இந்தியா - இலங்கை இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி, திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது. தொடரை இந்தியா ஏற்கெனவே (2-0) என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில், இலங்கை ஆறுதல் வெற்றி பெறுமா? என எதிர்பார்த்த நிலையில் இடியாய் முழங்கியிருக்கிறது இந்திய அணி. டாஸ் முதல் இறுதிவரை இந்தியாவின் ஆதிக்கமே நிலவியது.
முதலில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ரோஹித் - சுப்மன் கில் இணை களமிறங்க, ரஜிதா முதல் ஓவரை வீசவந்தார். ரஜிதா இலங்கை அணிக்கு நல்ல தொடக்கம் தந்தார். முதல் ஓவரே `மெய்டன் ஓவர்'. மெல்ல ரோஹித்- கில் இணை ஆட்டத்தை வேகப்படுத்தினர். ஆறாவது ஓவரை, ஆறு ரன்கள் அடித்துத் தொடங்கினர். அதுவரை ரன்ரேட் 4 க்கு கீழ் (5வது ஓவர் வரை) இருந்தது வேகமாக உயரத்தொடங்கியது. பவுண்டரியும், சிக்ஸரும் வரத் தொடங்கின . 7 ஓவர் முடிவில் இந்திய அணி 49/0 என்ற நிலையில் இருந்தது. கில் அசாத்தியமாக ஆடிக்கொண்டிருக்க - ரோஹித்தும் நல்ல முறையில் ஆட ரன்ரேட் தொடர்ந்து அதிகரித்தது.
ஹசரங்கா ஒவரை கவனமுடன் கையாண்டவர்கள் மற்ற அனைவரையும் அசத்தலாக ஆடினர். 15 ஓவர் முடிவில் 91/0 என்று ஸ்கோர் இருந்தது. 16வது ஓவரை கருணரத்னே வீச வந்தார். முதல் பந்து பவுண்டரி சென்றது. இரண்டாவது பந்தை தூக்கி அடிக்க, அது நேராக அவிஷ்காவிடம் செல்ல, கேட்ச் ஆகி அவுட் ஆனார் ரோஹித். அடுத்ததாக களமிறங்களார் விராட் கோலி. 16 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 100 ரன்களை எட்டியது, இந்திய அணி! கோலி - கில் இணை ஆட்டத்தை சோர்வில்லாமல் எடுத்துச் செல்ல, 19 ஓவர் முடிவின் இறுதிப்பந்தில் கில் தனது அரைசதத்தை எட்ட, இந்தியா 118/1 என்ற நிலையில் இருந்தது.
20வது ஓவர் முடிந்தபின், கோலியும் முழு வேகத்துடன் ஆட்டத்தைக் கொண்டுச் செல்ல, ஸ்கோர் வேகமாக உயரத்தொடங்கியது.
24 ஓவர் முடிவில் 153/1 என்ற நிலையில் ஸ்கோர் இருந்தது, வந்த அனைத்து பெளலர்களையும் கில், சிறப்பாகக் கையாள, கோலி விவேகமாக செயல்பட்டார். இந்த இணை வேகமாக ரன்களைக் குவித்தது. இருவீரர்களும் நல்ல பார்மில் இருக்க, இலங்கை பந்துவீச்சும் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை. இந்த பார்பனர்ஷிப்-பை உடைக்க, இலங்கை அணி தவறியதே, அவர்களுக்குத் தலைவலியாகிவிட்டது. சுழல், வேகம் என்ற வேறுபாடுயின்றி, இவர்கள் மட்டையில் மாயம் செய்ய 31வது ஓவரின் 4வது பந்தில் பவுண்டரி மூலம் இந்தியா 200/1 என்ற ஸ்கோரை எட்டியது. அடுத்த பந்திலேயே கோலி தனது அரைசதத்தையும் எட்டினார்.
31வது ஓவரின் கடைசிப்பந்தில், கில் தனது சதத்தைப் பதிவுச்செய்தார். இது அவரது இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டி சதமாகும். ஆனால், கோலியின் அதிரடியால் இவரது பங்களிப்பு ஹைலைட்டாக தெரியாமல் போனது தான் சற்று வருத்தம்! ஆனாலும் `கில் ஒரு கில்லி ப்ளேயர்தான்!'
கில் 116 (97 பந்தில்) ரன்கள் எடுத்திருந்த நிலையில் (14 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) ரஜிதா பந்தில் வெளியேறினார். அடுத்து ஷ்ரேயாஸ் களமிறங்கினார். கில் இருந்தவரை சற்று பார்த்து விளையாடிய கோலி பின், தனது அதிரடி பாணியில் ஆடத்தொடங்கினார். 37 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்களைப் பதிவுச்செய்தது. ஷ்ரேயாஸ் ஐயரும் தனது சிக்ஸர் மூலம் 38வது ஒவரைத் தொடங்கி வைத்தார். கோலி- ஷ்ரேயாஸ் மீண்டும் ஓர் நல்ல பார்டனர்ஷிப்பை உருவாக்கினார். 43வது ஓவரை கருணரத்னே வீசினார். ஓவரின் 4வது பந்தில் பவுண்டரி அடித்தார் கோலி, இதன்மூலம் ஸ்கோர் 300-யை தாண்ட, அந்த பந்திலேயே தனது சதத்தை பூர்த்தி செய்தார் (10 பவுண்டரி, 1 சிக்ஸர்) கிங் கோலி. 43 வது ஓவர் முடிவில் 303 /2 என இந்தியாவின் நிலை இருந்தது.
கோலியின் சதத்திற்கு பின் அவரின் வேகம் வெறித்தனமாக ஏறியது! (விராட் இந்த ஆட்டத்தில் அடித்த 8 சிக்ஸரில், 7 சதத்திற்கு பின் தான்).
ஷ்ரேயாஸூம் நல்ல முறை ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்தார். 46வது ஓவரில் ஷ்ரேயாஸ் அவுட். கே.எல்.ராகுல் 7 ரன் எடுத்தநிலையில் குமாரா பந்தில் அட்டமிழந்தார். சூர்யகுமாரும் 4 ரன்னிற்கு வெளியேறினார். 50 வது ஓவர், குமாராவின் முதல் பந்தை கோலி, சிக்ஸர் அடிக்க 150 ரன்களைக் கடந்தார். இறுதியாக 50 ஓவர் முடிவில் 390/5 என எடுத்து, இலங்கைக்கு 391 ரன்னை இலக்காக நிர்ணயித்தது, இந்திய அணி.
கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 166 ரன்களைக் குவித்திருந்தார்.
இலங்கை அணியில் நுவனிது - அவிஷ்கா இணை பேட்டிங்கைத் தொடங்கியது. ஆனால், தொடங்கிய வேகத்தில் முடிந்தும் விட்டது என்பதே நிதர்சனம். 11 வீரர்களில், போட்டியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக அசன் பந்தரா விளையாட இயலவில்லை. ஏனைய 10 வீரர்கள், கையிருப்பு 9 விக்கெட்டுடன் இலங்கை ஆடியது. இலங்கைக்கு இதிலும் இன்னல்தான். நுவனிது, ஷனாகா, ரஜிதா ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்திலேயே வெளியேறினர். 22 ஓவர் முடிவிலேயே 78 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டும் இழந்து, இலங்கை ஆல்-அவுட் ஆனது.
ஆனால், இதில் இந்திய பந்துவீச்சை பாராட்டியே ஆகவேண்டும். இதில் அக்ஷர்,வாஷிங்டன் சுந்தர் பந்து வீசவே இல்லை. ஷமி, குல்தீப், சிராஜ் மற்றும் ஷ்ரேயாஸ் (ஒரு ஓவர்) ஆகியோர் மட்டுமே பந்து வீசினர். இதில் முகம்மது சிராஜ் நிச்சயம்
பாராட்டுதலுக்குரியவர், 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார், அது மட்டுமின்றி கருணரத்னேவை ஆகச்சிறந்த முறையில் ரன் அவுட் ஆக்கியிருந்தார். சிராஜ் நல்ல ஆல்-ரவுண்டராக, திறம்பட செயல்பட்டு வருகிறார். எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்கிறார் .
இந்தியா 3-0 என்ற கணக்கில் இத்தொடரை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது !
ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை விராட் கோலி வென்றார்.
source https://sports.vikatan.com/cricket/india-won-sri-lanka-in-odi-series
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக