2022-ம் ஆண்டுக்கான வருடாந்தர கல்வி நிலை அறிக்கை (ASER ரிப்போர்ட்) சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.
2018-க்குப் பின், சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ப்ரதம் ஃபவுண்டேஷன் சார்பாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் மாநில வாரியான மாணவர்களின் கற்றல் சதவிகிதம் தொடங்கி கொரோனா காலகட்டத்தில் கற்றலில் ஏற்பட்ட மாற்றங்கள் என பல்வேறு தரவுகள் இதில் வெளியிடப்பட்டிருக்கிறது.
நாடெங்கும் உள்ள சுமார் 616 மாவட்டங்களைச் சேர்ந்த 19,060 பள்ளிகளில் படிக்கும் 7 லட்சத்துக்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அதன்படி 6-14 வயதுக்குட்பட்ட 98.4% மாணவர்கள் தற்போது பள்ளிகளில் சேர்ந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த எண்ணிக்கை 2010-ம் ஆண்டில் 96.6% ஆகவும் 2018-ம் ஆண்டில் 97.2% ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள அதே வேளையில் டியூஷன்களுக்கு செல்லும் மாணவர்களின் சதவிகிதமும் இதே காலக்கட்டத்தில் வெகுவாக அதிகரித்துள்ளதாக இத்தரவுகள் கூறுகின்றன.
ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு:
2021-ம் ஆண்டின் ASER ரிப்போர்ட் படி 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களின் 3-ல் ஒருவர் இணைய சேவை மற்றும் ஸ்மார்ட் போன் இல்லாத காரணத்தால் கற்றலை தொடர முடியாத நிலை இருந்தது. ஆனால், நடப்பாண்டின் தரவுகள்படி 2018 முதல் 2021 வரையிலான காலகட்டத்திற்குள் மாணவர்களிடையே ஸ்மார்ட் போன்களின் இருப்பு 36.5% இருந்து 67.6% ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிகிறது.
அரசு பள்ளி சேர்க்கை:
2010-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலகட்டம் வரை மாணவர்கள் அரசு பள்ளிகளின் சேரும் சதவிகிதம் வெகுவாக குறைந்த நிலையில் 2018-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது வரையில் இந்த எண்ணிக்கை 7.3 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதாக தெரிகிறது.
கைகொடுக்காத ஆன்-லைன் வகுப்புகள்:
தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா காலகட்டத்தில் நடைபெற்ற ஆன்-லைன் வகுப்புகள் மாணவர்களின் கற்றலை வெகுவாக பாதித்துள்ளதாகத் தெரிகிறது. 5-ம் வகுப்பைச் சேர்ந்த நான்கில் ஒரு மாணவரால் மட்டுமே 2-ம் வகுப்பு தமிழ் பாடங்களை எளிதாக முடிக்க முடிவதாக தெரிகிறது. இந்த எண்ணிக்கை 2018-ம் ஆண்டில் 40.8 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல 1-ம் வகுப்பை சேர்ந்த 59%-க்கும் மேற்பட்ட மாணவர்கள், இரண்டாம் வகுப்பை சேர்ந்த 24.4% மற்றும் மூன்றாம் வகுப்பைச் சேர்ந்த 14.2% மாணவர்களுக்கு எழுத்துக்களை கண்டறிந்து படிப்பதில் கஷ்டம் இருப்பதாகவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. தேசிய அளவில் பார்த்தால், 5-ம் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் தங்களின் இரண்டாம் வகுப்பு பாடங்களை அவரவர் தாய் மொழியில் தங்குதடையின்றி படிக்கும் எண்ணிக்கை 50.5%-ல் (2018) இருந்து 42.8%-ஆக குறைந்துள்ளது.
2022-ம் ஆண்டு செப்டம்பர் நவம்பர் மாதங்களுக்கிடையில் தமிழகத்தின் 920 கிராமங்களைச் சேர்ந்த 3-16 வயதுக்குட்பட்ட 30,737 மாணவர்கள் இந்த ஆய்வுக்கு ஈடுபடுத்தப்பட்டனர். இதில் 1-9 எண்களை 42% முதலாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் 16.6% மாணவர்களால் அறிய முடியவில்லை என தெரியவந்துள்ளது. அதேபோல, 2016-ம் ஆண்டில் 37.2 சதவிகிதமாக இருந்த ஆங்கிலம் படிக்க தெரிந்த ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் எண்ணியாக்கை 2022-ம் ஆண்டில் 24.5 சதவிகிதமாக சரிந்துள்ளது. அதேபோல, வகுத்தல் கணக்குகள் போடத் தெரிந்த ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை 25.6 சதவிகிதத்திலிருந்து (2018) 14.9 சதவிகிதமாக சரிந்துள்ளது. தேசிய அளவில் இச்சதவிகிதம் 27.9-ல் இருந்து 25.6-ஆக குறைந்துள்ளது.
இருப்பினும், இதே காலகட்டத்தில் மாணவர்களின் பள்ளிகளை சேரும் எண்ணிக்கை 99% ஆகவும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேரும் எண்ணிக்கை 67.4%-ல் இருந்து (2018) 75.7%-ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/news/education/downfall-in-learning-of-school-students-says-aser-report-2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக