Ad

செவ்வாய், 6 அக்டோபர், 2020

ஹத்ராஸ் சம்பவம்: `அதிகாலை 2.30 மணிக்குத் தகனம் ஏன்?' - உச்ச நீதிமன்றத்தில் உ.பி அரசு விளக்கம்

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பட்டியலின இளம்பெண், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தால், கடுமையாகப் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண், டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 29-ம் தேதி உயிரிழந்தார். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

எரிக்கப்பட்ட பெண்ணின் உடல் - ஹத்ராஸ்

இந்தசூழலில், டெல்லியில் இருந்து இளம்பெண்ணின் உடலை ஹத்ராஸ் கொண்டுவந்த போலீஸார், அவசர அவசரமாக அதிகாலை 2.30 மணியளவில் தகனம் செய்தனர். இளம்பெண்ணின் உடல் தகனம் செய்ய குடும்பத்தினரிடம் அனுமதி பெறப்படவில்லை எனவும், உடல் தகனம் செய்யப்பட்டபோது இளம்பெண்ணின் பெற்றோர் வீட்டில் வைத்து பூட்டப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியானது. பெண்ணின் உடலைத் தங்களிடம் ஒப்படைத்துவிடுமாறு போலீஸாரிடம் பெற்றோர்கள் கெஞ்சியும் ஒப்படைக்கவில்லை என்று கூறி வீடியோ ஒன்றும் வெளியானது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்த நிலையில், தேசிய அளவில் போராட்டங்களும் வெடித்தன.

இந்தநிலையில், ஹத்ராஸ் சம்பவம் தொடர்பான வழக்கில் உத்தரப்பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், `இளம்பெண் இறந்தநிலையில், மறுநாள் காலை போராட்டங்கள் வெடிக்க இருப்பதாக உளவுத் துறை மூலம் தகவல் கிடைத்தது. அதில், வன்முறை ஏற்படலாம் என்றும் தெரியவந்தது. பெரிய அளவில் வன்முறைச் சம்பவங்களைத் தவிர்ப்பதற்காகவே அதிகாலை 2.30 மணியளவில் இளம்பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டது' என உ.பி அரசு குறிப்பிட்டுள்ளது.

உயிரிழந்த பெண்

Also Read: ஹத்ராஸ் இளம்பெண் குடும்பத்தினர் கோரிக்கை என்ன? - 5 விஷயங்களைப் பட்டியலிட்ட பிரியங்கா காந்தி

மேலும், பெற்றோர்கள் அனுமதியுடன் அந்தப் பெண்ணின் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்ட பின்னரே, தகனம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், செப்டம்பர் 29-ம் தேதி காலையில் இரண்டு சமூகங்கள்\சாதிகளைச் சேர்ந்தவர்களும் தங்களது லட்சக்கணக்கான ஆதரவாளர்களோடும் அரசியல் கட்சியினரோடும் சேர்ந்து பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டிருப்பதாக ஹத்ராஸ் மாவட்ட நிர்வாகத்துக்குத் தகவல் கிடைத்தது. அதேபோல், இந்த பிரச்னைக்கு சாதிய சாயம் பூசவும் முயற்சிகள் நடப்பதாகத் தகவல் கிடைத்தது.

லட்சக்கணக்கான மக்கள் ஹத்ராஸ் கிராமத்தில் செப்டம்பர் 29-ம் தேதி காலையில் போராட்டம் நடத்துவதற்காகக் கூட இருப்பதாகவும், அந்தப் போராட்டத்தில் வன்முறை வெடிக்கலாம் என்றும் உளவுத் துறை எச்சரித்திருந்தது. இதையடுத்து, வன்முறைச் சம்பவங்களைத் தவிர்ப்பதற்காகவே இளம்பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டது என உ.பி அரசு தெரிவித்திருக்கிறது. மேலும், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு, கொரோனா விதிமுறைகள் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு அரசு இந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது.

Also Read: ஹத்ராஸ்: கூட்டுப் பாலியல் வன்முறை... சி.பி.ஐ விசாரணை வரை... நடந்தது என்ன?

உச்ச நீதிமன்றம்

இதுபோன்ற அசாதாரண சூழல் நிலவியதால், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஏறக்குறைய 20 மணிநேரம் கழிந்த நிலையில், அந்த இளம்பெண்ணின் உடலை உரிய மரியாதை, இறுதிச் சடங்குகள் செய்து தகனம் செய்ய பெற்றோரிடம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பேசி சம்மதம் பெறப்பட்டது. இளம்பெண்ணின் உடல் விரைவாகத் தகனம் செய்ய, வன்முறைச் சம்பவங்களைத் தவிர்ப்பதைத் தவிர வேறு எந்த தவறான நோக்கமோ, காரணமோ இல்லை என்றும் உ.பி அரசு தெரிவித்திருக்கிறது. இந்த வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள உ.பி அரசு, சிபிஐ விசாரணைக்கு மாற்றவும் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் எனவும் உ.பி அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/up-government-files-affidavit-in-sc-over-hathras-incident

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக