புதுக்கோட்டையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக புதுக்கோட்டை, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களின் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினார். முன்னதாக, புதுக்கோட்டை அருகே வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பட்டியல் சமூக மக்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு மாத காலமாகியும் குற்றவாளிகள் கைதுசெய்யப்படவில்லை. இது தமிழக அரசின் கையாளாகாத தனத்தைக் காட்டுகிறது. சி.பி.சி.ஐ.டி-க்கு வழக்கை மாற்றினாலே அது ஏமாற்று வேலைதான்.
காலம் கடத்தி, ஆறவைத்து இந்தப் பிரச்னையை முடிப்பதற்கான வேலை. இங்கிருக்கும் பிற சமூக மக்களின் ஓட்டு வங்கி பாதிக்கப்பட்டுவிடக்கூடாது, எனவேதான் திட்டமிட்டு தமிழக அரசு குற்றவாளிகளைக் கைதுசெய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது. தி.மு.க கூட்டணியில் இருந்துகொண்டு சமூகநீதி குறித்தெல்லாம் திருமாவளவன் பேசக்கூடாது. இந்த விவகாரம் தொடர்பாக, அரசின் நடவடிக்கையைக் கண்டித்துப் போராட வேண்டும்" என்றார்.
அதைத் தொடர்ந்து, பெருமாநாட்டில் கட்சி நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியவர், ``ஓட்டுக்காக தி.மு.க செயல்பட்டு வருகிறது. சமூகநீதி பற்றி பேச தமிழக அரசுக்கு எந்த அருகதையும் இல்லை. ஈரோடு இடைத்தேர்தல் களம் எனக்கானது.
இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி. தி.மு.க-வின் எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகின்றன. இது எங்களுக்குச் சாதகமாக இருக்கும். இடைத்தேர்தலில் தே.மு.தி.க தனித்து போட்டியிடும் என்று கூறி வேட்பாளரை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது, துணிச்சலான முடிவு வாழ்த்துகள். தேர்தலில் வெற்றி பெறுவது அரவிந்த் கெஜ்ரிவாலால் முடியும், சீமானால் முடியாதா... கமல்ஹாசன் கட்சி தொடங்கும்போது தனித்துதான் போட்டி என்று கூறினார்.
கமல்ஹாசன் ரத்தத்தில் அணுக்கள்தான் ஓட வேண்டும். தேவையில்லாமல் காங்கிரஸ் எல்லாம் ஓடக்கூடாது. பணத்தைப் பாதுகாப்பதற்கு அ.தி.மு.க-வுக்கு பா.ஜ.க தேவைப்படுகிறது. ஆனால், தேர்தலில் வாக்குகள் விழாது என்பதால் பா.ஜ.க-வை கழட்டிவிட அ.தி.மு.க நினைக்கிறது. ஈரோடு இடைத்தேர்தலில் எத்தனை பேர் களமிறங்கினாலும், நாம் தமிழர் கட்சி வெற்றி பெறுவது உறுதி. வரும் 29-ம் தேதி ஈரோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்'' என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/ntk-seeman-slams-tamilnadu-government-in-pudukottai-over-the-vengaivayal-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக