Ad

புதன், 14 அக்டோபர், 2020

`குரூப்பிஸம் இருக்கா இல்லையா?' ஆடலுடன் பாடலைக் கேட்டு... பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 10

நேற்றைய நாள் டென்ஷனாக சென்றதாலோ, என்னமோ இன்றைக்கு போட்டியாளர்களை ஆடல், பாடல் என்று மகிழ்ச்சியாக கடக்க விட்டார் பிக்பாஸ். வாழ்க்கை என்றால் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் என்கிற தத்துவத்தை சொல்கிறார் போலிருக்கிறது.

சென்னை-28 திரைப்படத்தில் வரும் ஒரு பையன், தனக்குப் பிரியமான கிரிக்கெட் பேட்டை எங்கும் வைக்காமல் அதனுடனே தூங்குவது போல, தனக்கு கிடைத்த எவிக்ஷன் ஃப்ரீ பாஸை வைத்துக் கொண்டே அலைந்தார் ஆஜித். அதை எங்கு ஒளித்து வைப்பது என்று தெரியாமல் தத்தளித்தார். ‘மவனே.. இருடி. உன்கிட்ட இருந்து எப்படியாவது சுட்டுடுவோம்’ என்று சிலர் கிண்டலடித்தாலும், ‘உண்மையாகவே அப்படிச் செய்வார்களா, சேச்சே, சின்னப்பையன் கிட்ட போய் சாக்லேட்டை பிடுங்கித் தின்னா... அது நமக்குத்தான் அசிங்கம்’ என்று விட்டு விடுவார்களா என்பது வரும் வாரங்களில் தெரியும்.

பிக்பாஸ் - நாள் 10

‘இருக்கு… ஆனா இல்லை…” என்கிற காமெடி மாதிரி, பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம்... இருக்கிறதா... இல்லையா... என்கிற தீவிரமான விவாதம் சுரேஷ் மற்றும் ரியோவிற்குள் காமெடியாக நடந்தது. "நான் இருபத்து மணி நேரமும் இதை கேமாத்தான் விளையாடறேன்... டாஸ்க் சமயத்துல மட்டும் பாசம் காட்டாதது... இதர நேரத்துல பாசப்பறவையா இருக்கறது... இப்படி நடந்துக்கறதுக்கு மெச்சூரிட்டி வேணும்” என்று தன் ஸ்டாரட்டஜியை மிகத் தெளிவாகவே சொல்லி விட்டார் சுரேஷ்.

"அண்ணே... நம்புங்கண்ணே... இந்த வீட்ல குழு மனப்பான்மை கிடையாதுண்ணே..." என்று மல்லுக் கட்டினார் ரியோ. (பிற்பாடு நிகழ்ந்த ஒரு போட்டியில் நிஷாவை தன் கூட்டாளியாக ரியோ அமைத்துக் கொண்டது... என்ன மாதிரியான குரூப்பிஸம் என்று தெரியவில்லை.) சுரேஷின் மொட்டைத் தலையில் ரியோ முத்தம் தரும் கண்றாவியான சடங்குடன் இந்த விவாதம் நிறைவிற்கு வந்தது.

அந்த வீட்டின் அசைக்க முடியாத சக்தியாக சுரேஷ் மாறிக் கொண்டிருப்பதால், ‘என்ன பண்றது.. இவன் கிட்டதான் குப்பை கொட்ட வேண்டியிருக்கிறது’ என்கிற சலிப்போடு சனம் உட்பட ஒவ்வொருவரும் சுரேஷிடம் பேசி சமாதானம் ஆகின்றனர்.

பிக்பாஸ் - நாள் 10

“ஏம்ப்பா.. என் கிட்ட பேச மாட்டேன்கிற... நேத்திக்கு புளிப்பு மிட்டாய் கூட பாதி காக்கா கடி கடிச்சு கொடுத்தேனே. மறந்துட்டியா. என் கூட பேசுப்பா” என்று ஆறாம் கிளாஸ் மாணவி மாதிரி அனிதாவிடம் இறைஞ்சிக் கொண்டிருந்தார் சனம். ‘பார்க்கலாம்… பார்க்கலாம்’ என்கிற மாதிரி அலட்சியமாக நகர்ந்தார் செய்தி வாசிப்பாளர். (இவர்களுக்குள் எப்போது சண்டை நடந்தது என்று நாம்தான் மூளையைப் பிறாண்டி யோசிக்க வேண்டும் போல).

'‘எவிக்ஷன் ஃப்ரீ பாஸ்’ விளையாட்டில் நான் எப்படியெல்லாம் ராஜதந்திர வியூகங்களை அமைத்தேன்’ என்கிற விவரங்களை சுரேஷ் கூறிக் கொண்டிருக்க, இளம் பயிற்சியாளர்கள் போல அதை பிரமிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள் பாலா மற்றும் ஆரி.

கிராமத்துப் பகுதிகளில் போஸ்டர் ஒட்டியிருப்பது போல ‘பிரமாண்ட நடன நிகழ்ச்சி’ என்கிற பிளெக்ஸ் பேனரை கட்டியிருந்தார் பிக்பாஸ்.

“இந்த சுரேஷூ.. என் மண்டைல ஏதோ சூன்யம் வெச்சுட்டாரு. ஒரே குழப்பமா இருக்கு... இந்த வீட்ல எல்லோருமே கேம் விளையாடத்தான் வந்திருக்காங்களோன்னு தோணுது. ஒரு மாதிரி அசெளகரியமா ஃபீல் பண்றேன்” என்று ரியோ அனத்த, 'இவன் இப்ப என்ன கேம் ஆடறான்னே புரியலையே’ என்கிற மாதிரியான குழப்பத்துடன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார் சோம்.

லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் துவங்கியது. விமான நிலையத்தில் பயணிகள் பொருட்கள் வருவது போன்ற கன்வேயர் பெல்ட் எல்லாம் அமைத்திருந்தார்கள். விமானம் கும்முடிப்பூண்டி வழியாக அரக்கோணத்தில் வந்து நிற்குமாம்.

பிக்பாஸ் - நாள் 10

அலார்ம் மணி அடித்ததும் கன்வேயர் பெல்ட்டில் ஆடை, அணிகலன்கள் வரும். ஒரு குறிப்பிட்ட சினிமாப் பாடலில் நடிக, நடிகையர் அணிந்திருக்கும் உடைகள் பெட்டியில் இருக்கும். அதில் தற்செயல் தேர்வில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஜோடி, அந்த ஆடைகளை மின்னல் வேகத்தில் அணிந்து உடனே ஒலிபரப்பாகும் பாடலுக்கு ஆட வேண்டும்.

ஆண்கள் என்றால் பிரச்னையில்லை. கழிவறையின் வாசலிலேயே ‘டக்’கென்று ஆடைகளை மாற்றிக் கொண்டு விடலாம். பெண்களின் பாடுதான் வழக்கம் போல் சிரமம். மறைவிடத்தைத் தேடி ஆடையை மாற்றிக் கொண்டு ஓடி வருவதற்குள் தாமதமாகி விடுகிறது. அதிலும் பெண்கள் ஆடை மாற்றுவது என்பது மின்னல் வேகத்தில் நடக்கக்கூடியதா என்ன? எனவே ஆண் போட்டியாளர்கள் விரைந்து மேடைக்கு வந்துவிட, பெண்கள் வருவதற்கு சற்று தாமதம் ஆகியது.

ரேஷன் கடை க்யூ மாதிரி மக்கள் பரபரப்பாக காத்துக் கொண்டிருக்க முதல் பெட்டி ‘ஆஜித் – கேபி’ ஜோடிக்கு வந்தது. ‘ரவுடி பேபி’ பாடலுக்கு இருவரும் ரகளையாக ஆடினார்கள். அவசரத்தில் பேண்ட் ஜிப்பை போடாமல் ஆஜித் வந்து விட, பாடலின் இடையே வெட்கத்துடன் அவர் போட்டுக் கொண்டது சுவாரஸ்யம். கேபி நடனம் பயின்றவர் என்பதால் அநாயசமாக ஆடினார்.

அடுத்த ஜோடி. ‘ரியோ மற்றும் நிஷா’. இவர்களுக்கு வந்த பாடல் “ஆடலுடன் பாடலைக் கேட்டு’. ரியோ மேற்பரப்பில் கூலான ஆசாமியாக தென்பட்டாலும் சமயங்களில் ‘சுர்’ரென்று அவருக்கு கோபம் வந்து விடுகிறது. பொதுவாகவே நகைச்சுவையுணர்வு உள்ளவர்களுக்கு இன்னொரு பக்கம் கோபம் அதிகம் வரும். அவசரம் என்பதால் ‘அந்த போட்டோவை கொண்டு வாங்க’ என்று தன்னிச்சையான கோபத்துடன் கத்திக் கொண்டிருந்தார்.

பிக்பாஸ் - நாள் 10

பாடல் உடனே ஒலிக்க ஆரம்பித்ததும் ரியோ ஒரு மாதிரியாக தயாராகி ஆட ஆரம்பித்த பின்னர் வந்து இணைந்து கொண்டார் நிஷா. அவர் ஓடி வந்த வேகத்தைப் பார்த்தால் ரியோ மீது குப்புற விழுந்து விபத்தை ஏற்படுத்தி விடுவாரோ என்று கலவரமாக இருந்தது. எப்படியோ சமாளித்து இருவரும் ஆடினார்கள்.

பத்து நாள்களாக வெளிச்சத்தமே கேட்காததாலோ... என்னமோ... சினிமாப்பாடல் ஒலிக்க ஆரம்பிக்கும்போது அனைத்துப் போட்டியாளர்களும் உற்சாகமாக கூடவே ஆடி மேடையில் இருந்தவர்களுக்கு ஆதரவளித்தார்கள். வேல்முருகன் உட்கார்ந்த நிலையிலேயே பேய் பிடித்தது போல் ஆடி குத்தாட்டம் போட்டார். ரியோவும் நிஷாவும் தங்களின் ஒப்பனை நிலையிலேயே சற்று நேரம் ‘கோப்பால்... கோப்பால்...’ என்று காமெடி செய்து கொண்டிருந்தார்கள்.

அடுத்த பாடல் ‘வெச்சுக்கவா... உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ளே’. இதற்கு சனம் மற்றும் வேல்முருகன் ஜோடி ஆடினார்கள். இது வித்தியாசமான காம்பினேஷனாக இருந்தது. பாடல் ஒரு பக்கம் ஒலிக்க, சூன்யம் வைத்த ரிமோட் பொம்மை மாதிரி தன் இஷ்டத்திற்கு இன்னொரு பக்கம் ஆடித் தீர்த்தார் வேல்முருகன்.

அடுத்த ஜோடியின் தேர்வில் பிக்பாஸின் வழக்கமான குறும்பு வெளிப்பட்டது. எந்த இருவராவது தொடர்ந்து முட்டிக் கொண்டிருந்தால் அவர்களை இணைத்து ஒரு டாஸ்க் செய்ய வைத்து அவர்களுக்கு கூடுதல் சங்கடத்தை தருவது பிக்பாஸின் ஸ்டைல். அந்த வகையில் சுரேஷ் மற்றும் அனிதா ஆகிய இருவரும் ஜோடியாக ஆகும் சூழலை உருவாக்கினார்.

பிக்பாஸ் - நாள் 10

‘ஏ... ஏ... சின்னப்புள்ள’ என்கிற பாடலுக்கு இருவரும் நடனமாட வேண்டும். பாடல் வரிகளில் கூட ‘அனிதா’ என்கிற பெயர் வருவது போல் தேர்ந்தெடுத்தது அக்மார்க் குறும்பு. பிரபுதேவா மாதிரி வரச்சொன்னால் ‘ஆளவந்தான்’ கமல் மாதிரி வந்து நின்றார் சுரேஷ். இப்படியொரு பிரபுதேவாவைக் கண்டால் ஒரிஜினல் பிரபுதேவாவே அலறி விடுவார். சுரேஷ் மேடையில் ஆடத் துவங்க சிறிது நேரத்தில் அட்டகாசமான ஒப்பனையுடன் வந்து இணைந்தார் அனிதா. தங்களுக்குள் இருந்த உரசல்களின் சாயல் எதுவும் வெளியில் தெரியாமல் இருவரும் நன்றாகவே ஆடினார்கள். அந்த வயதிற்கு சுரேஷ் அப்படி உடம்பை அசைத்ததெல்லாம் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

கிச்சன் ஏரியா. எனவே பஞ்சாயத்து. ஆனால் இப்போது சுரேஷ் அங்கு இல்லை என்பதுதான் பெரிய ஆச்சரியம். கிச்சன் மேடையை பாலா சுத்தம் செய்து கொண்டிருக்க, அங்கு வந்த சனம் “இது எங்க டீம் வேலைதானே... விடுங்க நான் பண்ணறேன்” என்று மறிக்க “ஆரம்பிச்சாச்சு... முடிச்சடறேன்” என்று மல்லுக்கட்டினார் பாலா. எப்போதும் சண்டையில் இறங்கும் வழக்கமுள்ள சுரேஷ், இந்தச் சமயத்தில் வந்து ‘ராஜாத்தி... சூப்பரா டான்ஸ் ஆடின’ என்று சனத்தை சமாதானப்படுத்தினார்.

“அந்தப் புள்ள எப்ப பாரு என்கிட்ட வம்பிழுக்குது... பார்த்துக்கங்க பாஸ்... இதெல்லாம் நல்லால்ல” என்று கேமராவின் முன்பு வந்து அனத்தினார் பாலா.

வேட்டி பிரச்னையைப் பற்றி ஆரியிடம் புலம்பிக் கொண்டிருந்த வேல்முருகன், “நான் ஒண்ணும் ஏப்பை சாப்பையானவன் இல்ல. எங்களுக்கும் ஆள் இருக்கு... நான் யாருன்னு காட்டறேன் பாருங்க. என்னை இளிச்சவாயன்னு நெனச்சிட்டாங்களா" என்றெல்லாம் சவடால் விட்டுக் கொண்டிருந்தார். 'தற்செயலாக நிகழ்ந்த விஷயத்தை சுரேஷ் அவராக கற்பனை செய்து கொண்டு ஏதேதோ சொல்கிறார்’ என்பது வேல்முருகனின் புகார்.

அடுத்ததாக தினசரி ‘டாஸ்க்’ தொடங்கியது. கோயில் திருவிழா கடைகளில் உள்ள விளையாட்டுதான் இது. ரப்பர் வளையத்தை ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது போட்டு விட்டால் அது நமக்கு சொந்தம் என்பது போல.

பிக்பாஸ் - நாள் 10
இதற்காக ஒவ்வொருவரும் ஒரு கூட்டாளியைத் தங்களுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அமைந்த கூட்டணிகளின் மூலமே பிக்பாஸ் ஆட்டத்தின் போக்கை நம்மால் யூகிக்க முடியும். ‘யார் மனசுல யாரு’ என்பதையும் அறிய முடியும். ஒவ்வொரு கூட்டணியும் தங்களுக்குள் ரகசியமாகப் பேசி உலகப் போருக்கான வியூகங்களை ராஜதந்திரங்களுடன் வடிவமைத்தனர்.

ஆட்டம் துவங்கியது. சற்று தூரத்தில் நின்று கொண்டு ஒரு குடுவையில் பந்தை எறிய வேண்டும். ஒருவர் பந்தை சரியாக போட்டு விட்டால், அவர் மற்றவர்களில் எவரையாவது சரியான காரணத்தைச் சொல்லி வெளியேற்ற முடியும். இறுதி வரை தாக்குப் பிடிப்பவருக்கும் அவரது கூட்டாளிக்கும் ஒரு பரிசு உண்டு. அடுத்த வார நாமினேஷில் இருந்து அவர்கள் தப்பிப்பார்கள்.

Also Read: இவங்கள்ல யார் பாஸ் பிக்பாஸ்?!

ஆட்டத்தின் துவக்கத்தில் சிலர் முயன்று தோற்க, முதலில் பந்தை சரியாக எறிந்து வெற்றி பெற்றவர் ‘பேசாமடந்தை’ ஷிவானி. அவர் தனது கூட்டாளியான ‘ஆரி’யுடன் ஆலோசித்து பாலாஜியை ஆட்டத்திலிருந்து வெளியேற்றினார். ‘ஹைட்டா இருக்காரு.. ஈஸியா பாலை போட்டுடுவாரு’ என்பது அவர் சொன்ன காரணம்.

இப்படியாக ஒவ்வொருவரும் வெளியேறி கடைசி வரை தாக்குப் பிடித்தவர் ‘சனம்’. எனவே அவரும் அவரது கூட்டாளியான வேல்முருகனையும் அடுத்த வாரம் யாரும் நாமினேட் செய்ய முடியாது. கொலைவெறி சந்தோஷத்துடன் வேல்முருகன் துள்ளிக் குதித்த ஆவேசத்தைப் பார்த்து பிக்பாஸே சற்று மிரண்டு போயிருப்பார்.

பிக்பாஸ் - நாள் 10

“மனதளவில் ஸ்ட்ராங் என்பதைத்தாண்டி உடல் பலமும் சில டாஸ்க்ல தேவைப்படுது. அதனாலதான் பாலாஜியை வெளியே அனுப்பிச்சிட்டாங்க... ‘நாம நாமினேஷன்ல இருந்து தப்பிக்கணும்-ன்றதை விட, யாரு நாமினேஷன்ல... இருக்கணும்-னு சிலர் பிளான் பண்ணி ஆடினாங்க. சனம் டீம் தங்களை சாதாரணமா நெனச்சாங்க. ஆனா கடைசில அவங்கதான் ஜெயிச்சாங்க. இப்படில்லாம் நடக்கும்..” என்று கடந்து போன ‘பந்து’ விளையாட்டின் சூட்சுமங்களை ஐபிஎல் வர்ணணை போல அலசிக் கொண்டிருந்தார் சுரேஷ்.

சுரேஷ் இப்படியெல்லாம் அலட்டிக் கொள்ளவே தேவையில்லை. அவருடைய லாஜிக்கின் படி ‘எல்லாமே ஸ்ட்ராட்டஜிதானே பாஸ்?”

ஆக... அடுத்த வாரத்திற்கான சதித்திட்டங்களை இப்போதே மக்கள் யோசித்து செயல்படுத்த ஆரம்பித்து விட்டதால் ஆட்டம் களைகட்டும் என்றுதான் தோன்றுகிறது.


source https://cinema.vikatan.com/television/groupism-debate-and-dance-program-bigg-boss-tamil-season-4-day-10-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக