Ad

செவ்வாய், 6 அக்டோபர், 2020

`ஓ.கே சொன்ன பன்னீர்... இறங்கிவந்த பழனிசாமி' - முடிவுக்கு வருகிறது அ.தி.மு.க பஞ்சாயத்து!

``அ.தி.மு.க வில் நடந்துவரும் உட்கட்சி பிர்சனைகளுக்கு நாளை முடிவு எட்டப்படும். இருவரின் கோரிக்கையுமே சரிசெய்யப்படும்“ என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள் அ.தி.மு.கவின் மூத்த நிர்வாகிகள்.

அ.தி.மு.க செயற்குழு - ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ்

அ.தி.மு.கவின் செயற்குழுக் கூட்டம் கடந்த 28-ம் தேதி நடந்தது. அந்தக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் யார்? என்று பேச்சு எழுந்தபோது, பன்னீர் தரப்பினர் முதலில் பொதுக்குழுவில் அறிவித்த வழிகாட்டுதல் குழுவை அமைத்துவிட்டு முதல்வர் வேட்பாளர் குறித்துப் பேசலாம் என்றனர். இதற்கு எடப்பாடி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பன்னீர் செல்வம், பழனிசாமி இருவருமே தனித்தனியாக தங்கள் கருத்துகளை நிர்வாகிகள் முன்பு வைத்தனர். இருவருக்குள்ளும் ஒருமித்த கருத்து ஏற்படாமல் போனதால், செயற்குழுவில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அக்டோபர் 7-ம் தேதி அன்று அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளர் குறித்த முடிவு அறிவிக்கப்படும் என்று அ.தி.மு.க தலைமை அறிவித்தது.

Also Read: `ஆஞ்சநேயர் துணை நிற்பார்!' - எடப்பாடி பழனிசாமியின் ஒருமாத விரதம்

இதன்பிறகு பன்னீர் செல்வம், தனது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனக்கு நெருக்கமான அமைச்சர்களிடம் பன்னீர் முடிவு குறித்தும், அவரை சமாதானப்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்துவந்த நிலையில், பன்னீர் செல்வம் தனது சொந்த மாவட்டமான தேனிக்குச் சென்று, அங்கு அவருடைய பண்ணை வீட்டில் மூன்று நாள்கள் தனது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தினார். மற்றொருபுறம் இருதலைவர்களுக்கு இடையே ஏற்பட்ட மனகசப்பை நீக்க அ.தி.மு.க வின் மூத்த நிர்வாகிகளும் களத்தில் இறங்கினார்கள். முதல்வரை அ.தி.மு.கவின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் முனுசாமி, வைத்தியலிங்கம், மூத்த அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

பன்னீர்செல்வம்

பன்னீர்செல்வத்திடம் ஏற்கெனவே ஆர்.பி.உதயகுமார் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பன்னீரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அரைமணி நேரத்துக்கும் மேலாகப் பேசியிருக்கிறார். அப்போது,``முதல்வர் வேட்பாளர் குறித்த பேச்சு இப்போது தேவையா? நான் சொல்வது கட்சியின் நலனுக்காக... முதலில் வழிகாட்டுதல் குழுவை அமையுங்கள் என்று சொல்கிறேன். முதல்வர் வேட்பாளர் போட்டியில் நான் இருக்கிறேனா, இல்லையா? என்பது இப்போது பிரச்சனை அல்ல. அது தேர்தல் முடிந்த பிறகு பேசிக்கொள்ள வேண்டிய பிரச்சனை” என்று சொல்லியிருக்கிறார். இதனைத்தொடர்ந்து முனுசாமி முதல்வரிடம் பன்னீர் நிலைப்பாடு குறித்துப் பேசியிருக்கிறார்.

நேற்று மூத்த அமைச்சர்களிடம் முதல்வர் ஆலோசனை நடத்தியபிறகு வைத்தியலிங்கத்திடமும் எடப்பாடி ஆலோசனை நடத்தியிருக்கிறார். இதன் பிறகு சில விசயங்களுக்கு முதல்வர் ஒப்புதல் தெரிவித்துள்ளார். அதன்படி, ``7-ம் தேதி அன்று அ.தி.மு.கவின் வழிகாட்டுதல் குழுவை அமைக்க ஒப்புதல் கொடுத்துவிடலாம். அதேபோல் முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் பன்னீர் எனக்கு ஆதரவாக இருக்கவேண்டும்” என்று சொல்ல, பன்னீர் தரப்பிலும் அதற்கு எதிர்ப்பு இல்லை என்று எடப்பாடியிடம் சொல்லியிருக்கிறார்கள்.

அ.தி.மு.க தலைமை நிர்வாகிகள்

திங்கள் அன்று மாலை தேனியிலிருந்து சென்னை திரும்பிக்கொண்டிருந்த பன்னீரிடம் முதல்வரின் முடிவு குறித்து வைத்தியலிங்கம் உள்ளிட்ட சிலர் பேசியிருக்கிறார்கள். `வழிகாட்டுதல் குழு அமைக்க ஒப்புக்கொண்டால், எனக்கு வேறு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அந்த வழிகாட்டுதல் குழுவில் முதல்வரின் ஆஸ்தான அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி ஆகியோர் இடம்பெறக்கூடாது. அவர்களுக்குப் பதிலாக அவர்கள் சமூகத்தில் செங்கோட்டையனையோ, தம்பிதுரையோ நியமித்துக்கொள்ளட்டும். எல்லா சமூகத்துக்கும் பிரதிநிதித்துவம் தரும் வகையில் இந்த பதினோர் பேர் கொண்ட குழு இருப்பது நல்லது. என் தரப்பில் ஐந்து பேர் அவர்கள் தரப்பில் ஆறுபேர் என்று ஏற்கனவே பேசப்பட்டது. அதன்படியே குழுவை அமைத்துக்கொள்ளலாம். குழுவில் இடம்பெறும் நபர்கள், அந்த குழுவுக்கு உள்ள அதிகாரங்களை 6-ம் தேதி முடிவு செய்துக்கொள்ளலாம்' என்று பன்னீர் செல்வம் சொல்லியிருக்கிறார்.

Also Read: ``பன்னீர் பாய்ச்சலும்... பகடையாடும் எடப்பாடியும்!”- அ.தி.மு.க. அதிரடிகள்

இருவருக்கும் இடையே சமாதானமானப் போக்கு ஏற்பட்டிருப்பதால் ஏழாம் தேதியான நாளை பிரச்னைக்கு வேலையில்லை என்கிறார்கள் அ.தி.மு.க நிர்வாகிகள். பன்னீரின் கோரிக்கையான வழிகாட்டுக்குழு குறித்த அறிவிப்பும், முதல்வர் வேட்பாளர் எடப்பாடி என்கிற அறிவிப்பும் ஒரே நாளில் வெளியாகும் வாய்ப்பு இப்போது உருவாகிவிட்டது என்கிறார்கள்.

பன்னீர் VS பழனிசாமி...

பன்னீர் செல்வம் செவ்வாய்க்கிழமை அன்று தனது இல்லத்தில் தனது ஆதரவு நிர்வாகிகள் சிலருடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்குப் பிறகு அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்கிறார்கள் அ.தி.மு.க நலம்விரும்பிகள்.



source https://www.vikatan.com/news/politics/the-aiadmk-party-issues-coming-to-an-end

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக