வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
இதோ பிப்ரவரி மாதம் பிறந்து விட்டது. பிப்ரவரி மாதம் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது காதலர்கள் தினம் .காதல் அழகானது. காதலர்கள் தினம் கொண்டாட காதலன் காதலியாக தான் இருக்க வேண்டும் என்பதில்லை. நம் மனதிற்கு பிடித்த , அப்பா, அம்மா , மாமா, அத்தை, கணவர் ,பிள்ளைகள், உடன்பிறந்தோர், நண்பர்கள், ஆசிரிய பெருந்தகைகள்... இப்படி மனதிற்கு மிகவும் பிடித்தவர்களுக்கு நம் கைகளாலேயே செய்த இனிப்பை கொடுத்து ஹாப்பி வேலண்டைன்ஸ் டே சொல்லலாமா! இனிப்பு என்றவுடன் எதையும் யோசிக்காமல் டக்கென்று என் நினைவுக்கு வந்தது.
நான் திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்கு வந்த முதல்நாள்... என் கைகளால் நான் செய்து அனைவருக்கும் பரிமாறி, எக்கச்சக்கமான பாராட்டுகளைப் பெற்று தந்த "டபுள் கா மீட்டா"..தான்.
அடி கனமான வாணலியில் நெய்யை காய வைத்து, ஐந்து பிரட் ஸ்லைஸ்களை அதனுள் போட்டு பொரித்து எடுத்தேன். அரை கப் சர்க்கரையில் அரை கப் தண்ணீரை சேர்த்து பாகு வைத்தேன். ஜீராவில் சிறிதளவு சில துளிகள் வெனிலா எசன்ஸ் சேர்த்தேன். பொரித்த பிரட் துண்டுகளை (முக்கோணமாக கட் செய்த) சூடான ஜீராவில் போட்டு லேசாக புரட்டி எடுத்து ஒரு அழகிய ட்ரேயில் அடுக்கி, அதன்மேல் துருவிய பாதாம் ,துருவிய பிஸ்தா, தூவி சிறிதளவு பிரஷ் க்ரீமையும் சேர்த்து பரிமாற... வந்த முதல் நாளே அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொண்டுவிட்டேன்.
இது அனைவருக்கும் மிகவும் பிடித்து போக அடிக்கடி செய்ய ஆரம்பித்தேன்
அதேபோல் அப்போது வந்த(முதல்) வரலட்சுமி நோன்பு அன்று எங்கள் ஊர் ஸ்பெஷலான" வெண்ணை புட்டு"(வெல்லத்தில் செய்தது) செய்ய அதுவும் வீட்டில் அனைவருக்கும் பிடித்தமான இனிப்பாக மாறியது.
வெண்ணை புட்டு
கால் கிலோ புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து நைசாக கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும். 100 கிராம் கடலைப்பருப்பை நன்கு வேக வைத்துக் கொள்ள வேண்டும். அரை மூடி தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து கால் கிலோ வெல்லத்தை பாகாக காய்ச்சவேண்டும். வெல்லப்பாகில் கால் லிட்டர் பாலை ஊற்றி கொதித்து வந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் மாவை அதில் கொட்டி நன்கு கிளற வேண்டும்.
மாவு சற்றே வெந்தவுடன் அதில் வேக வைத்த கடலைப்பருப்பு, மற்றும் சிட்டிகை உப்பு சேர்க்கவும். முழுவதுமாக வெந்தவுடன் அதில் துருவிய தேங்காய், சிட்டிகை ஏலக்காய் பொடி தூவி இறக்கவும். ஒரு பெரிய அகலமான தட்டு எடுத்து அதில் 100 கிராம் வெண்ணெயைத் தடவி கலவையைக் கொட்டி ஆறிய பின் பரிமாற வாயில் போட்டால் கரையும் இந்த வெண்ணெய் புட்டு.
நான் செய்யும் இன்னொரு வித்தியாசமான இனிப்பு 'பூசணி விதை கீர்'.
ஒரு கப் பூசணி விதையை ( தோல் நீக்கியது) நான்கு மணி நேரம் ஊற விட்டு பிறகு சொரசொரப்பான தரையில் மெதுவாக தேய்த்து அதன் தோலை நீக்கி நன்கு கழுவி விட்டு அதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் வெள்ளரி விதையையும் சேர்த்து (லேசாக நீர் தெளித்து)நைசாக அரைத்துக் கொள்வேன்..
அரைத்த விழுதை இரண்டு கப் பால், ஒரு கப் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து கிளறி,10 நிமிடம் கழித்து இறக்க ஸ்பூனால் எடுத்துச் சாப்பிடும் பதத்தில் கீர் தயாராகிவிடும். ( சற்று கெட்டியாக இருக்கும் இந்த கீர்.) என்ன கீர் என்று சொல்ல முடியாத அளவுக்கு சுவையில் பிரமாதமாக இருக்கும். எங்கள் வீட்டு விருந்துகளில் தவறாமல் இடம்பெறும் கீர் இது!
இதோ வித்தியாசமான சுவையில் ஒரு பாசந்தி..
வெள்ளை முள்ளங்கி, கேரட் ,தலா இரண்டுஎடுத்து மிகவும் பொடியாக நறுக்கி, வேகவைத்து தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும். 50 கிராம் பாதாம் பருப்பை வெந்நீரில் ஊற வைத்து, தோலை நீக்கி அதனுடன் 10 முந்திரி பருப்பையும் சேர்த்து, சிறிதளவு பால் விட்டு அரைக்கவும்.
இதை 50 கிராம் பால்கோவாவுடன் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். அடி கனமான வாணலியில் ஒரு டம்ளர் பால் விட்டு, நன்கு கொதித்ததும் வேக வைத்து மசித்த காய்கறி மற்றும் 200 கிராம் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி ஐந்து நிமிடம் வேக விடவும்.(இனிப்பு அதிகம் தேவைப்படுவோர் சற்று சர்க்கரை அதிகம் சேர்த்துக் கொள்ளவும்) பின்பு அரைத்த விழுதை அதில் சேர்த்து நன்கு கிளறவும்.
அவ்வப்போது நெய் விட்டு கிளறவும். கெட்டி பதத்துக்கு வந்ததும் இறக்கி , தேவையான அளவு சாரை பருப்பை தூவி அப்படியே சூடாகவோ அல்லது பிரிட்ஜில் வைத்து ஜில்லென்றோ பரிமாறவும். சுவையில் அசத்தும் இந்த பாஸந்தி.
சுலப ஜாமுன்
ஒரு கப் பனீர் துருவலுடன், இனிப்பில்லாத கோவா அரைக்கப் ,ஒரு டீஸ்பூன் மைதா ,சிட்டிகை சமையல் சோடா தேவையான அளவு நெய் சேர்த்து நன்கு பிசைந்து அதை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். அடி கனமான வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருட்டிய உருண்டைகளை மிதமான தீயில் நாலு ,ஐந்தாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். பாத்திரத்தில் ஒன்றரை கப் சர்க்கரையுடன் நீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும் .பாகுபதம் வந்தவுடன் இறக்கி அதில் (விருப்பம் எனில்) வெண்ணிலா எசன்ஸ் அல்லது பாதாம் எசன்ஸ் சில துளிகள் சேர்க்கலாம். அல்லது ஏலக்காய் தூள்சிட்டிகை சேர்த்து பொரித்த ஜாமுன்களை அதில் போட்டு ஊற விட்டு பரிமாறவும்....
காதலர் தின மாதமான இந்த மாதத்தில் இதுபோல் வித்தியாசமான சுவையான இனிப்பு ரெசிபிகளை நீங்களே உங்கள் கைகளால் செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து, அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள். நீங்களும் மகிழ்ச்சியுடன் இருங்கள்.
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
source https://www.vikatan.com/oddities/miscellaneous/my-vikatan-article-of-few-sweet-recipes
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக