Ad

செவ்வாய், 7 மார்ச், 2023

“இதுதான் நீதியா? - ஹத்ராஸ் தீர்ப்பு அபத்தமானது!”

உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் நகரில் 2020-ம் ஆண்டு, செப்டம்பரில் 19 வயது பட்டியலின இளம்பெண் ஒருவர், வேறு சமூகத்தைச் சேர்ந்த நான்கு பேர்கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதோடு, கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தார். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்துக்கு எதிராகப் பெரும் போராட்டங்கள் அப்போது வெடித்தன.

`மனசாட்சியை அதிரவைக்கும் சம்பவம்’ எனக் கூறி அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்த வழக்கை அக்டோபர் 2020-ல் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த நிலையில், வழக்கில் கைதுசெய்யப்பட்ட சந்தீப், ரவி, லவகுஷ், ராமு ஆகிய நான்கு பேரில், சந்தீப் மட்டுமே குற்றவாளி என அறிவிக்கப்பட்டு மற்ற மூவரையும் குற்றமற்றவர்கள் எனத் தீர்ப்பளித்திருக்கிறது நீதிமன்றம்.

“பிணம் எரிக்கும் வேலையைத்தான் பார்த்தது காவல்துறை!”

இந்தத் தீர்ப்பு குறித்து, அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் சுகந்தியிடம் பேசினோம். “தொடக்கம் முதலே மாநில அரசும், காவல்துறையும் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்கிலேயே செயல்பட்டன. தடயங்களை அழிப்பதற்காக, பிணம் எரிக்கும் வேலையைத்தான் காவல்துறை பார்த்தது. இதன் மூலமாகத் தந்திரமாக மறுகூறாய்வைத் தவிர்த்தனர். இது மட்டுமல்லாமல், தற்போது குற்றவாளி எனத் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கும் சந்தீப், ‘கொலை செய்யும் உள் நோக்கத்துடன் செயல்படவில்லை’ என்றும், ‘குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரும் பாலியல் வன்புணர்வு செய்யவில்லை’ என்றும்தான் தீர்ப்பு கூறுகிறது.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, ‘பாதிக்கப்பட்ட ஒருவர் மரணிக்கும்போது கொடுக்கும் வாக்குமூலத்துக்கு, சாட்சி விசாரணையே தேவை இல்லை’ அந்த வகையில், ‘சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் நான்கு பேரும்தான் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெரித்துக் கொலைசெய்ய முயன்றனர்’ என்று இறப்பதற்கு முன்பு வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் அந்தப் பெண். இந்த நிலையில், இப்படியோர் அபத்தமான தீர்ப்பு வந்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ‘நீதி கிடைத்தால்தான் அஸ்தியைக் கரைப்போம்’ என்று காத்திருந்த அந்தக் குடும்பத்துக்கு இதுதான் நீதியா?

பாதுகாப்பு என்ற பெயரில், காவல்துறை அந்தக் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்திருக்கிறது. இந்தச் சமூக விலக்கம் காரணமாக, அந்தப் பெண்ணின் பெற்றோர்கூட வேலைக்குச் செல்ல முடியவில்லை. குடும்பத்திலுள்ள மூன்று பிள்ளைகளும் பள்ளிக்குச் செல்லவில்லை. இந்த நிலையில், இறந்த பிறகு அரசு கொடுத்த நிவாரணத் தொகையை வைத்துத்தான் அந்தக் குடும்பம் இன்றுவரை பிழைத்துவருகிறது. அந்தக் குடும்பத்திலுள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை’’ என்றார் ஆதங்கமாக.

வன்கொடுமைக்கு ஆளானது, கொல்லப்பட்டது அந்தப் பெண் மட்டுமல்ல. நீதியும்தான்!-



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/hathras-case-judgement

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக