Ad

வியாழன், 15 அக்டோபர், 2020

47 வேட்பாளர்கள்... சென்னையில் சீமான்? - களத்தில் இறங்கிய நாம் தமிழர் கட்சி! #TNElection2021

தமிழக அரசியல் களத்தில், ஆளும் அ.தி.மு.க-வில் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற சர்ச்சை சமீபத்தில்தான் முடிவுக்கு வந்தது. மறுபுறம் எதிர்க்கட்சியான தி.மு.க-விலும் தேர்தல் அறிக்கை அமைப்பதற்கான குழு அறிவிக்கப்பட்டுள்ளது.. தினகரனின் அ.ம.மு.க, கமலின் மக்கள் நீதி மய்யமும் இப்போதுதான் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியுள்ளன. ஆனால், நாம் தமிழர் கட்சியில், 47 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, அவர்கள் தீவிரமான பரப்புரையிலும் இறங்கி வாக்குச் சேகரித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், 2021 சட்டமன்றத் தேர்தலையொட்டி அந்தக் கட்சியில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவுகள் குறித்துப் பார்ப்போம்.

கையில் கரும்புடன் வந்து வேட்புமனுதாக்கல் செய்த நாம் தமிழர் வேட்பாளர் சாகுல் ஹமீது!

இயக்கமாகச் செயல்பட்டுவந்த நாம் தமிழர் அமைப்பு, 2010-ம் ஆண்டுதேர்தலில் போட்டியிடும் கட்சியாகப் பரிணமித்தது . தொடர்ந்து நடைபெற்ற 2011 சட்டமன்றத் தேர்தல், 2014 நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் அந்தக் கட்சி போட்டியிடவில்லை. முதன்முறையாக, 2016 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களைக் களமிறக்கி, தனித்து தேர்தலைச் சந்தித்தது அந்தக் கட்சி. ஒட்டுமொத்தமாக, 4,58,104 வாக்குகள் பெற்றது. வாக்கு விழுக்காட்டைப் பொறுத்தவரை 1.07 விழுக்காடு பெற்று, தமிழக அரசியல் கட்சிகளின் பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது. தொடர்ந்து, 2019 நாடாளுமன்றத் தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது நாம் தமிழர் கட்சி. 20 தொகுதிகளில் ஆண், 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களைக் களமிறக்கி 16,45,185 வாக்குகள் பெற்றது அந்தக்கட்சி. வாக்கு விழுக்காடு 1.07 லிருந்து 3.87 ஆக அதிகரித்தது.

அதனைத் தொடர்ந்து 2019 ஆண்டின் இறுதியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் கணிசமான வாக்குகளைப் பெற்றது அந்தக் கட்சி. இந்தநிலையில், 'கடந்த முறைகளைப் போலவே இந்தமுறையும் தனித்துப் போட்டியிடுவோம். மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், 117 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களும் மீதம் உள்ள 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களுமாக சரிசமமாகப் போட்டியிடுவார்கள்' என்றும் அறிவித்தார் அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அதுமட்டுமல்லாமல், ராமநாதபுரம், திருவாடானை, திருப்பூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, பூம்புகார், திருவையாறு, விழுப்புரம், வானூர், கும்பகோணம், தஞ்சாவூர் என தமிழகம் முழுக்கப் பரவலாக 47 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 47 தொகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட பெண் வேட்பாளர்கள் மற்றும் மாற்று மொழியைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அறிவிப்பு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்கள் இப்போதே தங்கள் தொகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். கட்சியில் பல வருடமாக இருப்பவர்கள், படித்தவர்கள், களப்பணியாளர்கள் எனப் பலதரப்பட்டவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதில், பொதுத் தொகுதிகளில் பட்டியலினத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சம். அதேபோல, சில தொகுதிகளில், சிறுபான்மையாக இருக்கும் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

'நாம் தமிழர்' காளியம்மாள்

தவிர பூத் கமிட்டிக்காக 'துளி', ' செயற்களம்' என்கிற பெயர்களில், சொந்தமாக சாஃப்ட்வேர் தயாரிக்கப்பட்டு, அதன்மூலம் இதுவரை எட்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்தமுறை வட சென்னையில் போட்டியிட்ட காளியம்மாள், இந்தமுறை பூம்புகார் தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல, கடந்தமுறை கடலூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான், இந்தமுறை தென் மாவட்டமான சிவகங்கை அல்லது காரைக்குடி தொகுதியில் போட்டியிடுவதாக இருந்தது. காரணம், காரைக்குடி தொகுதியில் பூத் கமிட்டிக்கான வேலைகள் பாதியளவு தற்போதே முடிவடைந்துவிட்டதால், அந்தத் தொகுதிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. ஆனால், காரைக்குடி தொகுதி சீமானுக்கு சாதகமாக இருக்காது என்கிற முடிவுக்கு தற்போது வந்துள்ளனர். அதேபோல, சிவகங்கை தொகுதியிலும் சாதி ரீதியான வாக்குகள்தான் வெற்றியைத் தீர்மானிக்கும். தவிர குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள்தான் அங்கே தொடர்ச்சியான வெற்றியை பெற்றிருப்பதால், அந்தத் தொகுதியில் போட்டியிடுவதும் கைவிடப்பட்டுள்ளது

Also Read: `4 ஐ.டி விங்' திமுக., `நோ சமாதானம்' சீமான், காயத்ரி ரகுராம் `கலகம்'... டிஜிட்டல் கழுகார் அப்டேட்ஸ்!

எனவே, ஊர்ப்பகுதிகளில் நிற்பதைவிட சென்னையில் ஒரு தொகுதியில் சீமான் போட்டியிடலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதில், வாக்காளர்கள் குறைவாக உள்ள ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடலாம் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்ற தொகுதிகளைவிட ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டால், வெற்றிவாய்ப்புகள் இருக்கின்றன எனக் கருதுகிறார்கள் அந்தக் கட்சியின் முன்னணி நிர்வாகிகள்.

கமல் - சீமான்

தவிர, 2016 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வெளியான தேர்தல் அறிக்கை பல தரப்பினராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. அதேபோல இந்த முறையும், தமிழகத்தில் ஒவ்வொரு துறை சார்ந்து வரைவறிக்கைகள் வெளியிட முடிவெடுக்கப்பட்டு வேலைகள் நடந்துவருகின்றன.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போதே, '8 விழுக்காடு வாக்குகளைப் பெற்று தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறவேண்டும்' என்பது அந்தக் கட்சியினரின் நோக்கமாக இருந்தது. ஆனால், அவர்களால் வெறும் நான்கு விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. ''கமல் தனியாகக் கட்சி ஆரம்பித்து நான்கு விழுக்காடு வாக்குகளைப் பெற்றதால்தான் எங்களால் பெறமுடியவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, ஐம்பதுக்கும் மேலான சட்டமன்றத் தொகுதிகளில் 10-15 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கிறோம். அதனால், இந்தமுறை கண்டிப்பாக விடமாட்டோம்'' என நம்பிக்கையோடு பேசுகிறார்கள் அந்தக் கட்சியின் முன்னணி நிர்வாகிகள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/nam-tamilar-partys-strategies-for-2021-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக