மார்கழிக் கோலங்களின் அழகை உயர்த்திப்பிடிப்பவை, வண்ன கோலப்பொடிகள். மார்கழியில் கோலப்பொடி விற்பனை சூடுபிடிக்கும். அவ்வகையில் திண்டிவனம் அருகே சென்னை நெடுஞ்சாலையில் உள்ள இருதயபுரத்தில், ஒவ்வொரு மார்கழியிலும் கலர் கலராக கோலப்பொடிகள் விற்பனை ஜோராக நடைபெறுவது வழக்கம். இப்பணியில் ஏராளமான பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.
கோலப்பொடி விற்பனையில் பெண்கள்
இருதயபுரத்தில் கோலப்பொடி விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள், தலைமுறை தலைமுறையாக இங்கேயே வாழ்ந்து வருகின்றனர். கலர் கோலப்பொடிகளை உற்பத்தி செய்வது, விற்பனை செய்வது என இங்குள்ள 150 குடும்பங்களின் தலைமுறைத் தொழிலாக இது உள்ளது. குறிப்பாக, உற்பத்தியிலும் விற்பனையிலும் பெரும்பாலும் பெண்களே ஈடுபடுகின்றனர்.
மார்கழி மாதம் மட்டுமே இந்த கலர் கோலப்பொடி வியாபாரம் செய்கின்றனர். மற்ற சீசன் இல்லாத காலங்களில், இரும்புத்தகடு வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர்.
இருதயபுரத்தில் பெண்கள், அதிகாலையில் 4 மணிக்கெல்லாம் எழுந்து வீட்டு வேலைகளை செய்து முடித்து விட்டு, காலை 7 மணி முதல் கோலமாவு வியாபாரம் செய்யத் தொடங்கிவிடுகின்றனர். வண்ண திரவங்களை கோலமாவில் கலந்து கலர் கோலப்பொடிகளை உற்பத்தி செய்கின்றனர்.
இருதயபுரம், திருவண்ணாமலை - சென்னை நெடுஞ்சாலையில் சென்னை புறநகர் சாலையையும் திண்டிவனம் நகராட்சிக்கு செல்லும் சாலையையும் பிரிக்கும் இடத்தில் அமைந்துள்ளது என்பதால், மேல்மருத்தூர் ஆதி பராசக்தி கோயிலுக்கு மாலை அணிந்து தரிசனம் செய்து முடித்து திரும்பும் பெண் பக்தர்கள், கோலமாவுகளை ஆர்வத்தோடு வாங்கிச் செல்கின்றனர். இதேபோல், திருவண்ணாமலை, சென்னை, திண்டிவனம் செல்லும் மக்களும் தங்கள் வாகனங்களை இங்கு நிறுத்தி கோலமாவுப் பொடிகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
கலர் கோலப்பொடி தயாரிப்பு முறை
கலர் கோலப்பொடி என்பது வண்ண திரவங்களை கோலமாவில் கலப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. ஒரு பாட்டில் திரவத்தை அரை மூட்டை கோலமாவில் கலந்து கோலப்பொடி தயார் செய்யலாம். அதிகபட்சம் 30 வண்ணங்களில் பொடிகள் தயாராகின்றன. ஒரு படி கலர் கோலப்படி ரூ. 20 என்ற விலையிலும், அரை படி 10 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாக 5 முதல் 15 வகை கலர் கோலப்பொடிகளை வாங்கிச் செல்கின்றனர். ஒருநாளைக்கு ஒரு கடையில் 15 - 20 பேர் வரை வாங்குகின்றனர்.
இருதயபுரத்தில் இருந்து செஞ்சி செல்லும் சாலையில் சுமார் 1 கி.மீ. வரையிலும், சென்னை வழித்தடத்தில் 1 கி.மீ. வரையிலும் 50 க்கும் மேற்பட்ட கோலப்பொடி கடைகளை சாலையின் ஓரங்களில் அமைத்து, கலர் கோலப்பொடிகள் விற்பனையை பெண்கள் மேற்கொண்டு வருகின்றனர். மார்கழி மாதம் மட்டுமே இந்த வியாபாரம் என்பதால் பனி என்றும் பகல் நேர வெயில் என்றும் பார்க்காமல் தங்களது கடைகளுக்கு அருகிலேயே அமர்ந்து கிடக்கின்றனர்.
மழையால் கரையும் கோல வியாபாரம்
கோலப்பொடி விற்பனையில் ஈடுபட்டுள்ள ராஜேஸ்வரி பேசும்போது, ‘’மார்கழி சீசன் வியாபாரத்துல பெண்கள் மட்டுமில்லாக, எங்க வீட்டுல இருக்குறவங்க, லீவ் நாள்ல குழந்தைங்கனு எல்லாரும் வியாபாரத்துக்கு வந்துடுவாங்க. மார்கழியில சில நேரம் மழை பெய்யும்போது, எங்க வியாபாரம் பாதிக்கப்படும். கோலமாவு வாங்குறவங்களும் பேரம் பேசாம வாங்க மாட்டாங்க. எல்லாத்தையும் கடந்துதான், வருஷத்துல ஒரு மாசம் மார்கழியில மட்டுமே சீசன் இருக்குற இந்தத் தொழிலை பார்த்துட்டு இருக்கோம்’’ என்றார்.
வாசலை அழகூட்டும் வண்ண வண்ண கோலப்பொடிகளை விற்பனை செய்யும் இந்தப் பெண்களுக்கு தைப்பொங்கல் வசந்தத்தை தரட்டும்!
source https://www.vikatan.com/social-affairs/miscellaneous/margazhi-kolappodi-sales
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக