Ad

திங்கள், 23 ஜனவரி, 2023

``எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆவி தான் சசிகலாவை சிறையில் தள்ளியது!” - அதிமுக முன்னாள் எம்.பி ப.குமார்

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா பொதுகூட்டம் திருச்சி மாவட்டம், லால்குடி திருமணமேடு பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளாரும், முன்னாள் எம்.பியுமான ப.குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

 பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், ``அம்மா(ஜெயலலிதா) எப்போது மறைவார், இந்த இயக்கத்தை குறுக்கு வழியில் நாம் கைப்பற்ற வேண்டும் என்கின்ற கெட்ட எண்ணத்தோடு சசிகலா இந்த இயக்கத்தை கைப்பற்றுவதற்கு முயற்சி செய்தார்கள். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவுடைய ஆவி அவர்களை சும்மா விடவில்லை. இந்தத் தமிழ்நாட்டை விட்டு அகற்றி அண்டை மாநில ஜெயிலில் கொண்டு போய் சசிகலாவை விட்டது. ஜெயிலில் இருந்து வந்ததற்குப் பிறகும் சசிகலா திருந்தவில்லை. ஒரு டெம்போவையும், ஒரு டிவியும் வைத்துக்கொண்டு நான் பொதுச் செயலாளர் என சுற்றிக் கொண்டிருக்கிறார். உள்ளூர் டீக்கடையில் கூட நம்பி கடன் கொடுக்க முடியாத ஆளுங்களை எல்லாம் ஓ.பி.எஸ் மாவட்டச் செயலாளராகப் போட்டிருக்கிறார். அதுபோக, பா.ஜ.க., மற்றும் தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, நம்முடைய இயக்கத்தை அழிக்க வேண்டுமென ஓ.பி.எஸ் செயல்பட்டு வருகிறார். நம்முடைய இயக்கத்திற்கு ஓ.பி.எஸ் எந்த இடையூறு செய்தாலும் அதை நம் தொண்டர்களும் எடப்பாடியாரும் முறியடிப்பார்கள்” என்றார்.

ப.குமார்

தொடர்ந்து பேசியவர், ``இன்றைக்கு ஸ்டாலின் திராவிட மாடல் என்று பேசுகிறார். ஆனால், கருணாநிதி குடும்பத்தைப் பொறுத்தவரை, தி.மு.க.,வையும், தமிழகத்தையும் அபகரிக்க நினைக்கும் திருட்டு மாடல் அரசாக இருக்கின்றனர். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸிற்கு விட்டுக்கொடுத்துவிட்டு, ஸ்டாலின் பின்வாங்கிவிட்டார். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வேட்பாளராக அறிவித்தபோதே ஈரோடு கிழக்குத் தொகுதியில் நம்முடைய வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஏனென்றால், கருணாநிதி உட்பட எல்லோரையும் அவ்வளவு வாய்க்கொழுப்பாகப் பேசியிருக்கிறார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு எப்படி திண்டுக்கல் தேர்தல் வெற்றியோ, அதேபோல அண்ணன் எடப்பாடியாருக்கு ஈரோடு கிழக்குத் தொகுதியில் வெற்றி உறுதி” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/admk-district-secretary-kumar-slams-dmk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக