Ad

திங்கள், 5 அக்டோபர், 2020

கர்நாடகா: டி.கே சிவகுமார் வீடு, அலுவலகங்கள் உட்பட 14 இடங்களில் ரெய்டு! - கொதிக்கும் காங்கிரஸ்

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார். அம்மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய நபராக அறியப்படும் இவருக்கு சொந்தமாக டெல்லியில் உள்ள வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்கனவே அதிரடி சோதனைகள் நடத்தி இருக்கிறார்கள். அப்போது கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக டி.கே.சிவக்குமார், அவரின் ஆதரவாளர்கள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

டி.கே.சிவக்குமார்

இந்த நிலையில் சட்டவிரோதமாக பணம் சேர்த்த விவகாரத்தில், சி.பி.ஐயும் டி.கே.சிவக்குமார் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தது. கடந்த ஆண்டில் கர்நாடகா அரசு, இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று சி.பி.ஐ., டி.கே.சிவக்குமார் மற்றும் அவரின் சகோதரர் ஆகியோரின் வீடுகளில் அதிரடி ரெய்டு நடத்தி வருகிறது.

Also Read: ``அவர் வெளியே வரும் செய்திதான் மகிழ்ச்சி தரும்!” - எடியூரப்பாவின் சிவகுமார் பாசம்

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் சதாசிவ நகர், தொட்டலஹள்ளி, கனகபுரா பகுதியில் உள்ள டி.கே.சிவகுமார் வீடுகளிலும், அலுவலகங்களிலும் அவருக்கு சொந்தமான சில இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் அவரது சகோதரருக்கு சொந்தமான இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. டி.கே.சிவக்குமார் மீதான ஊழல் வழக்கு தொடர்பாக சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் 9, டெல்லியில் 4, மும்பையில் ஒன்று என மொத்தம் 14 இடங்களில் இன்று காலை 6 மணி முதல் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கர்நாடகா காங்கிரஸ், இந்த ரெய்டு நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளது. ``மோடி, எடியூரப்பா அரசாங்கங்கள் மற்றும் பா.ஜ.கவின் முன்னணி அமைப்புகள், அதாவது சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரிதுறை போன்றவற்றின் மோசமான முயற்சிகளுக்கு முன் காங்கிரஸ் தொண்டர்கள், தலைவர்கள் தலைவணங்க மாட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். மக்களுக்காக போராடுவதும், பா.ஜ.கவின் தவறான நிர்வாகத்தை அம்பலப்படுத்துவதற்குமான எங்களின் தீர்மானம் வலுப்பெற்றிருக்கிறது” என காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்தார். மேலும் பா.ஜ.க அரசின் கைப்பாவையாக சி.பி.ஐ செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை முடக்கவே இந்த ரெய்டு என காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நிலையில் இதுவரையில் நடைபெற்ற சோதனைகளின் சுமார் 50 லட்சம் ரூபாய் வரை கைபற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



source https://www.vikatan.com/news/politics/cbi-raids-underway-at-more-than-15-premises-of-state-congress-chief-dk-shivakumar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக