Ad

செவ்வாய், 6 அக்டோபர், 2020

ஒத்திகை டாஸ்கில் பறந்த ஹார்ட்டின்கள்; முதல் தலைவர் ரம்யா... பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 1

பிக்பாஸ் தமிழ் சீஸன் நான்கின் முதல் நாளில் முதல் விஷயமே மங்கலகரமாக அமைந்தது. ஆம்... ஒற்றை பாத்ரூமை வைத்துக் கொண்டு 16 பேர் எப்படி? பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ முடியுமா?

எனவே ‘எதுக்கு பாஸ் இதைப் போய் பூட்டி வெச்சிருக்கீங்க?.. உள்ளே இருக்கற பொருள் திருட்டா போயிடும்?.. தோட்டம் அழகா இருக்கு... பார்த்துக்கங்க” என்று கமல் முன்பே அளித்த வேண்டுகோளின் படி இரண்டு பாத்ரூம்களையும் திறந்து விடுவதாக பிக்பாஸ் அறிவித்தார். போட்டியாளர்களின் முகங்களில் அப்படியொரு ‘ரிலீஃப்’. பின்னே.. சும்மாவா? முக்கியமான விஷயம் ‘ஆய்’யிற்றே?

எனில் இந்தச் சவால் சும்மா ‘லுலுவாயிக்குதான்’ போலிருக்கிறது.

கழிவறையை முதல் நாளிலேயே ‘திறப்பு விழா’ செய்து துவக்கி வைத்த ரியோ, இப்போது சாவியைக் கொண்டு இ்னனொரு கழிவறையையும் ‘திறப்பு விழா’ செய்தார். இரவு நேரம் நெருங்கியதால் விளக்குகள் அணைக்கப்பட்டன. “அப்பாடா. இப்ப எல்லோருமே ஒரே மாதிரி தெரிவோம்ல?!” என்று ஆறுதல்பட்டுக் கொண்டார் நிஷா. அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்பது அடுத்த நாள் காலையில்தான் என்று தெரிந்தது. நிஷாவை அடையாளம் காணவே முடியவில்லை.

பிக்பாஸ் - நாள் 1

நிஷா மட்டுமல்ல, விடிந்ததும் பல பெண் போட்டியாளர்களை அடையாளம் காண முடியவில்லை. "யார் இவர்?” என்று இரண்டு நிமிடங்களுக்குள் கண்டுபிடிக்க வேண்டும் – இப்படி ஒரு போட்டியைப் பார்வையாளர்களுக்கு வைத்தால் பலர் தோற்று விடுவார்கள் போலிருக்கிறது.

இரவில் தூக்கம் வராத ஷிவானி தனியாக உலாவி எதையோ முணுமுணுத்துக் கொண்டிருக்க... ‘நல்லா பாடுவீங்க போலிருக்கே?” என்று அதற்கே சில்லறையைச் சிதற விட்டார். சுரேஷ் சக்கரவர்த்தி. ‘கண்மணி.. அன்போடு’ என்று குணா பாடலை இருவரும் கொலை செய்வது வரை அது தொடர்ந்தது. அபிராமி... அபிராமி...

ஆரி நடுஇரவுத் திருடன் மாதிரி உலாவி, ஒரு போர்வையைக் கண்டுபிடித்து எடுத்து, ஹாலில் பப்பரப்பே என்று படுத்திருந்த ஆண்களில் எவர் மீதோ கரிசனையுடன் போர்த்தி விட்டார். (தமிழ் சினிமா சென்ட்டிமென்ட் காட்சிகள் நிறைய பார்ப்பார் போலிருக்கிறது). பெண்களுக்காக பெட்ரூமை விட்டுக் கொடுத்து விட்டு ஆண்கள் வரவேற்பறை தரையில் தூங்கினர். (ஆண்கள் அமைதியாக செய்யும் பல தியாகங்கள் இப்படித்தான் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன).

பிக்பாஸ் - நாள் 1

காலையில் ‘வாத்தி கம்மிங்’.. என்கிற ரகளையான பாடலை ஒலிக்க விட்டார் பிக்பாஸ். ஷிவானி தலையில் முயல்குட்டி தொப்பி அணிந்து ‘கான்வென்ட் குழந்தை’ மாதிரி தோற்றமளிக்க முயன்றாரோ, என்னவோ. ஆனால் அவரின் புஷ்டியான தோற்றம் அதற்கு ஒத்துழைக்கவில்லை. தலையில் டப்பா கட்டு கட்டிக் கொண்டு சுரேஷூம் ஆடினார். பெண் போட்டியாளர்கள் பெரும்பாலோனார் தங்களை ‘ஓவியா’வாக நினைத்துக் கொண்டு வெறி கொண்ட குத்தாட்டம் போட்டனர்.

சிறிது நேரம் கழித்து, அனைவரும் சாப்பிட்ட இடத்தை பொறுப்பாக சுத்தம் செய்த ரேகா, ‘சின்னப்பையன்’ என்பதால் ஆஜித்தை அழைத்து நைசாக பேசி வேலை வாங்கிக் கொண்டார்.

“செல்போன் இல்லாம யாருக்கெல்லாம் கஷ்டமா இருக்கு?” என்று பெண்கள் டீம் பேசிக் கொண்டிருந்தது. இதற்கு இந்த குரூப்பில் இருந்த கேப்ரியலும் தலையாட்டியது அதிர்ச்சியாக இருந்தது. ‘எனக்கு செல்போன் உபயோகிக்கவே பிடிக்காது’ என்று முதல் AV-ல் சொல்லி என்னைக் கவர்ந்த பெண் இவர். எனில், அப்ப சொன்னதெல்லாம் பொய்யா கோப்பால்?

நேற்றிருந்த அல்ட்ரா லுக் மாற்றி கோயிலில் பிரசாதம் வாங்கச் செல்லும் பெண் மாதிரி பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தார் சனம்.

ஸ்டோர் ரூம் மணி அடித்தது. ஒரு திருமணத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள் வந்து இறங்கியிருந்தன. சூப்பர் மார்க்கெட் ஏரியா போல் இருந்தது. மக்கள் உற்சாகமானார்கள். “எல்லாமே நம்மளுக்குத்தானா?” என்றார் சனம். விட்டால் பாதியைக் கொண்டு போய் பக்கத்து மளிகைக் கடையில் விற்று விடுவார் போலிருக்கிறது.

கண்ணாடிக் கதவின் பின்னால் நின்று கொண்டிருந்த பாலாவை நோக்கி, உள்ளிருந்த நிஷா “வளர்ந்து கெட்டவன்… எப்படி நிக்கறான் பாரு... எவ்ளோ சோறு திங்கறானோ...” என்று ‘பதினாறு வயதினிலே’ காந்திமதி மாதிரி ஜாலியான வசைகளாக வீசிக் கொண்டிருந்தார். பாலாவிற்கு அது கேட்டதோ, அல்லது கேட்காதது மாதிரி நடித்தாரோ... ‘எனக்கு வலிக்கலையே’ என்பது மாதிரியே சிரித்துக் கொண்டிருந்தார்.

பிக்பாஸ் - நாள் 1

நிஷாவின் பக்கத்தில் படுத்திருந்த ஷிவானி இதற்கு பயங்கரமாக சிரித்தார். இருவரும் ஒப்புக்கு வேலை செய்து விட்டு படுக்கையில் உல்லாசமாக படுத்துக் கொண்டிருந்தனர். இதை அவர்களே சொல்லிக் கொண்டதுதான் விசித்திரம்.

பிக்பாஸின் முதல் போட்டி அறிவிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் கார்டன் ஏரியாவிற்கு வரவழைக்கப்பட்டனர். மேலே தொங்கிக் கொண்டிருந்த ஒரு பிளாஸ்டிக் கவர் நிறைய பந்துகள் இருந்தன. பிக்பாஸ் சொன்னபடி உறையின் முடிச்சை அவிழ்த்தார் ரியோ. பந்துகள் கீழே விழுந்தன. பிக்பாஸ் சொன்னதும் ஆளுக்கு ஒரு பந்தை அடித்துப் பிடித்து எடுத்துக் கொண்டார்கள்.

ரியோ இரண்டு பந்துகளை எடுத்திருந்தார். பிறகு மற்றவர்கள் சொன்னதால் அதை ஷிவானிக்கு கொடுத்து விட்டார். ரம்யா மட்டும் பந்து இல்லாமல் ‘தேமே’வென்று நின்று கொண்டிருந்தார்.

ஆக. இந்தப் போட்டியில் ‘ரம்யா’ தோற்று விட்டார் போல என்று – அவர் உட்பட – நினைத்துக் கொண்டிருக்க, பிக்பாஸ் ஒரு டிவிஸ்ட் வைத்தார். வாக்குமூல அறைக்கு சென்ற ரம்யாவை நோக்கி “நீங்கள்தான் பிக்பாஸ் வீட்டின் தலைவர்” என்று அறிவித்தார். (என்னடாங்கடா.. இது பித்தலாட்டமா இருக்கு?! அப்ப ‘தலைவர்’கள்லாம் இப்படித்தான் தேர்ந்தெடுக்கப்படறாங்களா?!)

வெளியே வந்த ரம்யா, அனைவரையும் வரவேற்பறை ஏரியாவிற்கு அழைத்து அதீத வெட்கத்துடன் ‘நான்தான் கேப்டன்’ என்று அறிவித்தார். (ஆர்மிக்காரவுக சும்மாவே ஆடுவாங்க.. இப்போ சலங்கையை வேற கட்டிக்குவாங்களே!). வீடு முழுவதையும் சுத்தமாக வைத்துக் கொள்வது தலைவரின் பொறுப்பாம்.

சமையல் அணிக்காக ரேகா, சனம், அனிதா மற்றும் சுரேஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பாத்திரம் கழுவும் பணியில் நிஷா, வேல்முருகன், ஆரி மற்றும் சோம் ஆகியோர் இணைந்தனர். (மார்ஷல் ஆர்ட்ஸ் செஞ்ச பையனைப் போய் பத்து பாத்திரம் தேய்க்க விட்டிருக்காங்க). வீடு பெருக்கும் வேலையில் ஆஜித், கேப்ரில்லா, சம்யுக்தா ஆகியோர் தேர்வாக டக்கென்று தன்னையும் அதில் இணைத்துக் கொண்டார் புதிய ‘தலைவர்’.

பிக்பாஸ் - நாள் 1

ஆக... மீதமிருந்தோர் ரியோ, ரமேஷ், பாலா மற்றும் ஷிவானி. இவர்களுக்கு பாத்ரூம் கழுவும் பணி விதிக்கப்பட்டது. ஒரு ஏழைப் பெண்ணின் தலையில் யானை மாலை போட்டு அவளை ராணியாக்கின புராணக் கதை போல, தற்செயல் அதிர்ஷ்டத்தில் தலைவரான ரம்யாவை அனைவரும் கலாய்த்து மகிழ்ந்தனர்.

சரோஜா தேவிக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டிலேயே அதிக மேக்கப்பிற்கு பெயர் பெற்றவர் ‘ரேகா’தான் போலிருக்கிறது. இந்த ரகசியம் நமக்கு பிக்பாஸ் மூலம்தான் தெரிய வருகிறது. பல் துலக்கிய அடுத்த நிமிடமே, இரண்டு லிப்ஸ்டிக் ஸ்டிக்களை காலி செய்து விட்டார். அப்போதும் முடியாமல் நாள் பூராவும் டச்அப் செய்து கொண்டேயிருக்கிறார். இதற்கிடையில் “நான் இங்க வெச்சிருந்த மெட்டியைக் காணோம். வெளியில் பார்க் பண்ணியிருந்த காரைக் காணோம்” என்று பிக்பாஸிடம் புகார் பட்டியலாக நீட்டிக் கொண்டேயிருந்தார்.

ரேகாவை தனது கலாய்ப்புகளின் மூலம் காலி செய்தவர் நிஷாதான். கேமராவை நோக்கி பேசி அதை ‘லவ்’ செய்வது பிக்பாஸின் முன்னோடிகள் செய்தது. இந்த சீஸனில் அந்தப் பணியை செய்ய முயன்றவர் நிஷா. முதலில் இவரைக் கண்டு கொள்ளாத கேமரா, பின்பு தலையை தாழ்த்தி காதலை ஒப்புக் கொண்டதும் பாரதிராஜா பட நாயகி மாதிரி வெட்கப்பட்டு சிரித்தார் நிஷா. “ரொம்ப ஜூம் பண்ணாதீங்க. டிவில பார்க்கிற குழந்தைங்க பயந்துடும்” என்று தன்னையும் கலாய்த்துக் கொண்டார். மற்றவர்கள் கலாய்க்கும் முன் தானே அதைச் செய்து விடுவது நகைச்சுவையாளர்களின் ஒரு முக்கியமான உத்தி.

பிக்பாஸ் வீட்டு குழந்தைகளுக்கு மிகவும் போர் அடித்ததால் விளையாடக் கிளம்பின. அனிதாதான் ஒவ்வொரு ஃபிளாட்டாக சென்று குழந்தைகளை கூப்பிட்டுச் சேர்த்தார் போலிருக்கிறது. ‘என்ன கலர்?” என்கிற விளையாட்டு. மற்றவர்களை துரத்திப் பிடிக்கவிருப்பவர் சொல்லும் நிறத்தை அவர்கள் அப்போது தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால் அவுட். ஆதிகாலத்து விளையாட்டு. இதற்காக சா.. பூ.. த்ரீயெல்லாம் கூட போட்டார்கள். (கடவுளே!.. இன்னமும் என்னென்ன கொடுமையையெல்லாம் பார்க்க வேண்டியிருக்குமோ?!).

பிக்பாஸ் - நாள் 1

விளையாட்டை ஆரம்பித்த ரியோ ‘வெள்ளை கலர்’ என்று குறிப்பிட அனைவரும் வெள்ளை நிறப் பொருட்களைத் தேடி ஓடினர். தீயணைப்பு கருவியில் இருந்த துளியூண்டு வெள்ளை நிற சதுரத்தை தொட்டு தன்னைக் காப்பாற்றிக் கொண்டார் நிஷா. (பயங்கர புத்திசாலி). ‘அவுட்’ ஆகி அடுத்த வந்த சம்யுக்தா, ‘பேபி பிங்க்’ என்று கூறி விட அனைவரும் அந்த நிறத்தைத் தேடி தொட்டனர்.

ஆனால் ரம்யா மட்டும் எதுவும் கிடைக்காமல் ஓட அவரைத் துரத்தி அவுட் ஆக்கினார் சம்யுக்தா. இதில் என்னவொரு கொடுமை என்றால் ரம்யா அணிந்திருந்த ஆடையிலேயே அந்த நிறம் இருந்தது. (நமக்கு கிடைக்கும் ‘தலைவர்கள்’ மட்டும் ஏன் இப்படி ‘கோக்குமாக்காகவே இருக்கிறார்கள்?!).

தொடர்ந்த ஆட்டத்தில் நிஷா கீழே விழுந்தார். என்றாலும் அதை அவர் ‘ஸ்போர்டிவ்வாக எடுத்துக் கொண்டது பாராட்டப்பட வேண்டிய விஷயம். அனிதாவை துரத்திக் கொண்டு கிச்சன் ஏரியா வரைக்கும் பாலா ஓட, “புக்கை எடுத்து படிக்காம எப்படி சுத்துதுங்க பாரேன்” என்கிற ‘பேரண்ட்ஸ்’ லுக்கை சமையல் ஏரியாவில் இருந்த ரேகா உள்ளிட்டவர்கள் தந்தார்கள்.

பிக்பாஸ் தந்திருந்த குறிப்பின்படி மாலை அனைவரும் வரவேற்பறையில் கூடினர். ரியோ அந்தக் குறிப்பை வாசித்தார்.

அதன் படி நாளை காலை நாமினேஷன் நடக்குமாம். அதற்கான ஒத்திகையாம் இது. ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுக்கு மிகவும் பிடித்த இரண்டு சக போட்டியாளரை தேர்ந்தெடுத்து அவர்களின் கையில் ‘இதயம்’ சின்னத்தை குத்த வேண்டும். பிடிக்காத இரண்டு பேருக்கு ‘உடைந்த இதயம்’ சின்னத்தை குத்த வேண்டும். இதற்கான காரணத்தையும் சொல்ல வேண்டும்.

பிக்பாஸ் - நாள் 1

முதல் வாரத்தில் எந்த எவிக்ஷனும் இருக்காது... என்று முன்பே கமல் குறிப்பிட்டிருந்தது நினைவில் இருக்கலாம். எனவே இதுவொரு ‘லுலுவாய்க்கு’ விளையாட்டுதான். இதன் மூலம் ஒருவரையொருவர் பிராண்டி அதன் மூலம் சிலபல கசமூசா சண்டைகள் நடக்கலாம் என்பது பிக்பாஸின் பிளான். அவர் எதிர்பார்த்தது சனம் – ஷிவானி மூலம் கொஞ்சம் நடந்தது.

முதலில் வந்த சம்யுக்தா, பிடித்த நபர்களாக வேல்முருகன் மற்றும் ரம்யாவை தேர்ந்தெடுத்தார். பிடிக்காத நபர்களாக ஷிவானி மற்றும் ரேகா ‘மேம்’மை தேர்ந்தெடுத்தார்.

ரேகா தரும் குறிப்புகள் கறாராகவும் கண்டிப்பாகவும் இருப்பதாக சம்யுக்தா ஃபீல் செய்கிறாராம். (இந்தக் காரணத்தை பின்னர் வந்த பலரும் சொன்னார்கள்). ஷிவானி யார் கூடவும் அதிகமாக பழகவில்லையாம். (இதையும் பின்னர் வந்த பலர் குறிப்பிட்டார்கள்).

அடுத்து வந்தவர் சனம். பிடித்தவர்களாக இவர் குறிப்பிட்டது சம்யுக்தா மற்றும் பாலா. சம்யுக்தாவும் இவரைப் போன்றே ஒரே சமயத்தில் மாடலிங் துறையில் சாதித்தவராம். எனவே அந்தக் காரணம். பாலா இதுவரை யாரைப் பற்றியும் எதிர்மறையாக பேசவில்லையாம்.

ஷிவானி பற்றி சனம் சொன்ன போதுதான் மெல்லிய உரசல் ஆரம்பித்தது. இது வருங்காலத்தில் பெரிய சண்டையாக மாறுவதற்கான அஸ்திவாரமாக இருக்கலாம். சம்யுக்தா சிங்கிள் பெட் வேண்டும் என்று கேட்டதால் அது தொடர்பான உரசல். ஷிவானி இடம் பிடித்திருந்த படுக்கையில் சம்யுக்தா வந்து அமர்ந்து விட்டாராம்.

இந்த இடத்தில் ஷிவானியின் விநோதமான எக்ஸ்பிரஷன்ஸ் பற்றி சொல்லியேயாக வேண்டும். இந்தச் சண்டையின் போது மட்டுமல்ல, பொதுவாக அவர் முகத்தில் நவரசங்களும் மாறி மாறி ஜொலிக்கின்றன. உதட்டைச் சுழிப்பது, மூக்கு விரிவது, கண் விரிப்பது, எளிதில் கலங்குவது, தலையை ஆட்டுவது... என்று அபிநய சரஸ்வதியாக விளங்குகிறார்.

பிக்பாஸ் - நாள் 1

அடுத்த வந்த நிஷா, இந்த டாஸ்க்கை கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. இதற்கு நகைச்சுவையை ஓர் ஆயுதமாக பயன்படுத்தினார். யார் மனதும் வலிக்காமல் தன்னுடைய தேர்வை அவர் வெளிப்படுத்திய விதம் அபாரம். பிடித்தவர்களாக ‘செல்லத்தம்பி’ ரியோ மற்றும் ரமேஷை தேர்வு செய்தார்.

ஸ்டாம்ப் மூடியைக் கழற்றாமலேயே தன் கையின் மீது முத்திரை குத்த முயன்ற அப்பாவி ‘நிஷா’வை ‘நாதாரி...’ என்று செல்லமாக வசைந்தார் ரியோ. இந்தச் சொல் பொதுவான வசையாக நம் சமூகத்தில் நீண்ட காலம் இருக்கிறது. ஆனால் இது politically incorrect சொல். ஏனெனில் ‘நாதாரி’ என்பது ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைக் குறிக்கும் வார்த்தை. இதை வசையாக பயன்படுத்துவது நாகரிகம் அன்று. சமூகப் பொறுப்பின்மையும் ஆகும்.

அடுத்து வந்த ரேகா, தன் கறார்தனத்தை துணிச்சலாக சுட்டிக் காட்டிய சம்யுக்தாவைப் பாராட்டி சோப்பு டப்பாவை பரிசளித்தார். சமூகப் பொறுப்புள்ள இளைஞனாக இருப்பதற்காக ‘ஆரி’க்கு இன்னொரு டப்பா. பிடிக்காதவர்களின் வரிசையில் ஷிவானி மற்றும் நிஷா. தன்னைக் கலாய்த்துக் கொண்டேயிருப்பதற்காக நிஷாவை ஜாலியாக பழிவாங்குகிறாராம். “ஐ ஹேட் யூ” என்று நிஷா ஜாலியாக சிணுங்க, அவரை கட்டியணைத்து ரேகா முத்தமிட்டதெல்லாம் ஜாலியான காட்சிகள்.

அடுத்து வந்த ஷிவானி, தன்னிடம் சண்டை போட்ட சனத்திற்கு இதயத்தை வழங்கி ஆச்சர்யப்படுத்தினார். முதல் நாளில் சிறப்பாக வரவேற்றாராம். வேல்முருகனுக்கும் இதே காரணம்தான். பிடிக்காதவர்களாக சம்யுக்தா மற்றும் பாலாவை தேர்ந்தெடுத்தார். பெட்ரூம் இடம் பிடிக்கும் சண்டைதான் சம்யுக்தா தேர்விற்கு காரணம்.

பிக்பாஸ் - நாள் 1

பிடித்தவர்களாக ரம்யா மற்றும் சுரேஷை தேர்ந்தெடுத்தார் ரமேஷ். நிஷா எவ்வளவு கலாய்த்தாலும் தாங்குகிறாராம் சுரேஷ். பிடிக்காதவர்களின் வரிசையில் சனத்தை தேர்ந்தெடுத்ததற்காக ரமேஷ் சொன்ன காரணம் சரியானதாக இருக்கும் என்று தோன்றுகிறது. ‘இவங்கள்லாம் கடந்த பிக்பாஸை நிறைய பார்த்துட்டு வந்திருப்பாங்க போல. எனவே மற்றவர்களைக் கவர்வதற்காக செயற்கையான உற்சாகத்துடன் பழகுகிறார்கள்” என்றார்.

பிடித்தவர்களாக ஆரி மற்றும் சோமை தேர்ந்தெடுத்தார் வேல்முருகன். பொறுப்பான இளைஞர்களாம். பிடிக்காதவர்களாக வீட்டிலேயே இளையவர்களான ஆஜித் மற்றும் கேப்ரியலை தேர்ந்தெடுத்தார். (பிரச்னையில்லாத தேர்வு).

மிஸ்டர் ஜென்டில்மேன் போல் பொறுப்பாகவும் தெளிவாகவும் தன் காரணங்களைச் சொல்லி அசத்தினார் ஆரி. ரியோவைப் பார்த்தவுடனேயே பிடித்துப் போயிற்றாம்.

‘இந்த ஆன்ட்டி என்னை ரொம்ப திட்டறாங்க’ என்பது போல் சிணுங்கி ரேகாவைத் தேர்ந்தெடுத்தார் ஆஜித்.

இந்த வரிசையில், வளதில் இளையவராக இருந்தாலும் ஸ்மார்ட்டான காரியத்தைச் செய்தவர் கேப்ரியல். ‘தனியாகவே இருக்கிறார்... எல்லோருடனும் பழகவே மாட்டேன்கிறார்’ என்கிற காரணத்தைச் சொல்லி பலரும் ஷிவானிக்கே ‘heart break’ சின்னத்தை குத்தினர். பார்க்கிற நமக்கே அத்தனை பாவமாக இருந்தது.

எனவே தன்னுடைய தேர்வின் போது ‘அவருக்கு ஒரு சான்ஸ் கொடுக்கணும். இப்பத்தானே நாம் வந்திருக்கோம்’ என்பது போல் காரணம் சொல்லி பிடித்தவர்களின் வரிசையில் ஷிவானியைத் தேர்ந்தெடுத்தார் கேப்ரியல். (வயதில் இளையவர்கள் சமயங்களில் மெச்சூர்டான காரியத்தைச் செய்து விடுவது பாராட்ட வேண்டிய விஷயம்).

பிக்பாஸ் - நாள் 1

ஷிவானி ‘ஹோம் சிக்’கினால் அவதிப்படுகிறாரோ... என்னமோ. இளைய வயது. எனவே முதன்முறையாக தன் தாயைப் பிரிந்து வந்தவராக இருக்கலாம். எனவே கேப்ரியல் சொன்னது போல் அவருக்கான சந்தர்ப்பம் இன்னமும் தரப்பட வேண்டும்.

இந்த டாஸ்க் இன்னமும் முடியவில்லை. இன்னமும் மூன்று நபர்கள் தங்களின் தேர்வைச் செய்யவிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த நோக்கில் பார்த்தால் ‘மேக்கப்’ ரேகா, மற்றவர்களி்டம் சிடுசிடுவென பேசி விடுகிறார் போலிருக்கிறது. குறிப்பாக இளையவர்களிடம். அதைக் குறைத்துக் கொண்டால் நல்லது.

Also Read: 16 பேர்... பாதி லாக்டௌனில் பிக்பாஸ் வீடு... பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - அறிமுக நாள்

‘அதிகம் பேச மாட்டாரோ’ என்று நினைத்திருந்த ‘ஜித்தன்’ ரமேஷ், நிஷாவையே அதிகம் கலாய்த்து அவருக்கு ‘கலக்கப் போவுது யாரு’ ஷூட்டிங்கில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறாராம். ஆச்சர்யமாக இருக்கிறது. இதன் காட்சிகள் நமக்கு காட்டப்படவில்லை.

இருப்பதிலேயே அதிக இயல்பாக இருப்பவர்கள் என்று ரியோ மற்றும் அனிதாவைச் சொல்லலாம் என்று தோன்றுகிறது. இருவருக்கும் இடையே ஒரு நல்ல நட்பு உருவாகி விட்டதைப் பார்க்க முடிகிறது. ஆரி தன் பொறுப்புணர்வால் மற்றவர்களுக்கு ஒரு கடினமான போட்டியாளராக இருப்பார் என்று யூகிக்கத் தோன்றுகிறது.

வேல்முருகன் மற்றும் நிஷா போன்ற நகைச்சுவையாளர்கள் பெரும்பாலோனோரைக் கவர்ந்து விடுவதில் ஆச்சர்யமில்லை.

இப்போதைய நிலையின் படி, முதல் வெளியேற்றமாக ஷிவானியுடையது அமைந்தால் அதில் ஆச்சரியமில்லை. பார்ப்போம்.


source https://cinema.vikatan.com/television/in-the-house-bigg-boss-day-1-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக