Ad

புதன், 25 ஜனவரி, 2023

``ஆளுநருடன், அமைச்சர் பொன்முடி விருந்தில் கலந்துகொண்டது நாகரிகமானது!" - ரவீந்திரன் கான்ஸ்டன்டைன்

தமிழ்நாட்டில் தி.மு.க அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையேயான பனிப்போரானது, நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அண்மையில், ஆளுநர் ரவி `தமிழகம், தமிழ்நாடு' தொடர்பாகப் பேசியது, மாநில அரசியலில் அனலைக் கிளப்பியது. முன்னதாக, சட்டப்பேரவையிலிருந்து ஆளுநர் ரவி பாதியிலேயே வெளியேறினார். அவர் வெளியேறும்போது, அமைச்சர் பொன்முடி சைகை காட்டி விமர்சித்ததாக பா.ஜ.க-வினர் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் ஆளுநர், மத்திய கல்வி அமைச்சருடன் அமைச்சர் பொன்முடி விருந்தில் கலந்துகொண்டது அரசியலில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

ஆளுநருடன் விருந்து

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தி.மு.க அரசுக்கும் இடையே முரண்பாடு நிலவி வருகிறது. கடந்த ஆண்டு, மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியுடன் ஆலோசிக்காமல் நடத்தியது முதல், சமீபத்தில் தமிழ்நாடு என்று அழைக்கக்கூடாது என்று ஆளுநர் பேசியது வரை அனைத்தும் பரபரப்பை ஏற்படுத்தின. அதிலும் முக்கியமாக, சட்டமன்றக் கூட்டத்தில் மாநில அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் சிலவற்றை தவிர்த்தும், சேர்த்தும் வாசித்துவிட்டு, பாதியிலேயே வெளிநடப்பு செய்தது தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை கொதிப்படையச் செய்தது.

ஆளுநர் ரவி

காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு, அமைச்சர் பொன்முடி அழைக்கப்படாத சம்பவத்திலிருந்துதான் ஆளுநரை தி.மு.க-வினர் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார்கள். அதைத் தொடர்ந்து சமீபத்தில் சட்டசபை நிகழ்வுகளை புறக்கணித்து ஆளுநர் சென்றபோது, அமைச்சர் பொன்முடிதான் சைகை காட்டியது, எதிர்க்கட்சியினரை கொதிப்படையச் செய்தது.

அமைச்சர் பொன்முடி

இந்த நிலையில்தான், ஆளுநரை தொடர்ந்து விமர்சித்து வரும் அமைச்சர் பொன்முடி, அவருடன் விருந்தில் கலந்துகொண்டிருப்பது பேசுபொருளாக மாறியிருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த நிகழ்வு காரைக்குடியில் நடந்த அதே நாளில்தான், தி.மு.க-வின் சட்டத்துறை சார்பில் 'அரசியல் அமைப்பு சட்டமும் ஆளுநரின் அதிகார எல்லையும்' என்ற தலைப்பில் மதுரையில் நடந்த கருத்தரங்கில் திருச்சி சிவா எம்.பி, என்.ஆர்.இளங்கோ எம்.பி, ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி ஆகியோர் ஆளுநரின் அதிகாரம் குறித்து விரிவாகப் பேசினார்கள்.

திமுக சட்டத்துறை நடத்திய கருத்தரங்கம்
ஆளுநருடன் விருந்து

இந்த விருந்து உபசரிப்பில் ஆளுநருடன் மத்திய கல்வி அமைச்ர் தர்மேந்திர பிரதான், தமிழக அமைச்சர்கள் பொன்முடி, பெரியகருப்பன் மட்டுமே கலந்துகொண்டனர். உணவு பரிமாற கெசட்டட் ரேங்கில் உள்ள சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பிரபாவதியை மாவட்ட நிர்வாகம் நியமித்ததும் சர்ச்சையாகியிருக்கிறது.

இது குறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளர் ரவீந்திரன் கான்ஸ்டன்டைனிடம் பேசினோம். ``தவறாகப் புரிந்துகொண்டு சிலர் பேசுகிறார்கள். அரசியல் செய்யும் இடம் வேறு, பதவியில் இருப்பவர்களுக்கு மரியாதை செய்யும் இடம் வேறு. ஆளுநரின் கருத்துகளுக்கு எதிர்வினையாற்றுகிற இடம் அதுவல்ல. அன்று ஆளுநருடன் அமைச்சர் பொன்முடி பேசிக்கொண்டதற்கு காரணம், அவர் சகோதரர் மறைவுக்கு டெல்லியிலிந்து ஆளுநர் விசாரித்தார். நேரில் வந்து ஆறுதல் சொல்வதாகவும் தெரிவித்திருந்தார். `அதெல்லாம் பரவாயில்லை' என்று அமைச்சர் பொன்முடியும் தெரிவித்தார். அவர் போன் செய்தபோது நானும் அருகில் இருந்தேன்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

அப்படிப்பட்டவர் ஒரு நிகழ்சியில் சந்திக்கும்போது, அவரிடம் மரியாதை நிமித்தமாகப் பேசுவதுதானே பண்பாடு. அதுமட்டுமின்றி இது ஆளுநர் அளித்த விருந்தல்ல, பல்கலைக்கழகம் அளித்த விருந்து. இதில் இணைவேந்தர் என்ற முறையில் அமைச்சர் பொன்முடியும், வேந்தர் என்ற முறையில் ஆளுநரும் கலந்துகொண்டார்கள். அரசியல் நிலைப்பாடு வேறு, ஓர் அரசு நிகழ்ச்சியில் ஆளுநருக்கு மரியாதை செய்வது என்பது வேறு. அதனால்தான் அவருடன் உணவருந்தினார். தமிழரின் நாகரிக அடிப்படையில் அமைச்சர் நடந்துகொண்டிருக்கிறார். இதை விமர்சனம் செய்வது இங்கிதமல்லாத செயல்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/controversy-arose-over-minister-ponmudi-participated-in-a-feast-along-with-the-governor-ravi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக