Ad

திங்கள், 19 அக்டோபர், 2020

வேலூர்: `சி.எம்.சி மருத்துவ சீட்; ரூ.57 லட்சம் மோசடி!’ - பாதிரியார் உட்பட 3 பேர் கைது

செங்கல்பட்டு மாவட்டம், காரணைப்புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், அபுதாபியில் மெக்கானிக்கல் இன்ஜினீயராகப் பணிபுரிந்துவருகிறார். இவரது மகன் ஈஸ்வர், 2017-ம் ஆண்டு நடந்த ‘நீட்’ தேர்வில் தேர்ச்சிப் பெற்றார். மதிப்பெண் குறைவாக இருந்ததால், தனியார் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் மெடிக்கல் ‘சீட்’ கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சீனிவாசன், வேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவக் கல்லூரிக்கு வந்தார். அங்கு மருத்துவ சீட் சம்மந்தமாக யாரை அணுகுவது என்று விசாரித்துள்ளார். சி.எம்.சி-யில் இருந்த சிலர், வேலூர் சி.எஸ்.ஐ சர்ச்சில் பாதிரியாராக இருந்த சாதுசத்தியராஜ் என்பவரைப் பார்க்குமாறு கூறியுள்ளனர். சீனிவாசனும், அந்த பாதிரியாரைச் சந்தித்துள்ளார்.

சி.எம்.சி மருத்துவக்கல்லூரி

பாதிரியார் சாதுசத்தியராஜ், ‘‘காட்பாடி விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த தமிழக மக்கள் முன்னேற்றக்கழக மாவட்டச் செயலாளரான தேவா என்கிற தேவகுமாரையும், அவரது தம்பி அன்புகிராண்ட்டையும் போய் பாருங்கள். அவர்கள் சொல்வதுபோல் நடந்துகொண்டால், உங்கள் மகனுக்குக் கண்டிப்பாக ‘சீட்’ கிடைத்துவிடும்’’ என்று கூறியுள்ளார். அதன்படி, இருவரையும் சீனிவாசன் சந்தித்தார். அப்போது அவர்கள், ‘‘சி.எம்.சி-யில் மெடிக்கல் சீட் வாங்கித் தர வேண்டுமெனில், 57 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும்’’ என்று பேரம் பேசியுள்ளனர். மகனை மருத்துவராக்க ஆசைப்பட்ட சீனிவாசன், அவர்கள் கேட்ட பணத்தை தவணை முறையில் வங்கிக் கணக்கு மூலமாகவும், நேரடியாகவும் கொடுத்துள்ளார்.

ஆனால், மூன்று ஆண்டுகளாகியும் சீட் வாங்கித் தராமலும், பணத்தை திருப்பி தராமலும் பாதிரியார் உட்பட மூன்று பேரும் ஏமாற்றி வந்துள்ளனர். பணத்தை திரும்ப கேட்ட சீனிவாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து, வேலூர் மாவட்ட எஸ்.பி செல்வகுமாரிடம் சில தினங்களுக்கு முன்பு சீனிவாசன் புகார் மனு அளித்தார். இந்த மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவுப் போலீஸாருக்கு எஸ்.பி உத்தரவிட்டார்.

கைது செய்யப்பட்ட 3 பேர்

விசாரணையில், மருத்துவ சீட் வாங்கித் தருவதாக பாதிரியார் சாதுசத்தியராஜ், தமிழக மக்கள் முன்னேற்றக்கழக மாவட்டச் செயலாளர் தேவா, இவரது தம்பி அன்புகிராண்ட் ஆகிய மூன்று பேரும் மோசடி செய்தது உறுதியானது.

இதையடுத்து, போலீஸார் மூவரையும் கைதுசெய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களில், தமிழக மக்கள் முன்னேற்றக்கழக மாவட்டச் செயலாளர் தேவா மற்றும் அவரது தம்பி மீது ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேவா, ரௌடிகள் பட்டியலிலும் இருக்கிறார். கடந்த மே மாதம், சட்ட விரோதமாக கைத்துப்பாக்கியை விற்ற வழக்கிலும், தேவா கைதுசெய்யப்பட்டார். ஜாமீனில் வெளிவந்த சூழலில், மோசடி புகாரில் அவர் மீண்டும் சிறைச் சென்றிருக்கிறார் என்கிறது வேலூர் காவல்துறை.



source https://www.vikatan.com/news/crime/vellore-cmc-medical-seat-rs-57-lakh-fraud-3-arrested-including-priest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக