சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் மறைவையடுத்து, சசிகலா உட்பட 3 பேரும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து, வெளியே வந்தனர். இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆர்.டி.ஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர், ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்த பொருள்களை ஏலம் விடக்கோரி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, கர்நாடக முதன்மை மாநகர சிவில் மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் நரசிம்ம மூர்த்தி மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்து தீர்ப்பளித்திருக்கும் நீதிபதி, வழக்கறிஞரை நியமித்து ஜெயலலிதாவின் அனைத்து சொத்துகளையும் ஏலம்விட நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார்.
அதன்படி, 468 வகையான வைரம், ரூபி, மரகதம், முத்து, ரத்தினம் உள்ளிட்ட விலை உயர்ந்த கற்கள், தங்கநகைகள், 700 கிலோ வெள்ளிப்பொருள்கள், ரூ.11,344 மதிப்பிலான விலை உயர்ந்த புடவைகள், 91 கைக்கடிகாரங்கள், 27 சுவர் கடிகாரங்கள், 44 குளிர்சாதன இயந்திரங்கள், 86 மின்விசிறிகள், 146 அலங்கார நாற்காலிகள், 81 தொங்கு விளக்குகள், 20 சோபா செட்கள், 250 சால்வைகள், 12 குளிர்பதன பெட்டிகள், 10 தொலைக்காட்சிப் பெட்டிகள், 8 சி.வி.ஆர் கருவிகள், 140 வீடியோ கேசட்டுகள், 1 வீடியோ கேமரா, 4 வீடியோ பிளேயர்கள், 1,040 வீடியோ கேசட்கள், 24 டேப் ரெக்கார்டர்கள், 3 இரும்பு லாக்கர்கள், 33 தொலைபேசிகள் ஆகியவை ஏலத்தில் விடப்பட இருக்கின்றன.
இந்த உடமைகள் அனைத்தும் விதான் சவுதாவிலிருக்கும் கர்நாடக மாநில கருவூலத்தில் கடந்த 26 வருடங்களாக வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் ஜவுளியில் சில வகை பொருள்கள் மடிந்த (FOLDING) நிலையில் நீண்டக்காலம் இருந்ததால், அவை நாளடைவில் தரத்தை இழந்து, நிறமும் மங்கலாகி இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதேபோல், காலணிகள் மற்றும் பிற தோல் பொருள்கள் அவற்றின் தரம், வலிமையை இழக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் பொருள்களின் தற்போதைய நிலை குறித்தும் தெரியவில்லை. விரைவில் இந்தப் பொருள்கள் ஏலம்விடப்பட இருக்கும் நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பயன்படுத்திய பொருள்கள் என்பதால் இவற்றை வாங்க அ.தி.முக-வினர் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதாவின் புடவைகள், காலணிகள் உட்பட மேலே குறிப்பிடப்பட்ட 29 வகையான பொருள்களை ஏலம்விடும் பணிகளை மேற்கொள்ள, கர்நாடக அரசு ஒரு சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்றும் பெங்களூரு சிவில் நீதிமன்றம், தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/what-are-jayalalithas-properties-to-be-auctioned-as-per-court-order
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக