Ad

வியாழன், 19 ஜனவரி, 2023

ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக-வில் உட்கட்சி பூசல்... இடைத்தேர்தல் அறிவிப்பும் தொடரும் சிக்கலும்!

ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவராக இருப்பவர் வி.சி. வேதானந்தம். இவர் 2 மாதங்களுக்கு முன் இந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இவர் இப்பதவியில் நியமிக்கப்பட்ட பிறகு கட்சியின் நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்து பல்வேறு நிர்வாகிகளும் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சியில் இணைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த டிசம்பர் 22-ம் தேதி சென்னிமலை வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த சரவணன் தலைமையிலான நிர்வாகிகள் பா.ஜ.க- பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாகக் கூறி மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
அந்தக் கடிதத்தில், மாவட்டத் தலைமை தங்களுக்கு போதிய ஒத்துழைப்பு தருவதில்லை, உள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட தங்களை அழைக்காமலும், தகவல் தெரிவிக்காமலும் பொறுப்பில் இல்லாதவர்களை வைத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

தி.மு.க.வில் இணைந்த பா.ஜ.கவினர்.

இதுபோன்ற செயல்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளது. எனவே கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாகவும், கட்சியில் தொடர்ந்து நீடிப்பதாகவும் கடந்த 22-ம் தேதி கட்சியின் லெட்டர் பேடில் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். சரவணனுடன், ஒன்றிய பொதுச் செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன், சங்கர் கணேஷ், ஒன்றிய பொருளாளர் தனசேகரன் ஆகியோரும் அக்கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மீது கொண்ட அதிருப்தி காரணமாக கடந்த மாதம் 26-ம் தேதி பா.ஜ.க. மாவட்டத் துணைத்தலைவர் கே.விக்னேஷ்வரன் தலைமையில் இளைஞரணியைச் சேர்ந்த சுமார் 25 பேர் பா.ஜ.க.வில் இருந்து விலகி அமைச்சர் சு.முத்துசாமி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

இதேபோல சூரம்பட்டி மேற்கு மண்டலத் துணைத்தலைவராக உள்ள முரளிதரன் கட்சி நிர்வாகிகள் அடங்கிய வாட்ஸ்அப் குரூப்பில் வெளியிட்டுள்ள பதிவில், ``கட்சியின் சார்பில் நடத்தப்படும் எந்த நிகழ்ச்சிகள் குறித்தும் மாவட்ட பா.ஜ.க. தரப்பில் எங்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை. அன்னதானம், கபடிப்போட்டி, பொங்கல் பரிசு வழங்குவது என எந்த நிகழ்வு குறித்தும் தகவல் தெரிவிப்பதில்லை. வாட்ஸ்அப் பார்த்து தான் தெரிந்து கொள்கிறோம்.

பா.ஜ.க. தலைமைக்கு அனுப்பியுள்ள கடிதம்.

பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாகவும், பூத்வாரியாக வாக்காளர் பட்டியலையும் தருமாறு கேட்டும் தரவில்லை. இதற்கு முந்தைய பொறுப்பாளர்கள் முறையாக தகவல் தெரிவித்து வந்த நிலையில் தற்போதைய புதிய நிர்வாகிகள் இந்த நடைமுறையை பின்பற்றுவதில்லை” என தன்னுடைய அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவராக இருந்த எஸ்.டி.செந்தில்குமார் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு கடந்த 2001 முதல் 2006 வரையிலும் வெள்ளோட்டம்பரப்பு பேரூராட்சித் தலைவராக இருந்தவர். இவரை அப்பதவியில் இருந்து நீக்கி விட்டு மாநில செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளதிலும் கடும் அதிருப்தி நிலவி வருவதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.  

அதுமட்டுமின்றி முன்னாள் மாவட்டத் தலைவரால் நியமனம் செய்யப்பட்ட பல நிர்வாகிகளையும் அப்பதவியில் இருந்து நீக்கி விட்டு புதிதாக பொறுப்பில் நியமித்திருப்பதால் பதவி இழந்தவர்கள் மாவட்டத் தலைவர் வேதானந்தத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்சியின் மாநில தலைமைக்கும், தேசிய தலைமைக்கும் புகார் மனுக்களை அனுப்பியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பா.ஜ.க. தலைமைக்கு அனுப்பிய கடிதம்.

பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் வேதானந்தத்திடம் கேட்டோம். அவர் நம்மிடம் கூறுகையில், ``கட்சியின் நிர்வாக வசதிக்காக சில நிர்வாகிகளை மாற்றியமைத்தோம். கட்சியின் வளர்ச்சிக்காக சில நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். நான் பொறுப்புக்கு வந்து 2 மாதங்கள் தான் ஆகிறது. இதுபற்றி வெளிப்படையாக கூற முடியாது. அவர்களின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை” என்றார் சுருக்கமாக.

தற்போது ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தத் தொகுதி அடங்கியுள்ள ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ.க.வில் ஏற்பட்டுள்ள உள்கட்சிப்பூசல் வரும் இடைத்தேர்தல் முடிவுகளிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளதால் ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ.க.வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/politics/by-election-party-tussle-in-bjp-in-erode-south-district

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக