Ad

ஞாயிறு, 29 ஜனவரி, 2023

மோடியின் செல்லப்பிள்ளை; அதானி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்... ஹிண்டன்பர்க் சொல்வது உண்மையா?

அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம், தொடர் பங்கு வெளியீடு (Follow on Public offer - FPO) மூலம் 20,000 கோடி ரூபாய் திரட்டுகிறது. அந்த நிறுவனத்தின் பங்கு வெளியீடு ஜனவரி 27-ம் தேதி அன்று ஆரம்பித்து ஜனவரி 31 அன்று முடிவடைகிறது. அந்த நிறுவனத்தின் பங்குக்கான குறைந்தபட்ச விலை ரூ. 3,112 எனவும் அதிகபட்ச விலையாக ₹ 3,276 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதானி

இந்த நிலையில் கடந்த 25-ம் தேதி, புதன் கிழமையன்று அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்ட பிரபல ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை அதானி நிறுவனத்தை மட்டுமன்றி இந்தியப் பங்கு சந்தையையே ஆட்டம் காணச் செய்யும் நிலையில் உள்ளது.

ஷார்ட் செல்லிங் என்பது ஒரு நிறுவனத்தின் பங்குகள் விலை குறையும் என்று கருதி தம்மிடம் இல்லாத பங்குகளை விற்பனை செய்வது ஆகும். அதற்கு ஏற்ப அந்த நிறுவன பங்குகளின் விலை குறைந்தால் மீண்டும் அந்தப் பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கி லாபம் பார்க்க முடியும். இவ்வாறு பங்குகளை விற்று விலை குறையும்போது வாங்கி அதிக லாபம் பார்க்கும் நிறுவனங்களில் ஒன்றாக ஹிட்டன்பர்க் நிறுவனம் உள்ளது.

106 பக்க ஆய்வறிக்கை..!

புதன்கிழமை அந்த நிறுவனம் அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளை தாம் ஷார்ட் செல்லிங் செய்துள்ளதாக குறிப்பிட்டு அதானி குழுமத்தைப் பற்றி பல்வேறு புகார்கள் அடங்கிய நீண்ட 106 பக்க ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையை இரண்டு ஆண்டுகளாக தான் தயாரித்து வந்ததாகவும், இந்த ஆய்வறிக்கை தொடர்பாக அதானி குழுமத்தைச் சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் ஊழியர்களிடம் பேசி தகவல்களை திரட்டிதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹிண்டன்பர்க்

அந்த ஆய்வறிக்கையில் அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு தமது பங்கு விலைகளை மிக அதிக அளவுக்கு விலை ஏற்றி உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மொரீஷியஸ், ஐக்கிய அரபு நாடுகள் (அமீரகம்) மற்றும் கரீபியன் தீவுகள் போன்ற வருமான வரி சொர்க்கபுரியான நாடுகளிலிருந்து போலியாக கம்பெனிகளைத் தோற்றுவித்து அதன் பங்குகளை விலை ஏற்றியதாகப் பல்வேறு சான்றுகளை அந்த ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளது.

மேலும் அதானி குழுமத்தில் பெரும்பாலான பங்குகள் அந்த நிறுவனத்தின் குடும்பத்தைச் சார்ந்த நபர்களிடம் மட்டும் இருப்பது பற்றியும் பல்வேறு சான்றுகள் தரப்பட்டிருந்தன. அந்த நிறுவனத்தின் உண்மையான மதிப்பிலிருந்து தற்போதைய பங்குகளின் விலை 85% அதிகமாக இருப்பதாக ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. மேலும், அதானி நிறுவனம் வாங்கியுள்ள அதிகபட்ச கடன் பற்றியும் அது குறித்து கிரெடிட் சைட் நிறுவனம் முன்பு வெளியிட்ட ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டியும் பல்வேறு கேள்விகளை ஹிண்டன்பர்க் நிறுவனம் எழுப்பியுள்ளது. மொத்தமாக பல்வேறு விதமான 88 கேள்விகளை அதானி குழுமத்திடம் அந்த ஆய்வறிக்கை முன் வைக்கிறது.

அதானி

அதானி நிறுவனத்தின் பங்குகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 முதல் 20 மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், அந்த ஆய்வறிக்கை அதானி குடும்பத்துக்கு அரசிடம் கிடைத்துள்ள சலுகைகள் பற்றியும், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி இந்தத் தவறுகளைக் கண்டும் காணாது இருப்பது பற்றியும் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த ஆய்வறிக்கை தான் ஒட்டு மொத்த பங்கு சந்தையிலும் முக்கிய பேசுபொருளாக தற்போது விளங்குகிறது. இந்த ஆய்வறிக்கை வெளியான புதன்கிழமை அன்று அதானி குழுமத்தின் பெரும்பாலான பங்குகள் 5% முதல் 8% வரை சரிவுடன் முடிந்தன.

இந்த ஆய்வறிக்கை பற்றி உடனடியாகக் கருத்து வெளியிட்ட அதானி நிறுவனம், தொடர் பங்கு வெளியீடு ஆரம்பிக்கும்போது வேண்டுமென்றே நிறுவனத்தின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உண்மைக்குப் புறம்பான விஷயங்களைத் திரித்து ஷார்ட் செல்லிங் மூலம் லாபம் கிடைப்பதற்காக ஹிண்டன்பர்க் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், நம் நாட்டிலோ, அமெரிக்காவிலோ ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு எதிராக இது தொடர்பாக வழக்கு தொடுப்பதற்கு முன்னெடுப்பு நடவடிக்கைகளை ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருக்கும் விஷயங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வரும் விஷயங்களாகவே இருக்கின்றன. தனது லாபத்துக்காக ஹிண்டன்பர்க் நிறுவனம்  தற்போது இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது என்று மூத்த முதலீட்டாளர்களும் கூறி வருகின்றனர்.

சென்ற டிசம்பர் அன்று அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியிடம் நிறுவனம் பெற்றுள்ள அதிகப்படியான கடன் பற்றியும் பங்குகள் விலை அதிகரித்து வருவது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டபோது தமது நிறுவன கடன்களைப் பற்றி முதலீட்டாளர்களோ, கடன் கொடுக்கும் வங்கிகளோ எப்போதும் கேள்வி எழுப்புவதில்லை. அவர்கள் அனைவருக்கும் தமது நிறுவனத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கு தமது நிறுவனம் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக வரும் காலத்தில் விளங்கும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். 

கௌதம் அதானி

அவர் கருத்துக்கு வலுசேர்க்கும் விதத்தில் புதன்கிழமை அன்று ஆங்கர் முதலீட்டாளர்கள் பிரிவில் ஒதுக்கப்பட்டிருந்த 6,000 கோடி ரூபாய் பங்குகளுக்கான விண்ணப்பத்துக்கு விற்பனைக்காக  9,000 கோடி ரூபாய் அளவுக்கு விண்ணப்பங்கள் வந்திருந்தன.  பிரபல வெளிநாட்டு முதலீட்டாளர்களான மலேசியாவைச் சேர்ந்த மே பாங்க், மார்கன் ஸ்டான்லி, நமது நாட்டின் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களான எல்.ஐ.சி இந்தியா, ஹெச்.டி.எஃப்.சி லைஃப், எஸ்.பி.ஐ லைஃப் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்தப் பிரிவில் பங்குகளுக்கு விண்ணப்பித்திருந்தன. ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான பிரிவில் ஒன்றரை மடங்கு அதிக விண்ணப்பம் இந்த நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது. இது இந்த நிறுவனத்தின் மீது முதலீட்டாளர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

என்றாலும் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் வரலாற்றையும் நாம் புறம் தள்ளிவிட முடியாது. இதுவரை அந்த நிறுவனம் 30 நிறுவனங்களைப் பற்றிய ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அந்த ஆய்வறிக்கை வெளியான நாளில் சராசரியாக அந்த 30 நிறுவனங்களும் 15% விலை குறைந்தது. அறிக்கை வெளியான ஆறு மாதங்களில் அந்த 30 நிறுவனங்களின் பங்குகள் சராசரியாக 26% குறைந்து வர்த்தகமாகியது. அதனால், ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் தாக்கம் வரும் காலத்தில் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஹிண்டன்பர்க்

ஆனால், இந்த ஆய்வறிக்கை காரணமாக அதானி நிறுவனங்களின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 48,000 கோடி ரூபாய் பங்கு விலை மாற்றம் காரணமாகக் குறைந்துள்ளது. இந்த வாரத் தொடக்கத்தில் உலக அளவில் மூன்றாவது பணக்காரராக இருந்த கௌதம் அதானி புதன்கிழமை சரிவுக்குப் பிறகு நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். டெஸ்லா நிறுவனர் மீண்டும் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை தொடங்கும் தொடர் பங்கு வெளியீட்டுக்கான முதலீட்டாளர்களின் ஆர்வம் எவ்வாறு இருக்கப் போகிறது என்ற முக்கிய கேள்வி எழுந்துள்ளது. அதானி குழுமம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க இருப்பதைப் பற்றி ஹிண்டன்பர்க் நிறுவனத்திடம் கேள்வி கேட்கப்பட்டபோது தாம் தன் நிலைப்பாட்டில் இருந்து மாறப்போவதில்லை என்றும் அதானி குழுமம் அமெரிக்காவில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் சவால் விட்டுள்ளது.

இந்தப் பிரச்னை தொடர்பாக எதிர்க்கட்சிகளும் தற்போது கருத்து தெரிவிக்கத் தொடங்கியுள்ளன. அதானி நிறுவனங்களுக்கு அரசு பல்வேறு சலுகைகள் தருவதை பல்வேறு எதிர்க்கட்சிகளும் பல ஆண்டுகளாகவே புகார் கூறி வருகின்றன. 'மோடியின் செல்லப்பிள்ளை அதானி' என்று ஆரம்பித்து தொடர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. தற்போது, அவர்களின் குரல்களுக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக  ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கை அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

டிசம்பர் மாதத்துக்கான காலாண்டு முடிவுகள் தற்போது வெளிவர தொடங்கி இருக்கின்றது. இன்னும் சில வாரங்களில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பெரும்பாலான அதானி குழுமத்தில் காலாண்டு முடிவுகள் வெளிவர இருக்கின்றன. இதன் காரணமாகவும் அதானி நிறுவன பங்குகள் அதிக ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாக வாய்ப்பிருக்கிறது.

பங்குச் சந்தைகள் தொடர்பான பல்வேறு விதமான மோசடிகள் கடந்த ஆண்டுகளில் நடந்துள்ளன. இது போன்ற மோசடிகள் நடைபெற்ற ஒவ்வொரு காலகட்டத்திலும் பங்குச் சந்தை கட்டமைப்பான செபி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு முதலீட்டாளர்கள் நலனை தொடர்ந்து காத்து வருகிறது. என்றாலும், இன்னும் பல்வேறு மோசடிகள் பங்குச் சந்தையில் தொடர்ந்தபடி தான் இருக்கிறது. அந்த மோசடியில் இருந்து காக்கும் நடவடிக்கைகளில் செபி மேலும் முனைப்பு காட்ட வேண்டும் என்பதே புதன்கிழமை கடுமையான நஷ்டத்தை சந்தித்த அதானி குழும முதலீட்டாளர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.



source https://www.vikatan.com/business/finance/is-it-true-what-american-company-hindenburg-says-against-adani-group-companies

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக