Ad

புதன், 18 ஜனவரி, 2023

ஈரோடு கிழக்கு: அமலுக்கு வந்த நன்னடத்தை விதிகள்... கடந்த தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் எத்தனை?!

ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா காலமானதையடுத்து பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கூட்டணி கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31-ம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. பிப்ரவரி 8-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனையும், பிப். 10 -ம் தேதி வேட்புமனுக்கள் வாபஸ் பெறலாம் என்றும், பிப். 27ல் வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.

திருமகன் ஈவெரா

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதை தொடர்ந்து பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி பிரமுகர்களின் தலைவர்களின் சிலைகள், அவர்களின்  பெயர்களைத் தாங்கிய பலகைகளில் உள்ள  பெயர்களை மறைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

மேலும் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, தேர்தலுக்காக தயார்படுத்தும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றம்

மாநகராட்சி வளாகத்தில் மாநகராட்சி அலுவலகத் திறப்பு விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த நினைவு கல்வெட்டு துணியால் மூடப்பட்டது. மேலும், அலுவலக அறைகளில் வைக்கப்பட்டிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோரின் போட்டோக்களும் உடனடியாக அகற்றப்பட்டன.

பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் உள்ள சிலைகள் துணியால் சுற்றி வைக்கப்பட்டன. மேலும், சில இடங்களில் ஜெயலலிதா, கருணாநிதி பெயரால் வைக்கப்பட்டிருந்த கட்சிப் பலகைகளும் மறைக்கப்பட்டன. நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் விதிமுறைகள் மீறப்படுவதைக் கண்காணிக்க அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகளை அதிகாரிகள் தொடங்கினர்.

ஈரோடு கிழக்குத் தொகுதியை பொருத்தவரை 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இத்தொகுதியில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 713 பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 140 பேரும், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 23 வாக்காளர்களும், 22 ராணுவ வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 898 வாக்காளர்கள் உள்ளனர்.

லாரியில் ஏற்றப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள்

ஈரோடு மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் 37 வார்டுகள் கிழக்கு தொகுதியில் உள்ளன.
கடந்த 2021-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் கட்சிகள் வாரியாக பெற்ற வாக்குகளின் விவரம் வருமாறு.

திருமகன் ஈவெரா (காங்கிரஸ்) - 67,300
யுவராஜா (தமாகா) - 58,396
கோமதி (நாம் தமிழர் கட்சி) - 11,629
ராஜ்குமார் (மநீம) - 10,005
நோட்டா - 1,546
முத்துகுமரன் (அமமுக)-1204
இந்த தேர்தலில் 8904 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகன் ஈவெரா (காங்கிரஸ்) வெற்றி பெற்றிருந்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/election/erode-east-constituency-election-date-notification-code-of-conduct-came-into-effect-immediately

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக