Ad

வெள்ளி, 20 ஜனவரி, 2023

Doctor Vikatan: அடிக்கடி துரத்தும் கெட்ட கனவுகள்.... கனவுகள் இல்லாத உறக்கத்துக்கு என்ன தீர்வு?

Doctor Vikatan: எனக்கு அடிக்கடி கனவுகள் வருகின்றன. பெரும்பாலும் மோசமான கனவுகள்... அவற்றிலிருந்து மீள்வது மிகவும் சிரமமாக இருக்கிறது. கனவுகள் வராத தூக்கம் சாத்தியமில்லையா? கனவுகள் என்ன உணர்த்துகின்றன?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

கனவுகளோடு கூடிய தூக்கம் எல்லோருக்கும் அவசியம். தூங்க ஆரம்பித்ததில் இருந்து 90வது நிமிடத்தில் வரும் Rapid eye movement (REM) sleep அவசியம். அப்படித்தான் நம் மூளையின் அமைப்பு இருக்கிறது. இந்தத் தூக்கத்தில் ஓடுவது மாதிரி, துரத்துவது மாதிரி, பாலியல் இச்சைகள், ஸ்ட்ரெஸ் என எல்லாம் கலந்த கனவுகள் வரும். கண்கள் சுழன்றாலும், நாம் அசைவற்ற நிலையிலேயே இருப்போம் என்கின்றன ஆய்வுகள். அதாவது கனவுகளை உண்மையென நினைத்து அந்த நேரத்தில் நாம் எதுவும் செய்துவிடக்கூடாது என்பதற்காகவே நம் தசைகள் எல்லாம் முடங்கிப் போயிருக்கும். பொதுவாகவே நெகட்டிவ் கனவுகள் நினைவில் இருக்கும். பாம்பு துரத்துவது போல, தண்ணீரில் மூழ்குவது போல, சோகத்தில் துடிக்கிற மாதிரியெல்லாம் கனவுகள் வரும்.

கனவுகள் என்பவை சிறு குழந்தைக்குக்கூட வரும். குழந்தை தூங்கும்போது சிரிப்பதைப் பார்ப்போம். அதே போல அது பயந்து அழுவதையும், விம்முவதையும்கூட பார்க்கலாம். வாழ்க்கையில் நடக்கும் எந்த விஷயத்தையும் ரொம்பவும் யோசித்து, அது குறித்த நெகட்டிவ் சிந்தனையிலேயே மூழ்கியிருந்தாலோ, எதிர்காலத்தை நினைத்து அதீதமாகக் கவலைப்பட்டாலோ, நடந்து முடிந்த விஷயங்கள் குறித்து 'இப்படிச் செய்திருக்கலாமோ, அப்படிச் செய்திருந்தால் இப்படி ஆகியிருக்காதோ' என்று வருத்தப்பட்டாலோ இப்படிப்பட்ட கனவுகள் வரலாம். இறந்த காலத்தை மீண்டும் மீண்டும் யோசித்து, மன அழுத்தம் கொள்வது இத்தகைய நெகட்டிவ் கனவுகளுக்கு முக்கிய காரணமாகலாம். மற்றபடி கனவுகள் பலித்துவிடுமோ, நடக்கப்போகிற செயல்களை உணர்த்துகின்றனவோ என்றெல்லாம் தேவையில்லாத குழப்பங்கள் வேண்டாம்.

dream

நெகட்டிவ் கனவுகள் வேண்டாமென நினைத்தால் நீங்கள் விழித்திருக்கும் வேளைகளில் கவனமாக இருக்க வேண்டும். அதாவது அந்த நேரத்தில் பாசிட்டிவ் சிந்தனையுடன், ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து வாழப் பழகுங்கள். எதிர்காலத்தை நம்பிக்கையோடு அணுகுங்கள். நடந்தது, நடப்பது, நடக்கவிருப்பது எல்லாமே நன்மைக்கே என்ற பாசிட்டிவ் மனநிலைக்குத் தயாராகுங்கள். உங்கள் சிந்தனை மாறினால், அது உங்கள் தூக்கத்திலும் பிரதிபலிக்கும். ஆழ்ந்த, நிம்மதியான உறக்கத்துக்கு யோகா, மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி போன்றவையும் உதவும். உங்களால் முடிகிற விஷயத்தைப் பின்பற்றிப் பாருங்கள்.

தூங்கச் செல்வதற்கு முன் மனதை லேசாக்கும் விஷயங்களை மட்டும் யோசியுங்கள். நல்ல புத்தகங்கள் வாசிப்பது, நல்ல இசையைக் கேட்பது, நகைச்சுவையான விஷயங்களை அசைபோடுவது என அது எதுவாகவும் இருக்கலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/healthy/doctor-vikatan-frequent-bad-dreams-what-is-the-solution

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக