Ad

வியாழன், 15 அக்டோபர், 2020

படபட பட்டாசாக வெடித்த அர்ச்சனா; `விருதுகள்' கலாட்டா; பீதியான ஆஜித் – பிக்பாஸ் நாள் 11

''லேட்டா வந்தா அர்ச்சனா ஸ்வீட்டோடதான் வரணும்'' என்பது ஒரு பழைய ரேடியோ விளம்பரம். ஆனால் பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனாவே லேட்டாகத்தான் வந்திருக்கிறார். (எப்படி பன்ச்?..).

இதமான குரலில் பாந்தமாக நிகழ்ச்சியை தொகுப்பளிப்பவர்கள் சிலரே. மாறாக ஹைடெஸிபலில் பேசுவதுதான் Anchor-ன் அடையாளம் என்று உக்கிரமாக செயல்படுபவர்களின் வரிசையில் ஒருவர் அர்ச்சனா.

நிகழ்ச்சியில் பிறகு வந்து இணைந்து கொள்பவர்கள், முந்தைய போட்டியாளர்களை நிறைய சீண்டும் வகையில் செயல்படுவது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஸ்டைல். பிக்பாஸ் நிறைய டிரைனிங் கொடுத்து அனுப்புவார் போல. அர்ச்சனாவிற்கு இந்தத் திறமை இயற்கையிலேயே இருக்கிறது.

என்ன நடந்ததென்று விரிவாகப் பார்ப்போம்.

பிக்பாஸ் - நாள் 11

பத்தாவது நாள் காலை. நவீன நுட்பத்தில் மிக்ஸியில் அடித்த ஏதோவொரு பாடல் ஒலித்தது. “இப்ப என்ன.. எழுந்து ஆடியாகணுமா... இந்த பிக்பாஸ் கூட ஒரே இம்சைடா...” என்று ஆன்லைன் கிளாஸிற்கு சலிப்புடன் எழுந்து கொள்ளும் பிள்ளைகள் மாதிரி போட்டியாளர்கள் எழுந்து ஆடினார்கள்.

"காலைல எழுந்தவுடனே பல்லு வெளக்கறோமோ, இல்லையோ... மேக்கப் போட மறக்க மாட்டோம்” என்று முப்பெரும் தேவியரான ரம்யா, ஷிவானி, சம்யுக்தா கூட்டணி கேமராவின் முன்பு சுயவாக்குமூலம் தந்து கொண்டிருந்தது. அதிலும் ஷிவானி நிமிடத்திற்கொரு முறை கண்ணாடிக்கு நெருக்கமாக க்ளோசப் ஷாட்டிற்கு தானாகச் சென்று ஒப்பனையைச் சரி செய்து கொள்கிறார்.

லக்‌ஷுரி பட்ஜெட் டாஸ்க் தொடர்ந்தது. ‘ஆடல் பாடல்’ நிகழ்ச்சியில் அடுத்த ஜோடி ரமேஷ் மற்றும் ரேகா. அதிகம் அசையாமல் நின்ற இடத்திலேயே ரேகா ஆடிக் கொண்டிருக்க, கடிகார முள் போல் அவரைச் சுற்றிச் சுற்றி வந்து ஆடி சமாளித்தார் ரமேஷ். இருவருக்குமான கெமிஸ்ட்ரி, ஃபிஸிக்ஸ், ஜியாகிராஃபி என்று எதுவும் வெளிப்படவில்லை.

“அந்த ‘டமுக்கு டம்மா பீட்டுக்கு நான் என்ன சொல்லிக் கொடுத்தேன்... நீ என்ன ஆடினே... Am totally disappointed" என்று டான்ஸ் மாஸ்டராக மாறி ரேகாவை ஜாலியாக திட்டிக் கொண்டிருந்தார் நிஷா.

அடுத்தது அட்டகாசமான பாடல் ஒலித்தது. ''வெண்ணிலவே வெண்ணிலவே... விண்ணைத் தாண்டி வருவாயா’'. சோம் மற்றும் சம்யுக்தாவிற்கு நடனம் சுமாராகத்தான் வரும் போலிருக்கிறது. அதிலும் சோம் இன்னமும் மோசம். மரத்தில் சிக்கிக் கொண்ட காத்தாடியை இழுப்பது போல் என்னவோ செய்து கொண்டிருந்தார். “ஏண்டா சாம்பார் சாப்பிட்டு கையை சட்டை மேலேயே துடைச்சுக்கற மாதிரி என்ன டான்ஸ் இது?!” என்று சோமைப் பிறகு கலாய்த்துக் கொண்டிருந்தார் சுரேஷ்.

பிக்பாஸ் - நாள் 11
அடுத்து வந்ததும் ஓர் அட்டகாசமான பாடல். அந்தக் காலத்தின் குத்துப் பாடல். "மாமா மாமா...” ஆரி ஒரு மாதிரியாக பிக்கப் செய்து கொண்டிருக்க, மேடைக்கு வந்த வேகத்திலேயே மூன்றாம் கியரைப் போட்டு முன்னேறி அசத்தினார் ரம்யா.

தனக்கு வாய்ப்பு வந்த போது அவ்வளவாக நடனம் ஆடாத ரேகா, இந்தப் பாடலுக்கு மட்டும் தொலைவில் நின்றபடி அபிநயங்களாக கொடுத்துக்கொண்டிருந்தார். பிக்பாஸ் கேமரா டீமில் எவரோ ஒரு தீவிரமான ரேகா ரசிகர் இருக்கிறார் போல. க்ளோஸப் ஷாட்களாக வைத்து நம்மைப் பயமுறுத்தினார்.

‘செல்லம்மா… செல்லம்மா...’ என்கிற பாடல் அடுத்தது. வேகமாக ஆடுகிறேன் பேர்வழி என்று கை, காலை உதறி பாலா எதையோ செய்து கொண்டிருக்க, காலை நடனங்களில் ஆடுவது போலவே இங்கும் தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருந்தார் ஷிவானி.

“அங்கிள்... இந்த ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்ததற்கு ரொம்ப தேங்க்ஸ்" என்று சொல்லும் கான்வென்ட் பாப்பா மாதிரி, "எனக்குப் பிடிச்ச பாட்டை போட்டதற்கு ரொம்ப தேங்க்ஸ் பிக்பாஸ்” என்று கேமரா முன்பாக செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தார் ஷிவானி. (பாஸ் இந்த சப்ஜெக்ட்டுக்கு இப்ப மூவ்மென்ட் வர ஆரம்பிச்சிருக்கு... பேசக் கூட செய்யுது!).

‘தனி ஒருவன்’ படத்தில் அரவிந்த் சாமி பேசும் வில்லத்தனமான வசனமும் பாடலும் ஒலித்தது. ‘யாரோ வர்றாங்க’ என்று மக்கள் பரபரப்பானார்கள். ‘நான் ஜக்கம்மா வந்திருக்கேண்டா.. உங்களுக்கெல்லாம் செய்தி சொல்லப் போறேன்’ என்கிற பாணியில் உடம்பை விசித்திரமாக உதறிக் கொண்டே வந்தார் அர்ச்சனா. பிக்பாஸ் வீட்டில் ஒரு புது வரவு.

சில முகங்களில் மகிழ்ச்சி. சில முகங்களில் போலியான மகிழ்ச்சி. சில முகங்களில் ‘என்னடா... இது புது இம்சை’ என்பது போன்ற கவலை. வீட்டிற்கு உறவினர்கள் வந்தால் கூச்சப்பட்டு உள்ளே ஒளிந்து கொள்ளும் பிள்ளைகள் மாதிரி உள்ளே உலவிக் கொண்டிருந்தார் ஷிவானி. (யாரு வந்திருக்காங்கன்னு பாரு... அங்கிளுக்கு ஒரு ரைம்ஸ் சொல்லு பார்க்கலாம்!).

பிக்பாஸ் - நாள் 11

''என்னை முறைப்படி வரவேற்றாதான் உள்ளே வருவேன்” என்று வேல்முருகனிடம் அர்ச்சனா அடம்பிடிக்க, ‘வண்ண நிலவே வா... வசந்த முல்லையே வா’ என்று இத்துப் போன அந்த டேப்ரிகார்டரை ‘ஆன்’ செய்தார் வேல்முருகன். வாயிற்காப்போன் கட்டியம் கூற அரண்மணைக்குள் நுழைந்தார் மகாராணி.

சரவெடி மாதிரி நான்ஸ்டாப்பாக பேசிக் கொண்டேயிருந்தார் வீட்டிற்குள் நுழைந்த அர்ச்சனா. வரவேற்பறை சோஃபாவில் ‘பப்பரப்பே’ என்று ஒய்யாரமாக படுத்திருந்த சுரேஷின் போஸை அநியாயத்திற்குப் பங்கம் செய்தார். அர்ச்சனாவின் கிண்டல்கள் சுரேஷை கடுப்பேற்றினாலும் ஒரு மாதிரியாக சமாளித்தார். ‘யோகா... யோகா’ என்று சுரேஷ் அரற்றியது போல் தெரிந்தது. அப்புறம் பார்த்தால் அது ‘போஹா’ என்கிற மராட்டிய உணவாம். “நான் மராட்டின்னு யார் சொன்னது?” என்று மெலிதாக கடுப்பானார் அர்ச்சனா. (இரண்டு பேருக்கும் சண்டை வரும் போலிருக்குது... ஹைய்யா.. ஜாலி!).

96 திரைப்படத்தின் திரிஷா ஆடைக்குப் பிறகு ரேகா தலையில் அணிந்திருக்கும் பட்டைதான் இப்போதைக்கு வெளியில் ஃபேஷனாம். “எங்க வீட்டுக்காரர் தனியாத்தானே இருக்காரு?” என்று நிஷா ஜாலியாக விசாரிக்க “அவரு ரெண்டைத் தாண்டி மூணாவதுக்கு ட்ரை பண்ணிட்டிருக்காரு” என்று பதில் சொன்னார் அர்ச்சனா.

“ஏண்டா.. என்னை குறுகுறு –ன்னு பார்க்கறே’ -பெட்டிக்கடையில் பாவமாக நின்று கொண்டிருக்கும் வடிவேலுவை ஒரு சில்லறை ரவுடி, இப்படி மிரட்டுவது போல ‘என்னடா செல்லம் வேணும்?” என்று தன்னையே பார்த்துக் கொண்டிருந்த அனிதாவை அர்ச்சனா விசாரிக்க ‘இல்ல.. லோ ஆங்கிள்ல அப்படித் தெரியுது’ என்று அனிதா சமாளிக்க “நீ நின்னாலே அது லோ ஆங்கிள்தான்’ என்று யாரோ கிண்டலடித்தார்கள்.

‘தன் இமேஜ் வெளியே டேமேஜ் ஆகி விட்டதோ, அதை செய்தியாக வாசித்து விட்டார்களோ’ என்று அனிதாவிற்குள் சஞ்சலம். “மக்கள் மறந்து போனா கூட நீ விட மாட்டே போலிருக்கே” என்றார் அர்ச்சனா.

பிக்பாஸ் - நாள் 11
பிறகு வந்த வேலையைத் துவங்கினார் அர்ச்சனா. ஏற்கெனவே சொன்னபடி முந்தைய போட்டியாளர்களை புது போட்டியாளரின் மூலம் சீண்டுவதுதான் பிக்பாஸ் ஸ்டைல். “இதெல்லாம் என்னோட கருத்து இல்ல. நான் ‘மக்கள் பிரதிநிதி’யாத்தான் வந்திருக்கேன்” என்று டிஸ்கிளைமரோடு கொளுத்திப் போடும் பணியை ஆரம்பித்தார் அர்ச்சனா. (மக்கள் பிரதிநிதி சீனியர் ஒருத்தர் இருக்காரே?!).

பத்து நாள் நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளர்களைப் பற்றிய மக்கள் கருத்து என்னவாக இருக்கிறது என்பதை ‘வில்லங்கமான விருது’ தருவதின் மூலம் உணர்த்துவார்களாம். எரியும் நெருப்பில் எண்ணைய் ஊற்றுவது போல ‘எக்ஸ்ட்ரா’ விளக்கங்களைக் கொடுத்து போட்டியாளர்களை மேலும் கடுப்பேற்றினார் அர்ச்சனா. அப்படியே நம்மையும்.

‘Simply waste, No Comments’ என்கிற செந்திலின் காமெடி வசன விருதை முதலில் பெற்றவர் பாலா. சலனம் இல்லாத இயந்திர முகத்துடன் வாங்கிச் சென்றார். இதே விருது ரேகாவிற்கு வழங்கப்பட்டது போல. ஆனால் இந்தக் காட்சி காண்பிக்கப்படவில்லை.

சில மாணவர்கள், காலாண்டு - அரையாண்டு தேர்வுகளில் ஓபி அடித்து விட்டு ஆண்டுத் தேர்வில் மட்டும் விழுந்து விழுந்து படித்து எப்படியோ பாஸ் ஆகி விடுவார்கள். ரம்யாவின் கதை அது போலதான். சரியான நேரத்தில் மொட்டை பாஸூக்கு கவுன்ட்டர் கொடுத்த காரணத்தினால் ‘சவாலான போட்டியாளர்’ விருதைப் பெற்றார். ‘ரியோ’விற்கும் இதே விருது.

‘ஷோகேஸ் பொம்மை” விருது சம்யுக்தாவிற்கும் சோமிற்கும் கிடைத்தது ஏகப்பொருத்தம். ‘அட்மாஸ்ஃபியர் ஆர்ட்டிஸ்ட்’ விருது பற்றி அர்ச்சனா விளக்கிக் கொண்டிருக்கும் போதே ஷிவானியின் முகத்தில் நவரசங்களும் தெறிக்க ஆரம்பித்தன. எதிர்பார்த்தது போல் அவருக்கே அது கிடைக்க, விருதை வேண்டா வெறுப்பாக கழற்றி வைத்தார் ஷிவானி. பிக்பாஸ் அதட்டல் போட்டு மாட்டச் சொன்னவுடன் “ஏண்டா.. அங்கிள் .. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதானே உன்னை செல்லம் கொஞ்சினேன். இப்ப உன் பேச்சு கா.. போடா” என்கிற பிடிவாத முகத்துடன் எடுத்து மாட்டிக் கொண்டார்.

பிக்பாஸ் - நாள் 11

இதே அட்மாஸ்ஃபியர் விருது வேல்முருகனுக்கும் கிடைத்தது. ('வண்ணநிலவே வா’ டயலாக்கைத்தாண்டி வெளியே வரணும்).

‘நமத்துப் போன பட்டாசு’ விருது சனத்திற்கு சாலப் பொருத்தம். ஆனால் சுயமுன்னேற்ற கிளாஸ் எடுக்கும் ஆரிக்கும் இதே விருது கிடைத்ததில் நொந்து போனார். இப்போது அவருக்கு யாராவது வகுப்பெடுக்க வேண்டும் போலிருக்கிறது.

‘காணவில்லை’ விருது ஆஜித்திற்கும் கேபிக்கும் கிடைத்தது. இதில் ‘காணவில்லை’ விருது ஆஜித்திற்கு மிகப் பொருத்தம். தனக்கு கிடைத்த ஃப்ரீ பாஸை பிறகு தொலைத்து விட்டு ‘காணவில்லை’ என்று அரற்றிக் கொண்டிருந்தார்.

‘ஆமா சாமி’ விருது நிஷாவிற்கும் ரமேஷிற்கும் கிடைத்தது. ‘அடப்பாவிங்களா.. எனக்காடா இது?” என்று சலித்தபடி வாங்கிக் கொண்டார் நிஷா. பிறகு ரியோவிடம் தனது இமேஜ் பற்றி கவலையுடன் பேசிக் கொண்டிருந்தார்.

கடைசி விருது. ‘பிக்பாஸ் 4 டிரெண்டிங்’ – வந்த நாளில் இருந்தே முட்டிக் கொண்டிருக்கும் சுரேஷிற்கும் அனிதாவிற்கும் இது கிடைத்தது. “ஆனா. இது நல்லதா. கெட்டதா’ன்னு தெரியாது" என்று சொல்லி அனிதாவை சந்தோஷப்பட விடாமல் வயிற்றில் புளியைக் கரைத்தார் அர்ச்சனா.

தங்களின் இமேஜ், இதுவரையான பங்களிப்பு மீதான விமர்சனம், மக்களின் அபிப்ராயம் போன்ற விஷயங்கள் குறித்த கவலை போட்டியாளர்களின் முகங்களில் பிரதிபலித்தது.

பிக்பாஸ் - நாள் 11

‘மேம்.. ஷோகேஸ் பொம்மை-ன்னு சொன்னீங்களே.. அது கடைக்கு வெளியே வெக்கற பொம்மையா. இல்ல, உள்ளே இருக்குமே அதுவா?” என்று அர்ச்சனாவிடம் சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்தார் சோம். “என்னப்பா மார்ஷியல் ஆர்ட்ஸ்-ன்ற... இதுவரைக்கும் ஒரு ஃபர்னிச்சரைக் கூட நீ உடைக்கலையே.. போன சீஸன்ல பார்த்தியா... கைல குத்தியே முகேன் கட்டிலை உடைச்சிட்டான். அது புள்ள” என்று அட்வைஸ் கொடுத்துக் கொண்டிருந்தார் அர்ச்சனா.

‘நமத்துப் போன பட்டாசு’ என்கிற சொற்பிரயோகத்தை பிக்பாஸ் வீட்டில் அதிகம் உபயோகித்தவர் சுரேஷ். அந்தப் பெயரிலேயே ஒரு விருதை உருவாக்கி விட்டார் பிக்பாஸ். அதை வாங்கியவர்களுள் ஒருவரான ஆரி கவலையாக உட்கார்ந்திருக்க “அதெல்லாம் வெயில்ல காய வெச்சா சரியாப்பூடும்” என்று உபதேசம் செய்தார் சுரேஷ். (சமுத்திரக்கனிக்கே அட்வைஸ் கிளாஸா…? கலிகாலம்தான்).

பிக்பாஸை ‘கரெக்ட் செய்ய’ நிஷாவிற்கும் அர்ச்சனாவிற்கும் இடையில் ஜாலியான போட்டி ஏற்பட, அவர் அலறியடித்துக் கொண்டு ஆப்கானிஸ்தானிற்கு போயிருப்பார் என்று தோன்றுகிறது.

பூனை தன் குட்டியை இடம் மாற்றுவது போல தனக்கு கிடைத்த ‘ஃப்ரீ பாஸை’ வெவ்வேறு இடத்தில் ஒளித்து வைத்து அல்லாடிக் கொண்டிருந்தார் ஆஜித். (என்ன இம்சைடா இது?!). அவர் ஒளித்து வைத்ததை பாலா பார்த்து விட, அதை தான் எடுத்துக் கொண்டு சற்று நேரம் ஆஜித்தை ஆட்டம் காண வைக்கலாம் என்று பிளான் போட்டார்.

“ஆனா நான் சிரிக்காம இருக்கணும்... அதான் என் கவலை’ என்று சொன்ன பாலா, அவர் கவலைப்பட்டது போலவே பிறகு சிரித்து தன்னையே காண்பித்துக் கொண்டார். (அப்ப Simply waste… விருது பொருத்தம்தான் போல). ‘எங்கடா தொலைச்ச?” என்று அவர் பொதுவில் ஓவர் ஆக்ட் செய்ததும் காரணம்.

பாஸைத் தொலைத்து விட்டு பேய் அறைந்தது போன்ற முகத்துடன் சுற்றிக் கொண்டிருந்த ஆஜித்தின் முகத்தில் அப்போதுதான் உயிர் வந்தது.

பிக்பாஸ் - நாள் 11
பிறகு நடந்தது அந்தச் சம்பவம். ‘விளையாட்டு வினையாகும்’ என்கிற பொன்மொழிக்கு உதாரணமாக இந்தச் சம்பவத்தைப் பார்க்கலாம்.

நம் வீடுகளில் கூட இது நடக்கும். உறவினர்கள் கூடியிருக்கும் சபையில் எவராவது ஒரு மெல்லிய கிண்டலை விளையாட்டாக எடுத்து விடுவார். அதனால் புண்பட்டவர் மறைமுகமாக எதையாவது சொல்ல, அந்த நெருப்பு மெல்லப் பற்றிக் கொண்டு அடிதடி வரைக்கும் கூட சென்று விடலாம்.

ஆஜித் வைத்திருந்த ‘ப்ரீ பாஸை’ ‘கொடுடா... தம்பி, பார்த்துட்டு தந்துடறேன்’ என்று ஆரியும் ரமேஷூம் கேட்க, அப்போதுதான் அதைப் பறிகொடுத்து பிறகு மீட்ட பீதியுடன் இருந்த ஆஜித், தருவதற்குத் தயங்க ‘அப்படியா தம்பி... பார்த்துக்கலாம்” என்று என்று அவர்கள் இருவரும் சவால் விட்டனர்.

பிறகு ஆஜித் அசந்திருக்கும் நேரம் பார்த்து அவரது பாக்கெட்டில் இருந்து பாஸை உருவிய ரமேஷ், ஆரியிடம் கொடுத்து விட ‘இதை நீ எப்படி வாங்கறேன்னு பார்க்கறேன்” என்று சிரிப்பும் சீரியஸமுமாக சொன்னார் ஆரி.

“நீ சவால் விடுடா.. தம்பி பார்த்துக்கலாம்” என்று ஆஜித்தை முதலில் உசுப்பேற்றிய பாலா, இப்போதோ ‘என்னை நம்பியாடா. களத்துல இறங்குவே?” என்று கைவிட்டார். (ஆக Simply waste விருது மறுபடியும் உறுதியானது).

பாஸை மறுபடியும் பறிகொடுத்த பீதி ஆஜித்தின் முகத்தில் தெரிய ஆரம்பித்தது. (பாவம் புள்ள...). இதைக் காணச் சகியாத நிஷா ஒரு காரியம் செய்தார். “கொடு... சத்தியமா திருப்பித் தந்துடறேன்" என்று ரமேஷிடமிருந்து பாஸை வாங்கி தாவிச் சென்று ஆஜித்திடம் கொடுத்து விட்டார்.

பிக்பாஸ் - நாள் 11
இதை ரமேஷூம் ஆரியும் தன்மானப் பிரச்னையாக எடுத்துக் கொண்டனர். ரமேஷ் கோபித்துக் கொண்டு வெளியேறி விட்டார். “நாங்க என்னமோ கெட்டவங்க மாதிரி ஆயிடுச்சில்ல... கொஞ்ச நேரம் விளையாடிட்டு தந்துடப் போறோம்” என்பது அவர்களின் தரப்பு வாதம். “உன்னை நம்பி கொடுத்தேன்... இப்படிப் பண்ணலாமா?” என்பது ரமேஷின் கோபம்.

ஆக, விளையாட்டு வினையானது என்பதைப் புரிந்து கொண்ட நிஷா “அய்யோ... என் மண்டைக்கு இதெல்லாம் புரியவேயில்லையே... லூஸாவே இருந்துட்டேன்’ என்று தொடர்ந்து அனத்தி அழ ஆரம்பிக்க அனைவரும் அவரைச் சமாதானம் செய்ய முயன்றார்கள். “ஹலோ.. இதெல்லாம் சப்பை மேட்டர்... இதுக்கெல்லாம் போய் டீப்பா யோசிக்காத’ என்று ரியோ சொன்னது ஒரு ஹைலைட். ரமேஷிடம் மீண்டும் மீண்டும் நிஷா கெஞ்சியது சற்று அதீதமாகப் பட்டது.

Also Read: `குரூப்பிஸம் இருக்கா இல்லையா?' ஆடலுடன் பாடலைக் கேட்டு... பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 10

பிக்பாஸ் - நாள் 11

ஆனால் - ‘கலக்கப் போவது காமெடி குழு’வில் இருக்கும் உணர்வை தனது கலகலப்பு பேச்சின் மூலம் ரமேஷ்தான் தருகிறார்’ என்று முன்னமே சொல்லியிருக்கிறார் நிஷா. ஆக ரமேஷின் கோபமும் வருத்தமும் அவரை உண்மையிலேயே கலங்கச் செய்திருக்கலாம்.

நிஷாவின் அழுகைக்குப் பிறகு ஒருவழியாக இந்த டிராமா முடிவிற்கு வந்தது. ஆஜித் பாஸை மறுபடியும் நிஷாவிடம் தர முன்பு நடந்த விஷயத்தை ரிவர்ஸ் ஷாட்டில் செய்தனர். ஆஜித்தின் முகத்தில் சங்கடம், வருத்தம், அச்சம் போன்றவை அப்பட்டமாக தெரிந்தன. பாவம்... அந்தப் பையனை இத்தனை வருத்தியிருக்க வேண்டாம்.

ஒரு ஞானப்பழத்தைக் கொடுத்து பரமசிவனின் குடும்பத்தில் குழப்பத்தை விளைவித்த நாரதர் போல, ஃப்ரீ பாஸ் என்பதை வைத்து ரணகளமாக விளையாடி மகிழ்கிறார் பிக்பாஸ்.


source https://cinema.vikatan.com/television/archana-entry-and-eviction-free-pass-comedy-bigg-boss-tamil-season-4-day-11-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக