தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள கழுநீர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் வரதராஜன் (27). திசையன்விளை அருகே செயல்பட்டுவரும் தனியாருக்குச் சொந்தமான அழைப்பிதழ் அச்சடிக்கும் நிறுவனத்தில் எலெக்ட்ரீசியனாக வேலை செய்துவந்தார். அந்த நிறுவனத்தில் சென்னையைச் சேர்ந்த சாம்ராஜ் (35) என்பவரும் இயந்திரப் பணியாளராக வேலை செய்துவந்தார்.
வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட பழக்கத்தில் நெருங்கிய நண்பரான இருவரும், நிறுவனத்திலுள்ள ஒரு அறையில் தங்கியிருந்து வேலை செய்திருக்கின்றனர். இருவரும் பொருள்கள் வாங்குவதற்காக அடிக்கடி பைக்கில் திசையன்விளை சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்திருக்கின்றனர். அதன்படி இருவரும் திசையன்விளையை அடுத்த குமாரபுரம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர் திசையிலிருந்து பெட்ரோல் ஏற்றிவந்த டேங்கர் லாரி பைக்மீது நேருக்கு நேர் மோதியிருக்கிறது.
டேங்கர் லாரி மோதியதால் இருவரும் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டனர். அதில், வரதராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த அடியுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த சாமராஜ், ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவரும் உயிரிழந்தார்.
இருவரின் உடல்களும் உடற்கூறாய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. விபத்து காரணமாக நண்பர்கள் இருவரும் உயிரிழந்த சம்பவம் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் சக ஊழியர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இது குறித்து திசையன்விளை போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
source https://www.vikatan.com/news/accident/two-youths-died-on-the-spot-as-a-tanker-lorry-collided-with-the-bike
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக