தி.மு.க-வின் புதுக்கோட்டை அன்னவாசல் தெற்கு ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.சந்திரனின் இல்லத் திருமண விழாவில் காணொலிக் காட்சி வாயிலாகப் பங்கேற்று ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர், காணொலிக் காட்சி வாயிலாக தி.மு.க-வினரிடையே பேசிய ஸ்டாலின், ``இது சுயமரியாதைத் திருமணம். தமிழ் முறையிலான திருமணம். சீர்திருத்தத் திருமணம். அதையும் தாண்டி, புதுமையான முறையில் காணொலிக் காட்சி வழியாக நடைபெற்றிருக்கும் திருமணம்.
கொரோனா காலம் நமக்குப் பல இழப்புகளை - நெருக்கடிகளை - சோதனைகளை ஏற்படுத்தினாலும், இப்படிச் சில அரிய புதுமைகளுக்கும் வழி வகுத்திருக்கிறது. நெருக்கடியான காலத்தில் எல்லாம், கழகத்திற்கு ஆறுதல் தருவதும், புது வலிமை சேர்ப்பதும், கழகத்தைச் சேர்ந்தவர்களின் இதுபோன்ற இல்லத் திருமணங்கள்தான். கொரோனா காலத்தைப் பயன்படுத்திக் கோடி கோடியாக கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால், உலகத்திலேயே பழனிசாமி தலைமையிலான ஆட்சி மட்டும் தான் கொரோனாவை வைத்து “புதிது புதிதாக என்னவெல்லாம் ஊழல் செய்யலாம்” என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
Also Read: அடுத்தடுத்து எடுபடாத 'திட்டங்கள்' - ஐபேக் மீது கோபத்தில் ஸ்டாலின் குடும்பம்?!
அவர்களின் இந்த ஊழல் தேனிலவு - ஊழல் குடித்தனம் எல்லாம் இன்னும் ஆறு மாதங்கள்தான். அதன்பிறகு, புதுக்கோட்டை மட்டுமல்ல, செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும் நிலைமை மாறும். தமிழ்நாட்டிற்கு புதிய வெளிச்சம் பிறக்கும். பத்தாண்டுகளாகச் சூழ்ந்திருக்கும் இருட்டில் இருந்து மீண்டு, உதயசூரியனின் வெளிச்சத்தைக் காணத் தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள். அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்ற நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.
இந்த இயக்கத்தைப் பார்த்து, குடும்பக் கட்சி என்று சொல்பவர்களுக்கு, இந்த கட்சியின் ஒவ்வொரு தொண்டரும் எங்கள் குடும்பம்தான் என்று பதில் சொல்கின்ற பேரியக்கம் இது. குட்கா ஊழலுக்கும் - குவாரி காண்ட்ராக்ட்டுக்கும் குடும்பத்தில் உள்ளவர்களைப் பயன்படுத்துவோருக்கு இதன் அருமை தெரியாது. கரைவேட்டியும் கருப்பு - சிவப்பு துண்டும்தான் நமது நிரந்தர முகவரி. நாம் தி.மு.க.காரர்கள் என்பதுதான் நமது அசையாச் சொத்து. நம்மையோ இந்த இயக்கத்தையோ எவராலும் அசைக்கவும் முடியாது. ஆட்டவும் முடியாது.விரைவில், உதயசூரியனால் தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் புது ஒளி பிறக்கும்’’ என்று ஸ்டாலின் பேசினார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-chief-mk-stalin-speech-in-pudukottai-marriage-function
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக