Ad

வெள்ளி, 16 அக்டோபர், 2020

`800' சர்ச்சை : முத்தையா முரளிதரன்மீது ஈழ ஆதரவாளர்களுக்கு அப்படியென்ன கோபம்?

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பயோபிக் படமான, '800' திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பு உண்டாகியுள்ளது.

இந்தப் படத்தில், 'முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார்' என்ற செய்திகள் கடந்த ஆண்டு வெளியானபோதே கடும் எதிர்ப்புகளும் கிளம்பின. பா.ம.க, வி.சி.க, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், பெரியாரிய, தமிழ்த்தேசிய அமைப்புகளும், உலகம் முழுவதும் உள்ள ஈழத்தமிழர்களும் `ராஜபக்‌ஷே-வின் ஆதரவாளரான, தமிழினத் துரோகி முரளிதரனின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது' எனக் கோரிக்கை வைத்தனர்.

ஆனால், '800' படம் குறித்துப் பேசிய விஜய் சேதுபதி, ``என் மீது அன்பு வைத்துள்ள யாரையும் நான் இழக்கமாட்டேன். அதுபோன்ற ஒரு காட்சியும் என் படத்தில் இருக்காது. என்னை நேசிப்பவர்களைக் காயப்படுத்தும் சுயநலவாதியாக நான் இருக்கவே மாட்டேன். அதையும் மீறி யாரையாவது காயப்படுத்தினால், மன்னிப்பு கேட்கவும் தயங்க மாட்டேன்'' என்று விளக்கம் அளித்திருந்தார். அதோடு, ''முரளிதரனின் கதாபாத்திரத்தில் நடிப்பதைக் கௌரவமாக கருதுகிறேன்'' என்றும் கருத்துத் தெரிவித்திருந்தார்.

விஜய் சேதுபதி

ஆனால், விஜய் சேதுபதியின் விளக்கத்தை ஈழ உணர்வாளர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம், ''திரைப்படத்தில் என்ன கருத்துகள் இருக்கின்றன என்பதைவிட, அவர் யாராக நடிக்க இருக்கிறாரோ அதுதான் எதிர்ப்பதற்கான காரணம். முரளிதரன் இதற்கு முன்பாக ஈழத்தமிழ் மக்களின் மனம் நோகும்படி பல கருத்துகளைப் பேசியிருக்கிறார். அப்படிப்பட்டவரின் படத்தில், மக்கள் மத்தியில் பிரபலமான விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது'' என்பதே எங்களின் கோரிக்கை எனக் கருத்துகளை முன்வைத்தனர்.

அதன் பிறகு இந்தப் படம் குறித்த எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை என்பதால், இதுகுறித்த பேச்சுகள் அடங்கிப் போயிருந்தன. ஆனால், கடந்த 13-ம் தேதி இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. அதில், இலங்கையின் தேசியக்கொடி பொருந்திய உடையுடன் விஜய் சேதுபதி, காட்சியளித்தது, தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உண்டாக்கியது. `ஈழத் தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் கொன்று குவித்த நாடான இலங்கையின் தேசியக் கொடி கொண்ட கிரிக்கெட் ஜெர்ஸியை எப்படி விஜய் சேதுபதி அணிந்துகொண்டு நடிக்கலாம்?' என்று கேள்விகளை எழுப்பி சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

தொடர்ந்து, பா.ம.க நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திரைப்பிரபலங்கள் இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் சீனு ராமசாமி, கவிஞர் தாமரை, கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோரும் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். தவிர, ஒரு சில தமிழ்த்தேசிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், ''விஜய் சேதுபதி 800 படத்தில் இருந்து விலகிக் கொள்ளாவிட்டால் அவரின் வீட்டை முற்றுகையிடுவோம்'' என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

ஆனால், தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து, 'இது அரசியல் படம் அல்ல' என விளக்கம் அளிக்கப்பட்டது. விஜய் சேதுபதியிடமிருந்து இன்னும் ஓரிரு நாள்களில் பதில் வரும் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. முரளிதரனும், 'என்னை தமிழ் மக்களின் எதிரியாகச் சித்திரிப்பது வேதனையாக இருக்கிறது' என்று அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார். ஆனாலும், ஈழ உணர்வாளர்கள் மசிவதாகத் தெரியவில்லை. இதற்கிடையே, பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன், துணைத்தலைவர் அண்ணாமலை, த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

முத்தையா முரளிதரன்

உலகப்புகழ் பெற்ற, டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருக்கும் தமிழரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு, ஈழ உணர்வாளர்கள் இவ்வளவு எதிர்ப்புத் தெரிவிப்பது ஏன், அவர்கள் சொல்லும் காரணங்கள் என்னென்ன?

''தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்டது முத்தையா முரளிதரனின் குடும்பம். தொழில் காரணமாக அவர்கள் இலங்கையின் கண்டி மாவட்டத்துக்குக் குடியேறினர். முரளிதரனின் தந்தை இலங்கை கண்டியில் சொந்தமாக பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார். பள்ளிப் படிப்பில் இருந்தே முரளிதரனுக்கு கிரிக்கெட்டில் தீராத ஆர்வம். இவரின் விளையாட்டுத் திறமையினால், அவர் தமிழர் என்பதையும் தாண்டி இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாட அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. ஆரம்பத்தில் முரளிதரனின் பந்துவீச்சு கடுமையான விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் உள்ளானது. ஆனாலும், அதையெல்லாம் சமாளித்து கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் புரிந்திருக்கிறார் முரளிதரன். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், '800' விக்கெட்டுகள் எடுத்து கிரிக்கெட் உலகில் யாரும் செய்யாத சாதனையைச் செய்துள்ளார் முத்தையா முரளிதரன். அதுவே, தற்போது அவரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கும் தலைப்பாகியிருக்கிறது. தவிர, இலங்கை கிரிக்கெட் அணியின் ஒரு நட்சத்திர வீரராகவே கடைசிவரை விளங்கினார் முரளிதரன்.

முரளிதரன் தமிழராக இருந்தாலும், தமிழர்களின் உரிமைகளுக்காகவோ, தமிழ் மக்கள் இன ரீதியாக ஒடுக்குமுறைக்கு ஆளானபோது அவர்களின் நீதிக்காகவோ ஒருபோதும் குரல் கொடுத்தது இல்லை. தன்னை ஒரு முழுமையான இலங்கை குடிமகனாகவே காட்டிக்கொள்ள முற்பட்டார் முரளிதரன். ஆனால், அதுகுறித்து ஈழத்தமிழர்களோ, தமிழகம் உள்ளிட்ட உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களோ எந்த விமர்சனத்தையும் முன்வைத்ததில்லை. காரணம், 'இலங்கை நாட்டுக்காக கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கும்போது, கண்டிப்பாக அந்த நாட்டுக்கு எதிராக, அரசியல்வாதிகளுக்கு எதிராக முரளிதரன் பேசமுடியாது' என்பதை அனைவரும் அறிந்தே இருந்தனர். காரணம், இலங்கையில் பெரும்பாலான சிங்கள அரசியல் தலைவர்களிடம் இருந்த இனவெறி அத்தகையது.

முத்தையா முரளிதரன்

அதேபோல, சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களை இன ரீதியாக ஒடுக்கும்போது, ஏன் 'கறுப்பு ஜூலை' எனப்படும் 1983-ம் ஆண்டு இலங்கையில் நடந்த ஜூலை கலவரத்தில் முரளிதரனின் குடும்பமே நேரடியாகப் பாதிக்கப்பட்டிருந்தும், இலங்கை அணிக்காக எப்படி முரளிதரன் கிரிக்கெட் விளையாடலாம் என்கிற விமர்சனங்கள், அங்குள்ள தமிழர்கள் சிலரால் ஆரம்ப காலங்களில் முன்வைக்கப்பட்டது. அப்போது தமிழர்களின் பிரதிநிதிகளாக இருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடமும் அந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், 'அவர் (முரளிதரன்) விளையாட்டுக்கு எந்த ஊறும் விளைவிக்க வேண்டாம்; நம் பிள்ளை ஒருவர் விளையாடுகிறார் என்றே கொள்வோம்' என்று சொல்ல அதற்குப் பிறகு அது குறித்து யாரும் எந்தக் கேள்வியையும் எழுப்பவில்லை. இலங்கை அரசாங்கத்துடன் விடுதலைப் புலிகள் அமைப்பு தீவிரமாக சண்டையிட்டுக்கொண்டிருந்த காலத்தில்கூட, முரளிதரனின் ஆட்டத்தை ஈழத் தமிழ் மக்கள் ரசித்தே வந்தனர்.

தவிர, தமிழகத்தில்கூட இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டிகள் நடைபெறும்போது, ஒட்டுமொத்தமாக இந்திய அணிக்கு ஆதரவாக இருந்தாலும் , முரளிதரன் பந்து வீசும்போது மட்டும், மனம் லேசாக அவர் பக்கம் சாயும் உணர்வைப் பெற்ற தமிழர்களே அதிகம். அவர் முழுமையான சிங்கள ஆதரவாளராக இருந்தாலும், அவர் கிரிக்கெட்டராக இருந்தவரை யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. ஐ.பி.எல் போட்டிகளில், அவர் சென்னை அணிக்காக விளையாடியபோதும் யாரும் அவரை விளையாடக்கூடாது என்று சொல்லவில்லை. அதைவிட, அவரின் ஆட்டத்தை வெகுவாக ரசித்தனர் என்பதே உண்மை.

சன் ரைசர்ஸ் அணிக்கு பந்துவீச்சுப் பயிற்சியாளராக இருப்பதையும்கூட யாரும் எதிர்க்கவில்லை. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக முரளிதரன் அரசியல் அவதாரம் எடுத்திருக்கிறார். அதுவும் தமிழர்களின் நலனுக்கு எதிரான அரசியல் என்பதே கவனிக்க வேண்டியது. `நேரடியாக நான் அரசியலுக்கு வரமாட்டேன்’ என அவர் அறிவித்திருந்தாலும், ராஜபக்சே சகோதரர்களுக்கு ஆதரவான அரசியலைக் கடந்த சில ஆண்டுகளாக முன்னெடுத்து வருகிறார் முரளிதரன். அதைவிட, ஈழத்தமிழர்களையும் , உலகெங்கும் வாழும் தமிழர்களையும் மிகப்பெரும் கோபமடையச் செய்த ஒரு விஷயம், இலங்கையில் 2009 ஆண்டில் நடந்த இறுதிகட்டப்போரின்போது முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்ட நாள்தான். ஆனால், அந்த நாளை ''என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாள்; அன்றுதான் நான் நிம்மதியாக உறங்கினேன்'' என்று முரளிதரன் கருணையின்றி பேசியதை யாராலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

ராஜபக்சே சகோதரர்கள்

விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சித்துவந்த பலரும்கூட, முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த இனப்படுகொலையை நியாயப்படுத்திப் பேசமாட்டார்கள். ஆனால், அதைச் செய்தார் முத்தையா முரளிதரன். அதைவிட மேலாக, இறுதிப்போரின்போது காணாமல்போன தங்களின் குழந்தைகளைத் தேடிவரும் தாய்மார்களை, ''அவர்கள் நாடகம் போடுகிறார்கள்'' என முரளிதரன் கருத்து சொன்னது ஈழ உணர்வாளர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை உண்டாக்கியது. அதேபோல, இலங்கையில் தமிழ் மக்களை கொன்றுகுவித்த மகிந்த ராஜபக்சேவை, நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிட்டுப் பேசியவர்தான் முத்தையா முரளிதரன்.

Also Read: `விஜய் சேதுபதியின் மௌனம் நேர்மையல்ல...!'- `800’ திரைப்பட சர்ச்சை குறித்து வ.கௌதமன்

'மலையகத் தமிழர் என்பதால்தான் முரளிதரனை எதிர்க்கின்றனர்' என ஒருசிலர் தற்போது பேசிவருவதை மலையகத் தமிழர்களே ஏற்கமாட்டார்கள். காரணம், ஈழத் தமிழர்களுக்கு எதிராக மட்டுமல்ல... மலையகத் தமிழர்களுக்கு எதிரான அரசியலிலும் களமிறங்கியிருக்கிறார் முத்தையா முரளிதரன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, நுவரெலியா மாவட்டத்தில், தன் தம்பி முத்தையா பிரபாகரனை வேட்பாளராக நிறுத்தி, தமிழர்களின் வாக்குகளைச் சிதறடித்து சிங்களர்கள் வெற்றிபெறக் காரணமாக இருந்தவர்தான் முத்தையா முரளிதரன். ஏனெனில், அதே நுவரெலியா மாவட்டத்தில் நடைபெற்ற முந்தைய அதிபர் தேர்தலின்போது, 80 சதவிகித வாக்குகள் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதைச் சரிகட்டவே, தன் சொந்த மாவட்டமான கண்டியில் போட்டியிடுவதை விட்டுவிட்டு, நுவரெலியாவில் போட்டியிட வைத்தார் முத்தையா முரளிதரன். எப்படி, ஈழத்தமிழ் மக்களின் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கில், தமிழர்களின் வாக்குகளைப் பிளவுபடுத்த சில தமிழர்களை ராஜபக்சே தேர்வு செய்து வைத்திருக்கிறாரோ, அதைப்போலவே மலையகப் பகுதிகளில் தமிழர்களின் வாக்குகளைப் பிரிக்க முத்தையா முரளிதரனைப் பயன்படுத்தி வருகிறார் ராஜபக்சே. முரளிதரனும் இதைத் தெரிந்துகொண்டே இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

விக்னேஸ்வரன்

தவிர, முரளிதரன் தன் தம்பிக்காக நேரடியாகத் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டார். மலையகத் தமிழர்கள் தங்களின் பிரதிநிதிகளாக முரளிதரன் குடும்பத்தினரை நினைத்திருந்தால், எப்படி வடக்கு கிழக்கில், விக்னேஸ்வரனை, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோரைத் தேர்வு செய்தார்களோ, அப்படி நுவரெலியாவில், முரளிதரனின் தம்பியான முத்தையா பிரபாகரனைத்தான் தேர்வு செய்திருப்பார்கள். ஆனால், அப்படித் தேர்வு செய்யவில்லை மலையக மக்கள்.

Also Read: `விஜய் சேதுபதி இனப் பற்றாளர்தான்... ஆனால்?’ - முரளிதரன் பயோபிக்கால் மீண்டும் வெடிக்கும் சர்ச்சை!

அதுமட்டுமல்ல, இலங்கை நாடாளுமன்றத்தில், ``விக்னேஸ்வரன் எம்.பி, தனது வாயை உடனடியாக அடக்கி வாசிக்க வேண்டும். இல்லையெனில் நாடாளுமன்றத்தில் இருந்து அவரை ஓட ஓட விரட்டி அடிப்போம்'' என சொன்ன இலங்கையின் தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு கூட்டம் போட்டவர் முரளிதரன். தமிழ் வேட்பாளர், ``மனோ கணேசனுக்கு வாக்களிக்க வேண்டாம்” என தமிழ் வாக்காளர்களிடம் சொன்னவர் முரளிதரன். ஆனாலும், தமிழ் மக்கள் மனோ கணேசனைத் தேர்ந்தெடுத்தனர். முரளிதரனின் கோரிக்கைகளை முற்றிலுமாக நிராகரித்தனர்.

இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த சிங்களத் தலைவர்களும் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று சொல்லமுடியாது. தமிழீழத்தை விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஆதரித்த விக்கிரமபாகு கருணாரத்தின போன்ற சிங்களத் தலைவர்களும் உண்டு. தவிர, நாடாளுமன்றத்தில் தமிழ் எம்.பி-க்களின் கருத்துரிமையைப் பறிக்கக்கூடாது என பிரச்னைகளின் அடிப்படையில் தமிழர்களை ஆதரிக்கும் இலங்கையின் நீர்வழங்கல்துறை அமைச்சர் வசுதேவ நாணயக்கார போன்ற சிங்களத் தலைவர்களும் இருக்கிறார்கள். ஆனால், முத்தையா முரளிதரனோ, விமல் வீரவன்சே என்னும் போர்வெறி அரசியல் செய்யும் சிங்களவருடன் கரம் கோத்துக்கொண்டு வலம்வருபவர்.

விஜய் சேதுபதி- முத்தையா முரளிதரன்

முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்றவுடன் உடனடியாக வாழ்த்து வருகிறது, இலங்கைப் பிரதமர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவிடமிருந்து. காரணம், 2009-ல் ஈழத்தில் நிகழ்த்திய இனப்படுகொலைக்கு வலுவான ஆதாரங்கள் சிக்கியிருக்கின்றன. ராஜபக்சே குடும்பத்தின் மீது இனப்படுகொலையாளர்கள் என்கிற மிகப்பெரிய ரத்தக் கறை படிந்திருக்கிறது. அதிலிருந்து தங்களை விடுவித்து உலக சமூகத்தில் தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ள, ராஜபக்சே சகோதரர்கள் போடும் நாடகத்தின் ஒரு பகுதியே 800 படம் போன்றவை எல்லாம்.

தமிழீழ உணர்வாளர்கள், நடிகர் விஜய் சேதுபதிக்கு வைக்கும் கோரிக்கை என்பது, 800 பட இயக்குநர் எம்.எஸ்.ஶ்ரீபதி இயக்கும் படத்தில் நடிக்க வேண்டாம் என்பதல்ல. 'தமிழர்கள் கொண்டாடுகிற மனிதர்கள் எல்லாம் எங்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறார்கள்; தமிழர்கள் எங்களை ஏற்றுக்கொண்டார்கள்' என உலக சமூகத்திடம் காண்பித்துக் கொள்ள, ராஜபக்சே குடும்பம் எழுதி, இயக்கும் நாடகத்தில் நடிக்க வேண்டாம் என்பதே ஈழ உணர்வாளர்கள் முத்தையா முரளிதரனை எதிர்ப்பதற்குக் காரணமாக இருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/800-controversy-why-eelam-supporters-so-angry-with-mutiah-muralitharan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக