பொங்கல் பண்டிகை தமிழர் திருநாள் என்று, தமிழர்களுக்கான பண்டிகையாக முன் நிறுத்தப்படுகிறது. பொங்கல் தினத்தன்று தமிழ்நாடு தாண்டி பிற மாநிலங்களில் மகர சங்கராந்தி என்கிற பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாளான போகிப் பண்டிகை, லோரி என்கிற பெயரில் வட இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. பொங்கலும், மகர சங்கராந்தியும் ஒரே பண்டிகையா... இவற்றுக்கான தொடர்பு என்ன என்பது குறித்து தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளரான அ.கா.பெருமாளிடம் கேட்டோம்...
``மகர சங்கராந்தி என்பது ஜோதிட மாதங்களை அடிப்படையாகக் கொண்டு சூரியனை வழிபடுவதாகும். சங்கராந்தி என்பது ஜோதிடத்தின்படி சூரியன் ஒவ்வொரு மாதத்துக்கு நகர்வதைக் குறிக்கும் சொல். மகர மாதத்தில்தான் சூரியன் நகரத் தொடங்குவதாகக் கருதப்படுகிறது. ஆண்டிற்கு 12 மாதங்களும் சூரியன் நகர்ந்தாலும், அது மகர மாதத்தில் தொடங்குவதால் ஜனவரி மாதம் 14-ம் தேதி மகர சங்கராந்தியாக அனுசரிக்கப்படுகிறது.
இந்தியா மட்டுமல்லாது தாய்லாந்து, மியான்மர், இலங்கை, இந்தோனேஷியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் சங்கராந்தி விசேஷமான ஒரு நாளாகக் கருதப்படுகிறது. விவசாயத்துடன் தொடர்புடைய இந்த நாள், அறுவடைத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் அதனை நாம் பொங்கல் என்று அழைக்கிறோம்.
சங்காராந்தி என்பதே சூரிய வழிபாட்டையும், தானிய அறுவடையையும் குறிக்கும் சொல்தான். சங்கர மனம் என்று சமஸ்கிருதத்தில் இதனை அழைக்கின்றனர்.
இந்தியாவில் சங்கராந்தி அனுசரிக்கப்படுகிற அதே நாளிலோ அல்லது ஒரு நாள் முன்னதாகவோ மற்ற நாடுகளில் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா முழுக்க முழுக்க கடவுள், மதம், விவசாயம் சார்ந்தது, குறிப்பாக இந்துக்களுடைய பண்டிகையாகவே இது உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தலைமையிலான ஆட்சியின் போதுதான் பொங்கல், தமிழர் திருநாள் என்று கூறப்பட்டது. இந்து மதத்தில் மட்டுமன்றி பெளத்த மத்திலும், சமண மதத்திலும் இதன் கூறுகள் இருக்கின்றன.
மகாபாரத்தில் பீஷ்மர் இறந்தநாள் சங்கராந்தி என்கிற புராணக் கதையும் உண்டு. அதன் நினைவாக வட இந்தியாவில் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் குறிப்பிட்ட இடங்களில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன என்பது உப தகவல். சங்கராந்தி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டாலும், பொங்கல் வைத்து வழிபடுவது தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மட்டுமே காணக்கூடியது. பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவதே விவசாயத்தைக் குறிக்கும் ஒன்று தான். அடுப்புமூட்டி, பொங்கல் வைத்து, கரும்பு கட்டி, காய்கறிகள் வைத்து, கிழக்கு பார்த்து சூரியனுக்குப் படைக்கப்படுகிறது. அதனூடாக விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் மாடுகளுக்கும், ஆகாரங்கள் கொடுத்து வழிபடப்படுகிறது.
மாட்டுப் பொங்கல் என்பது தமிழகத்தில் மட்டும் காணக்கூடியது. சிறு வீட்டு பொங்கல் என்ற ஒன்று கொண்டாடப்பட்டு வந்தது, அன்று சிறிய வீடு ஒன்றை கட்டி, அதில் சிறிய பானை வைத்து, சிறு பெண் பிள்ளைகள் பொங்கல் வைத்துக் கொண்டாடும் வழக்கமும் உண்டு. காணும் பொங்கல் என்பது பிற்காலத்தில் வந்தது, வெளியிடங்களுக்குச் சென்று காண்பதையே காணும் பொங்கல் என்கிறோம். சென்னை போன்ற நகரங்களில் கடற்கரைக்குச் செல்வதும், கிராமப்புறங்களில் ஆற்றங்கரைக்குச் செல்வதும் வழக்கம். சங்கராந்தி, பொங்கல் என்பது இந்துக்கள் பண்டிகைதான், இன்று பொங்கல் தமிழர் பண்டிகை என்றாலும், அது இந்துக்களாலேயே கொண்டாடப்படுகிறது. தமிழர் பண்டிகை என்பதால் இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும் கொண்டாடுவது இல்லை.
இஸ்லாமியர்களின் வழிபாட்டில் சந்திரனுக்கே இடமுண்டு. அவர்களது வழிபாடே பிறை பார்த்துதான் நடத்தப்படுகிறது. ஆகவே அவர்கள் வழிபாட்டில் சூரியன் அங்கம் வகிப்பதில்லை. கிறித்தவர்களின் வழிபாட்டில் சூரியன், சந்திரன் இரண்டுமே அங்கம் வகிப்பதில்லை. பெளத்தத்தில் முன்னர் குறைவாக இந்த வழிபாடு இருந்திருந்தாலும், தற்போது அந்த வழக்கம் பெரும்பாலும் இல்லை. இந்துக்கள் வழிபாடு, விவசாயத்துடன் தொடர்புடையது என்பதால் பொங்கல், சங்கராந்தி இந்துக்கள் பண்டிகைதான்" என்கிறார் அ.கா.பெருமாள்.
source https://www.vikatan.com/events/religious/is-pongal-a-hindu-festival
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக