மதுரை மத்திய சிறைவாசிகளுக்கு ஒரே நாளில் 4540 புத்தகங்களை வழங்கி மதுரை மக்கள் சாதனை புரிந்துள்ளனர்.
அது மட்டுமின்றி பொதுமக்கள் எப்போது வேண்டுமானலும் புத்தகங்களை வழங்க ஏதுவாக புத்தகங்கள் வழங்கும் மையத்தை சிறைத்துறை ஏற்படுத்தியிருக்கிறது.
சமீபத்தில் மக்களிடமிருந்து திரட்டப்பட்ட புத்தகங்களை மாநில மனித உரிமை ஆணைய தலைவர் பாஸ்கரன் சிறைத்துறை டி.ஐ.ஜி பழனியிடம் வழங்கினார். அதைத்தொடர்ந்து, சிறைக்கு வெளியில் புத்தக தானம் செய்யும் மையமும் திறந்து வைக்கப்பட்டது.
இதுகுறித்து நம்மிடையே பேசிய சிறைத்துறையினர், "தமிழகத்தில் புழல், புழல்-2, மதுரை, திருச்சி, கோவை, பாளையங்கோட்டை, சேலம், கடலூர் உள்ளிட்ட 9 இடங்களில் மத்திய சிறைகள் செயல்பட்டு வருகின்றன.
சிறைக் கைதிகளை நல்வழிப்படுத்த பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. சிறைவாசிகள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட 'சிறை அங்காடி'கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அதுபோல் சிறைக்குள் ஸ்டேஷனரி பொருட்கள் தயாரிப்பு, நெசவு, விவசாய உற்பத்தி என பல பணிகளை சிறைவாசிகள் செய்து வருகிறார்கள்.
இதனுடன் சிறைக்கைதிகள் மன அழுத்தம் நீங்க ஆலோசனைகளும், மனநல போதனை வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் சிறைவாசிகள் மன அழுத்தம் நீங்கி நல்வழியில் மனதைச் செலுத்தக்கூடிய புத்தகங்கள் வழங்கும் திட்டத்தை சிறைத்துறை தொடங்கியுள்ளது.
சிறைக்கைதிகளின் நலன் சார்ந்து சிறைத்துறை டிஜிபி அம்ரேஸ் புஜாரி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் முக்கியமானது கைதிகளுக்கு புத்தக வாசிப்பை அதிகப்படுத்தி அவர்களிடம் மனமாற்றத்தைக் கொண்டு வர வேண்டுமென்பதுதான். அதற்காக உருவானதுதான் புத்தக தான திட்டம்.
அனைத்து மத்திய சிறைகளிலும் உள்ள நூலகங்களில் உலக அறிஞர்கள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, நீதி நெறி நூல்கள், நன்னடத்தை வழிகாட்டி புத்தகங்கள் போன்றவற்றை அதிகளவில் வைத்திருந்தாலும், இதில் மக்கள் பங்களிப்பையும் கொண்டு வரவேண்டும். அவர்களுக்கும் சிறைக்கைதிகளை நல்வழிப்படுத்தும் எண்ணம் வரவேண்டும் என்ற நோக்கில் அவர்கள் தரும் நல்ல புத்தகங்களை பெறவும் சிறைத்துறை திட்டமிட்டுள்ளது.
சென்னையில் நடந்த புத்தகத் திருவிழாவில் சிறைத்துறை ஸ்டாலில் பங்கேற்று கவிஞர் வைரமுத்து இத்திட்டத்தை ஊக்கப்படுத்தினார். இந்த முயற்சிக்கு தமிழக அரசின் நூலகத்துறையும் ஆதரவு கொடுத்தது. அதன் மூலம் கைதிகளுக்காக புத்தகம் சேகரிக்கும் முயற்சியை சிறைத்துறை நிர்வாகம் தொடங்கியது. அங்கு நிறைய புத்தகங்கள் சேர்ந்தன.
ஒரு லட்சம் புத்தகங்களை பொதுமக்களிடமிருந்து நன்கொடையாக பெற வேண்டும் என சிறைத்துறை திட்டமிட்டதன் தொடர்ச்சியாக மதுரை மத்திய சிறை நிர்வாகம் கைதிகளுக்கு புத்தக தானம் பெறுவதற்கான முயற்சிகள் தொடர்ந்தது.
அதன் விளைவாக முதல்கட்டமாக 4540 புத்தகங்களை வழங்கி மதுரை மக்களும் பல்வேறு அமைப்புகளும் சேகரித்து வழங்கியுள்ளனர். இந்த பணி தொடரும்" என்றனர்.
"சிறைவாசிகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சிறைவாசிகளின் ஊதியத்திலிருந்து குறிப்பிட்ட சதவிகிதத் தொகை பிடித்தம் செய்யப்பட்டு, அது அதிக தொகையாக சேரும்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அழைத்து நல நிதியாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை மத்திய சிறையில் சில நாட்களுக்கு முன் 16 வழக்குகளில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் 25 பேருக்கு ரூ 7,25,000 நலநிதி வழங்கப்பட்டது" என்ற தகவலையும் தெரிவித்தார்கள். இதுபோன்ற நல்ல செயல்களின் வழியே சிறைச்சாலைகளில் கைதிகளின் புதிய வாழ்வுக்கு வகை செய்வது சமூகத்துக்கு நல்லது.
source https://www.vikatan.com/literature/books/news-about-madurai-central-jails-book-donation-scheme
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக