இராஜீவ் காந்தி, மாணவரணித் தலைவர், தி.மு.க
`` `தி.மு.க-வின் பெயரை மாற்ற வேண்டும்’ என்று எந்த தி.மு.க தொண்டராவது போராட்டம் நடத்தினார்களா... `மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரை மாற்ற வேண்டும்’ என்று எத்தனை முறை நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் விவாதம் நடத்தப்பட்டிருக்கிறது; தமிழ்நாடு முழுக்க எத்தனை போராட்டங்கள் நடந்திருக்கின்றன; எத்தனை உயிர்கள் பறிபோயிருக்கின்றன... இப்படி எந்த விவரமும் தெரியாமல், அடிப்படை அறிவும் இல்லாமல் ‘வெறும் வாய் உதார்’ விட்டிருக்கிறார். இந்திய அரசியலமைப்பில், `தமிழ்நாடு’ என்ற பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. மரபை மீறி நடந்துகொண்டது ஆளுநர்தான். இதேபோல, குடியரசுத் தலைவர், பிரதமருக்கு எதிராகப் பேசினால் பா.ஜ.க-வினர் ஏற்றுக்கொள்வார்களா... ஆளுநர் உரை என்பதே அரசியல் சாசனம் 176-ன்படி, மாநில அரசின் கொள்கை, சாதனை விளக்க உரை மட்டுமே. அதை வாசிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. கடமையைச் சரியாகச் செய்யாத, அரசியல் சட்டத்தை மீறும் தேச விரோதச் செயலை ஆளுநர் செய்திருக்கிறார். கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து எழுதினார் என்று பொங்கிய பா.ஜ.க-வினரும், `சோடா பாட்டில் வீசுவேன்’ என்று சொன்ன ஜீயரும் இன்று அந்த ஆண்டாள் பிறந்ததாக நம்பப்படும் திருவில்லிப்புத்தூர் ‘கோபுரச் சின்னத்தை’ புறக்கணித்த ஆளுநருக்கு எதிராக வாய் திறக்காமல்... போராட்டம் நடத்தாமல் இருப்பது ஏன்?’’
வினோஜ் பி செல்வம், மாநிலச் செயலாளர், பா.ஜ.க
``சரியாகத்தானே கேட்டிருக்கிறார். ‘அடைந்தால் திராவிட நாடு இல்லையென்றால் சுடுகாடு’ என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் தற்போது `தமிழ்நாடு’ என்று சொல்லிக்கொண்டிருப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. பண்டைய இலக்கியங்களில் `தமிழகம்’ என்ற பெயரைப் பயன்படுத்தியதைக் காண முடிகிறது. இன்னும் சொல்லப்போனால், ‘தலைநிமிர்ந்த தமிழகம்’ போன்று பல்வேறு இடங்களிலும், விளம்பரங்களிலும் தி.மு.க-வே `தமிழகம்’ என்றுதான் பயன்படுத்தியிருக்கிறது. `தமிழ்நாடு’ என்ற பெயரை, `தமிழகம்’ என்று மாற்றினால் நன்றாக இருக்கும் என்று ஆளுநர் தனது ஆசையை மட்டுமே வெளிப்படுத்தினார். உண்மையில், இந்த விவகாரத்தைத் தவறான உள்நோக்கத்துடன் தி.மு.க அரசியல் செய்துகொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் வருவதற்குள் தி.மு.க இதைப்போலப் பல நாடகங்களை அரங்கேற்றும். `தமிழகம்’ என்ற சொல்லின் மீது தி.மு.க-வுக்கு எரிச்சல் இருக்குமேயானால், ‘திராவிட’ என்ற சொல்லை எடுத்துவிட்டு ‘தமிழ்நாடு முன்னேற்றக் கழகம்’ என்று வைக்கலாமே என்றுதான் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதற்கு மக்கள் மன்றத்தில் முதல்வர் பதில் சொல்ல முடியுமா... மொத்தத் தமிழகமும் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று எழுதிக்கொடுத்தால் ஆளுநர் எப்படிப் பொய் சொல்லுவார்... மேடைகளில் ஒரு கட்சிப் பிரமுகர் பேசுவதைப்போலப் பேசுவதற்கு ஆளுநர் ஆள் கிடையாது என்பதை தி.மு.க அரசு உணர வேண்டும்!’’
source https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-vanathi-srinivasan-comments-about-tamil-nadu-name
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக