ராமநாதபுரம் மாவட்டம் மாரியூரில் கடல் அலையில் மூழ்கி அருப்புக்கோட்டையை சேர்ந்த மில் தொழிலாளிகள் இருவர் பலியாகினர். இறந்த உறவினருக்கு திதி கொடுக்க வந்தவர்களுக்கு நேர்ந்த இந்த கதியினால் உடன் வந்தவர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஜெயவிலாஸ் மில்லில் பணியாற்றும் தொழிலாளர்கள் திருநாகாத்தை சேர்ந்த ராஜகுரு, வெள்ளக்கோட்டையை சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் புளியம்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் ஆகியோர் தங்கள் உறவினர்களுடன் திதி கொடுப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தை அடுத்துள்ள மாரியூர் கடற்கரைக்கு இன்று காலை வந்துள்ளனர்.
அருப்புக்கோட்டையில் இருந்து அரசு பேரூந்தில் மாரியூர் கடற்கரைக்கு வந்த நிலையில் அங்கு தங்கள் முன்னோர்கள் நினைவாக திதி கொடுத்து வழிபாடு செய்துள்ளனர். இதன் பின் கடலில் அனைவரும் கடலில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது எழுந்த அலையில் சிக்கிய ராஜகுரு, கார்த்திகேயன், ராஜ்குமார் ஆகியோர் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர்.
இதனை கண்ட மற்றவர்கள் கூச்சலிடவே அப்பகுதியை சேர்ந்தவர்கள் மூவரையும் கடலில் இருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். கடலில் மூழ்கியதால் மயக்க நிலையில் இருந்த மூவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சாயல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது ராஜகுரு, கார்த்திகேயன் ஆகிய இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து த.மு.மு.க ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக கடலாடி அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.
மற்றொருவரான ராஜ்குமார் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக வாலிநோக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக கடல் பகுதிகளில் நீராடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால் அமாவாசை உள்ளிட்ட முக்கிய நாட்களில் கூட ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல்களில் யாத்திரைவாசிகள் நீராட முடியாத நிலை உள்ளது. இதனால் அதிக பரபரப்பு இல்லாத மாரியூர் கடல் பகுதிக்கு திதி கொடுக்க சென்றுள்ளனர். இந்நிலையில் திதி கொடுக்க சென்றவர்களில் இருவர் கடலில் மூழ்கி பலியான சம்பவம் அவர்கள் உடன் சென்றவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/death/mill-workers-drowned-in-the-sea-wave-two-died
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக