Ad

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

உங்களை செல்வந்தர் ஆக்கும் 7 விதிகள்... பண்டைக்கால பாபிலோன் நகரம் சொல்லும் பாடம்!

1926-ம் ஆண்டு ஜார்ஜ் எஸ். க்ளாசன் (George S. Clason) எழுதி வெளியான புத்தகம் `தி ரிச்சஸ்ட் மேன் இன் பாபிலோன்’. கடந்த 94 ஆண்டுகளில் இந்நூல் தமிழ், இந்தி உட்பட பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு உலகெங்கும் லட்சக்கணக்கான பிரதிகள் விற்றிருக்கிறது.

நாம் பள்ளியில் படிக்கும்போது வரலாற்றுப் பாடத்தின் ஒரு பகுதியாக மெசபடோமியா நாகரிகம், யூப்ரடீஸ் நதி, பாபிலோன் நகரம் (இன்றைக்கு சிதிலமடைந்த நிலையில் பாக்தாத்திலிருந்து சுமார் 60 மைல் தொலைவில் இருக்கிறது) ஆகியவை பற்றி படித்திருப்போம். சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு உலகத்திலேயே மிகவும் செழிப்பாகவும் செல்வந்தர்களை அதிகம் கொண்ட நகரமாகவும் பாபிலோனியா திகழ்ந்தது. எனவே, அதையே தனது நூலுக்கானக் களமாகக் கொண்டு நீதிக்கதைகள் வாயிலாகத் தனிநபர் நிதித் திட்டமிடல் பற்றி ஜார்ஜ் எழுதியிருக்கிறார்.

பாபிலோன் - நிதி மேலாண்மைத் தொட்டில்

ஒரு நாட்டின் செழிப்பு என்பது தனிநபர்களாகிய நம்முடைய ஒவ்வொருவரின் செழிப்பையும் பொறுத்து இருக்கிறது என்கிறார் நூலாசிரியர். எனவே, இந்நூல் நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வெற்றியைக் கையாளும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது. நிதி மேலாண்மைக்கான தொட்டில் எனக் கூட பாபிலோனை நாம் அழைக்கலாம்.

பாபிலோனில் அன்றைக்கு இருந்த இரண்டே இரண்டு இயற்கை வளங்கள் நல்ல மணலும் ஆறும்தான். அதைக் கொண்டு விவசாயம் செய்து அந்நகர மக்கள் பணம் ஈட்டினார்கள். அவர்களில் மிகப் பெரிய பணக்காரராக இருந்தவர் அர்கட். அவருடைய நண்பர்கள் எல்லோரும் அவரிடம், ``நாம் எல்லோரும் ஒரே ஆசிரியரிடம் பாடம் கற்றோம், ஒரே பாடங்களைப் படித்தோம். ஆனால், நீ மட்டும் மிகப் பெரிய செல்வந்தனாக இருக்கிறாய், எங்களால் அப்படி ஆக முடியவில்லையே, ஏன்?’’ எனக் கேட்க அதற்கு அவர் பணம் பண்ணும் ஏழு விதிகளை அவர்களிடம் பகிர்ந்துகொள்வது போல இந்நூலை கட்டியமைத்திருக்கிறார் ஆசிரியர்.

The Richest Man in Babylon

பணக்காரர் ஆக்கும் ஏழு விதிகள்!

1. உங்கள் பணப்பையைக் கனமாக்குங்கள்:

நீங்கள் சம்பாதிப்பதில் பத்தில் ஒரு பகுதியை அதாவது, 10 சதவிகிதத்தைக் கண்டிப்பாகச் சேமியுங்கள். உங்கள் பர்சில் போடப்படும் பத்து நாணயங்களில் ஒன்பதை மட்டும் செலவு செய்யுங்கள். எந்தக் காரணம் கொண்டு இந்த 10 சதவிகித சேமிப்பை நிறுத்தாதீர்கள்.

2. செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள்:

அத்தியாவசியத் தேவைக்கும், ஆசைக்குமான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளுங்கள். தேவைக்கு மட்டும் செலவு செய்யுங்கள். ஒரு ஆசையை நிறைவேற்றினால் புதிதாக இன்னொரு ஆசை முளைக்கும். எனவே அதை சற்றே ஒதுக்கி வைத்துவிடுங்கள்.

3. பணத்தைப் பலமடங்காகப் பெருக்குதல்:

சேமிக்கும் பணத்தை அப்படியே தூங்க வைத்துவிடாதீர்கள். பணம் நமக்காக, நமது குழந்தைகளுக்காக, அவர்களின் குழந்தைகளுக்காக வேலை செய்யும் வகையில் பல மடங்கு பெருகும் வகையில் (கூட்டுவட்டி – compounding interest) முதலீடு செய்ய வேண்டுமென அர்கட் அறிவுரை கூறுகிறார்.

4. செல்வத்தை நஷ்டமடையாமல் பாதுகாக்க வேண்டும்:

முதலீடு செய்யும்போது, நஷ்டம் வருவது போல் இருப்பதிலும், உடனடியாக செல்வந்தனாகலாம் எனச் சொல்லப்படுவதிலும் ( Ponzi திட்டங்கள்) முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். எதில் முதலீடு செய்ய வேண்டுமென நினைக்கிறோமோ, அது குறித்து நன்கு தெரிந்துகொள்ள வேண்டும்.

Money
5. வீட்டை லாபகரமான முதலீடாக ஆக்குதல்:

முதல் வீடு வாங்குவது மற்றும் வாடகைக்கு இருப்பது குறித்தும் அர்கட் அறிவுரை கூறுகிறார். அதன்படி, அதிகக் கடன் வாங்காதபட்சத்தில் சொந்தவீடு ஒன்று இருப்பதன் மூலம் முதலீடு செய்பவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் ஒரு பாதுகாப்பு உணர்வை அது கொடுக்கும் என்கிறார்.

6. எதிர்கால வருமானத்துக்கும் உறுதி செய்துகொள்ளுங்கள்:

நம்மைச் சார்ந்திருப்பவர்கள் நம்மைப் பிற்காலத்தில் பார்த்துக்கொள்வார்கள் என நினைக்காமல், தனது எதிர்காலம் குறித்து சிந்தித்து அதற்கேற்ப முதலீடுகளைச் செய்வதன் மூலம் ஓய்வுகாலத்தில் நிதி சார்ந்த அச்சம் இல்லாமல் நிம்மதியாக வாழலாம்.

7. சம்பாதிக்கும் திறனை அதிகரித்துக்கொள்ளுதல்:

முதலீடு சம்பந்தமான ஞானத்தையும், சம்பாதிக்கும் திறன் சார்ந்த ஆற்றலையும் தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும் 5 விதிகள்...

இது தவிர, வேறு ஐந்து விதிகளையும் கூறுகிறார் அர்கட். அதில் மூன்று விதிகள் மேற்குறிப்பிட்ட விதிகளில் மூன்றை (அதாவது 1, 3, 4) பிரதிபலிப்பதாகவே இருக்கிறது. அது தவிர்த்த மேலும் இரண்டு விதிகள் என்னவெனில்,

1. உங்களுக்கு என்ன தெரியுமோ, எதை நன்றாகப் புரிந்துகொண்டீர்களோ அதில் முதலீடு செய்யுங்கள். சரியாகத் தெரியாத நிலையில், அடுத்தவர் பேச்சை நம்பி அவற்றில் முதலீடு செய்து பணத்தை இழக்க வேண்டாம்.

2. உடனடியாக வருமானம் ஈட்ட வேண்டும், மிகவும் குறுகிய காலத்தில் முதலீட்டைப் பன்மடங்கில் பெருக்க வேண்டுமென்கிற ஆசையின் அடிப்படையில் எப்போதும் முதலீடு செய்ய வேண்டாம் என எச்சரிக்கிறார்.

Money

மூன்று சிறுகதைகள்...

நூலாசிரியர் மேலும் 3 சிறுகதைகள் மூலம் கீழ்க்காணும் மூன்று செய்திகளை அழுத்தமாகக் கூறுகிறார்.

1. அந்நியர்கள் எளிதாக உள்ளே நுழைய முடியாதபடி பாபிலோன் நகரைச் சுற்றி சுவர் எழுப்பட்டிருந்தது போல, தங்களை பின்னாளில் ஏற்படக்கூடிய நிதி நெருக்கடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வது அவசியம்.

2. இப்போது எடுக்கும் முடிவுகள் குறித்து பின்னாளில் வருத்தமடையாமல் இருக்க வேண்டுமெனில் சிறிது எச்சரிகையுடன் செயல்பட வேண்டும்.

3. உறுதியுடனும் தீர்மானத்துடனும் இருக்கும்பட்சத்தில், அதற்கேற்ற வழியைக் கண்டறிய முடியும்.

தொழில்முறை பதிப்பாளராக இருந்த இந்நூலாசிரியர் சிக்கனம் பற்றியும், நிதி மேலாண்மை பற்றியும் இந்த மாதிரியான நீதிக் கதைகளின் அடிப்படையில் தனது கருத்துகளை சிறிய கையேடுகளாக அச்சிட்டு காப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகள் மூலம் விநியோகம் செய்ய, அது லட்சக்கணக்கானவர்களை சென்றடைந்தது. அதில் பிரபலமான ஒன்றின் தலைப்புதான் இந்நூலின் தலைப்புமாகும்.

தனிநபர் நிதி, செல்வ உருவாக்கம் (wealth creation) ஆகியவற்றுக்குத் தேவையான அடிப்படையான, அவசியமான தகவல்களை கதைகள் வாயிலாக சுமார் 90 ஆண்டுகளுக்க முன்பே சொல்லியிருக்கும் ஆசிரியரைப் பாராட்ட வேண்டும். வாசிப்பதற்கு எளிதான இந்நூல் மிகவும் செறிவான ஆலோசனைகளையும் கொண்டிருக்கிறது.



source https://www.vikatan.com/business/finance/personal-finance-lessons-from-the-richest-man-in-babylon-book

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக