்நிதியில் அருள்கிறாள். அழகான கருவறையில் அம்பாள் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். திருவடியில் ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 'அர்த்தமேரு' உள்ளது. அம்பாள் இடுப்பில் ஒட்டியாணத்தில் 'கேது' உருவமுள்ளது. எதிரில் சிம்மம் உள்ளது. சந்நிதிக்கு வெளியில் பிராகாரத்தில் தலைக்கு மேற்புறத்தில் ராசிச் சக்கரம் வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளது. அம்பாளுக்கு வெள்ளிக்கிழமைதோறும் தங்கப்பாவாடை சார்த்தப்படுகிறது. சந்நிதிக்கு நேர் எதிரில் உள்ள மண்டபத்தில் வெள்ளிக்கிழமைதோறும் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.

நவராத்திரி நாள்களில் ஞானபிரசுனாம்பிகையை நேரிலோ நினைத்தோ வழிபட்டால் அம்பிகையின் திருவருள் கைகூடி சகல அஞ்ஞானங்களும் நீங்கும். மேலும் ஞானகாரகனாம் கேதுவின் திருவருள் கிடைக்கும்.

காஞ்சி காமாட்சி

பாரத தேசம் முழுவதும் அத்வைதத்தைப் பரப்பி மடங்களை உருவாக்கி மாபெரும் ஆன்மிகப் புரட்சி செய்த ஆதிசங்கரர் கடைசியாக திரிபுரசுந்தரி வேதபாதஸ்தவம் என்ற பாடலைப்பாடி காஞ்சி காமாட்சியைத் துதித்தார். துதி முடியும்போது அவர் ஆதி சக்தியோடு இரண்டறக் கலந்தார்.

காஞ்சி காமாட்சி

இன்றும் காமாட்சி ஆலயத்தில் விக்கிரக வடிவில் வாழ்கிறார் ஆதிசங்கரர். அவருடைய சமாதி காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் அம்மன் சந்நிதிக்குப் பின்புறத்தில் அமைந்துள்ளது. அதோடு அவர் பூஜித்த அதே திருபுரசுந்தரி - சந்திரமௌலீசுவரரைத்தான் இன்றும் காஞ்சி மடத்தில் ஆசார்ய புருஷர்கள் வழிபடுகிறார்கள். எனவே அன்னை காமாட்சியை வணங்கி வழிபட்டால் நம் துயர் தீர்வதோடு ஆசார்யர்களின் அருளாசியும் என்றென்றும் நின்று காக்கும்.

மதுரை மீனாட்சி அம்மன்

பொதுவாக சிவாலயங்களில் முதலில் ஈஸ்வரனுக்கு நைவேத்யம் செய்தபிறகு அதையேதான் சுவாமியின் பிரசாதமாக அம்பாள் முதலான மற்ற எல்லா தெய்வங்களுக்கும் நைவேத்யம் செய்வார்கள். மதுரையிலே மட்டும் ஒரு விசேஷம். மீனாட்சிக்கு முதலில் நைவேத்தியம் செய்துவிட்டுப் பிறகுதான் சுந்தரேஸ்வரர் உள்படப் பிற மூர்த்திகளும் நைவேத்தியம்.

மதுரை மீனாட்சி அம்மன்

தனித்துவம் வாய்ந்த இந்த அன்னை எப்போதும் அருள்பவள் என்பதற்கு குமரகுருபரர் 'மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழை அரங்கேற்றம் செய்தபோது குழந்தையாக வந்து நிகழ்த்திய திருவிளையாடலே சாட்சி. அரசியாக அமர்ந்து அருளாட்சி செய்யும் அன்னை மீனாட்சியை வணங்கி வழிபட்டால் துன்பங்கள் தீர்ந்து நன்மைகள் சேர்வதோடு சத்ருக்களால் உண்டாகும் பயமும் விலகும் என்பது நம்பிக்கை.

கன்னியாகுமரி அம்மன்

கன்னியாகுமரி அம்மன்

51 சக்திபீடங்களில் ஒன்று கன்னியாகுமரி. ஆதி சேது என்னும் புகழ்ப்பெயர்பெற்ற இந்தத் தலத்துக்குத்தான் ராமர் முதலில் வந்து வணங்கி அங்கிருந்து பாலம் அமைக்க முயன்றாராம். அதன்பின் அன்னையின் உத்தரவின்பேரில் வானரசேனையோடு ராமேஸ்வரம் சென்று அங்கு பாலம் அமைத்தார் என்கிறது தலவரலாறு. இந்தத் தகவல் கன்னியாகுமரியின் பழைமையைக் குறிக்கிறது. இங்கு அருளும் அன்னையின் பெயரும் அதுவே. இந்த அன்னைக்கு துர்கை, பகவதி என்னும் பெயர்களும் உண்டு. பரசுராமர் பிரதிஷ்டை செய்த ஆலயங்களில் கன்னியாகுமரியும் ஒன்று என்பது ஐதிகம். இந்த ஆலயத்துக்கு வந்து கன்னிப்பெண்கள் வேண்டிக்கொண்டால் விரும்பியபடி கணவன் அமைவான் என்பது நம்பிக்கை.

அலர்மேல்மங்கை

அன்னை மகாலட்சுமியின் அம்சம் அலர்மேல் மங்கை. திருச்சானூரில் அருளும் இந்தத் தாயாரின் சந்நிதியில் பிரம்மா, உலக நன்மைக்காக இரண்டு தீபங்களை ஏற்றிவைத்து வழிபட்டார் என்றும் அந்த விளக்குகள் இன்று ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்றன என்றும் புராணங்கள் கூறுகின்றன. இங்கு தாயாருக்கு ஆலயம் எழுப்பும்படி தொண்டைமானுக்கு ஶ்ரீநிவாசனே உத்தரவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதனால் பகவான் ஆனந்தம் அடைந்ததால் இந்த ஆலய விமானத்துக்கு ஆனந்த விமானம் என்று பெயரிட்டான்.

அலர்மேல்மங்கை

இந்த ஆலயத்தில் வழிபட்டுப் பிறகே திருமலை சென்று ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்பது மரபு. மன அமைதியைத் தருவதோடு வருமையில் வாடும் மக்களுக்கு செல்வத்தை அளிப்பவளும் அவளே. அப்படிப்பட்ட அலர்மேல்மங்கையை தரிசித்து அல்லது மனக்கண்ணால் தியானித்து வழிபடுவதன் மூலம் சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும் என்பது நம்பிக்கை.

உண்ணாமுலை அம்மன்

இறைவன் அடிமுடிகாண இயலாத அண்ணாமலையாக எழுந்தருளியிருக்கும் தலம் திருவண்ணாமலை. இங்கு அம்மைக்கு உண்ணாமுலை அம்மன் என்று பெயர். 'உண்ணாமுலை உமையாளடும் உடனாகிய ஒருவன்' என்று ஈசனைப் போற்றுகிறார் சம்பந்தர். ஈசனின் இடப்புறத்தில் எப்போதும் இருக்கும் அம்பிகையே திருவிளையாடல் செய்ய விருப்பம் கொண்டவளாய் ஈசனோடு ஊடல் கொண்டார். இந்த அதிசயம் ஒரு பேருண்மையை இந்த உலகத்துக்கு அறிவிக்கும் வண்ணம் நிகழ்ந்த விளையாடல். இறைவி ஊடல் கொண்டாலும் அது உற்சவமே. எனவே தான் அதை 'திருஊடல் விழா' என்று போற்றப்படுகிறது. பொங்கல் திருநாளுக்கு மறுநாள் கொண்டாடப்படும் இந்தத் திருவிழா நடைபெறும் வீதியும் திருவூடல் வீதி. இந்த ஊடலுக்குப் பின் சிவனும் சக்தியும் வேறுவேறல்ல என்பதை விளக்கும் ஞானம் இந்தப் பிரபஞ்சத்துக்குக் கிடைத்தது.

உண்ணாமுலை அம்மன்

உண்ணாமுலை அம்மனை தரித்து வழிபடுபவர்களின் இல்வாழ்க்கை இனிமையாக விளங்கும். விதிவசத்தால் பிரிந்திருக்கும் தம்பதியர் உண்ணாமலை அம்மனை வேண்டிக்கொண்டால் பிரிவு நீங்கி விரைவில் ஒன்றுகூடுவர் என்பது நம்பிக்கை. இந்த நவராத்திரி நாளில் அன்னையைப் போற்றி வழிபடுவோம்.

அகிலாண்டேஸ்வரி

திருச்சிக்கு அருகே உள்ளது திருவானைக்கா. பஞ்சபூதத்தலங்களில் இது அப்பு எனப்படும் நீர் தலம். இங்கு கர்ப்பகிரகத்துக்கு லிங்கத்தின் அடியிலிருந்து வற்றாமல் நீர் கசிந்து கொண்டே இருக்கும். அவ்வாறு சேரும் நீரை அவ்வப்போது இடைவெளிகளுக்கு அகற்றுவார்கள். அன்னை அகிலாண்டேஸ்வரி சிவபெருமானை இங்கு வணங்கி வழிபட்டார். இன்றும் இதன் அடையாளமாக நண்பகலில் கோயில் சிவாசார்யார் புடவை அணிந்து ஜம்புகேஸ்வரருக்கு பூஜை செய்கிறார்.

அகிலாண்டேஸ்வரி

தேவியின் காதுகளை அலங்கரிக்கும் இரண்டு காதோலைகளும் ஸ்ரீ சக்ர வடிவில் தாடங்கமாக ஆதிசங்கர பகவத்பாதர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது. உக்கிரமான காளியாக இருந்த தேவியினை சாந்தப்படுத்த தேவியின் முன்பு கணபதி விக்ரகத்தையும் ஸ்தாபித்தார் சங்கரர் என்கிறது தலவரலாறு. இந்த அன்னையை வேண்டிக்கொண்டால் சகல நன்மைகளும் ஏற்படுவதோடு, காரிய வெற்றியும் உண்டாகும் என்பது நம்பிக்கை.

பர்வத வர்த்தினி

பர்வத வர்த்தினி

ராமேஸ்வரம், ராமநாதலிங்க சுவாமி திருக்கோயிலில் அருளும் அம்பிகைக்கு ஶ்ரீ பர்வத வர்த்தினி என்று பெயர். ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்மனின் சந்நிதி ஸ்ரீ ராமநாதலிங்கத்தின் தெற்குப்பகுதியில் அவரின் வடபாகத்தில் அமைந்துள்ளது. அம்மன் சந்நிதிக்கு முன்பு இருக்கிற மண்டபத்திற்கு நவசக்தி அல்லது சுக்ரவார மண்டபம் அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீ பர்வத வர்த்தினி அம்பாளின் விக்ரகம் தங்கப்பல்லக்கில் மூன்று பிராகாரங்களைச் சுற்றிலும் மிகுந்த கோலாகலத்துடனும் இசையுடனும் எடுத்துச் செல்லப் படும். இந்தக் காட்சியை தரிசிப்பவர்களின் பிறவிப்பிணி தீரும் என்பது ஐதிகம். இந்த அம்பிகையை நவராத்திரி நாளில் நினைத்து வழிபட்டால் சகல வரங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கொல்லூர் மூகாம்பிகை

பாரத தேசம் முழுதும் புனித யாத்திரை மேற்கொண்ட ஆதிசங்கரர், கொல்லூருக்கு வந்தபோது மக்கள் அவரிடம், ‘‘ஸ்வாமி, தங்க ரேகை மின்னும் லிங்கத்தில் அம்பாள் அரூப வடிவில் இருக்கிறாள். ஆனால், மூகாம்பிகை அன்னையின் முகம் எப்படி இருக்கும் என்று எங்களுக்குத் தெரியவில்லையே!’’ என்று முறையிட்டனர். அப்போது ஆதிசங்கரர் தியானத்தில் ஆழ்ந்தார். அம்பாள் அவருக்குப் பிரத்யட்சமானாள். பத்மாசனத்தில் வீற்று, இரு கரங்களில் சங்கு, சக்கரம். மற்ற இரு கரங்களில், ஒரு கரம் பாதங்களில் சரணடையத் தூண்ட, மற்றது வரமருளி வாழ்த்தும் கோலத்தில் அன்னை தோற்றமளித்தாள்.

கொல்லூர் மூகாம்பிகை

தன் முன் தோன்றிய அம்பாளின் உருவத்தை, தேர்ந்த ஸ்தபதியிடம் விவரித்து விக்ரகம் செய்யப் பணித்தார் ஆதி சங்கரர். அதன்படி, உருவான அம்பாளின் அழகிய உருவமே மூகாம்பிகை. ஸ்ரீமூகாம்பிகை ஆதிசங்கரருக்குப் பிரத்தியட்சமான பிறகு, அவர் இயற்றியதுதான் ‘சௌந்தர்ய லஹரி’ என்கின்றனர்.

இந்த அம்பிகையை நவராத்திரி நாளில் நினைத்துப் போற்றி வழிபட்டால் சகல செல்வங்களும் சேர்வதோடு ஞானமும் கைகூடும் என்பது நம்பிக்கை.


source https://www.vikatan.com/spiritual/temples/navarathri-nine-special-places-to-visit-and-their-importance

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக