Ad

திங்கள், 19 அக்டோபர், 2020

நெல்லை: கல்லறைகளை உடைத்த மர்ம நபர்கள்! - போராட்டம்.. பதற்றம்; 8 பேர் கைது

நெல்லையை அடுத்த மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் உச்சிஸ்ட விநாயகர் கோயில் அமைந்துள்ளது. கோபுரத்துடன் கூடிய இந்த கோயில் பழைமை வாய்ந்தது. பல ஆண்டுகளாக புதர்மண்டிக் கிடந்த இந்த கோயில், சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பித்து குடமுழுக்கு செய்யப்பட்டது.

கோயிலின் அருகில் கல்லறைத் தோட்டம்

கோயிலின் அருகில் கிறிஸ்துவர்களின் இரு கல்லறைத் தோட்டங்கள் இருக்கின்றன. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக கல்லறைக்காகவே இந்த இடம் வாங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அங்கு இறந்தவர்களின் உடல்களைப் புதைத்து கல்லறை கட்டியுள்ளனர்.

சில வருடங்களாக விநாயகர் கோயிலுக்குப் பக்தர்கள் கூட்டம் வரத் தொடங்கியதால், இந்தக் கல்லறைத் தோட்டத்தை அகற்ற வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக பல முறை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

சேதப்படுத்தப்பட்ட கல்லறை

கல்லறைத் தோட்டத்துக்காகவே வாங்கப்பட்ட இடம் என்பது நிரூபிக்கப்பட்டதால் அங்கு புதைப்பதைத் தடுக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்து விட்டனர். இருப்பினும் இந்து அமைப்பினர் அங்குள்ள கல்லறைகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி வந்தார்கள்.

இந்த நிலையில், அங்குள்ள உடையார்பட்டி திருஇருதய ஆலயத்துக்குச் சொந்தமான கல்லறைத் தோட்டத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 40-க்கும் அதிகமான கல்லறைகளை உடைத்துச் சேதப்படுத்தினார்கள். சுற்றுச் சுவரையும் கடப்பாரையால் குத்தி சேதப்படுத்தியுள்ளனர்.

சேதமான கல்லறை

இது பற்றிய தகவல் கிடைத்ததும் உடையார்பட்டி திருஇருந்தய ஆலயத்தின் முன்பாக கிறிஸ்துவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், சேதப்படுத்தப்பட்ட கல்லறைகளை சீர்படுத்தித் தருவதாகவும் இந்தச் செயலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வதாகவும் உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றார்கள்.

கல்லறைகள் சேதப்படுத்தப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவிய நிலையில், இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது, இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த சிலருக்கு அதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

நேரில் பார்வையிட்ட காவல்துறை அதிகாரி

அதனால் இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் உடையார், ஐயப்பன், கந்தன் துரை உள்ளிட்ட 8 பேரை போலீஸார் கைது செய்தார்கள். போலீஸாரின் நடவடிக்கை காரணமாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட இருந்த மோதல் தவிர்க்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

இந்த நிலையில், கல்லறை தோட்டத்தில் இருந்த மூதாதையர்களின் கல்லறைகளை உடைத்து சேதப்படுத்தியவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கத்தோலிக்க ஆயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மனு அளிக்க வந்திருந்த அனைத்துக் கட்சியினர்

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் அப்துல்வஹாப், அ.தி.மு.க மாநகர மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா, முன்னாள் எம்.பி-யான விஜிலா சத்யானந்த்,, எம்.எல்.ஏ-வான ஏ.எல்.எஸ்.லட்சுமணன், கம்யூனிஸ்ட் கட்சியினர், ம.தி.மு.க., இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் கட்சியினர் உள்ளிட்ட பலரும் கல்லறை உடைப்பைக் கண்டித்து ஆயருடன் மனு அளிக்க வந்திருந்தனர்.



source https://www.vikatan.com/news/controversy/eight-people-were-arrested-for-damaging-graves-near-river-thamirabharani

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக