சென்னையில் 46-வது புத்தகத் திருவிழா தொடங்கி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதையொட்டி தினமும் ஆளுமைகளின் புத்தகப் பரிந்துரைகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்று எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களின் புத்தகப் பரிந்துரைகளைப் பார்க்கவிருக்கிறோம். இதோ அவர் பரிந்துரைத்த 5 புத்தகங்கள்…
1. உ.வே.சா கடிதக் கருவூலம் - ஆ.இரா.வேங்கடாசலபதி - டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்
தமிழ் இலக்கியத்தில் கடித இலக்கியம் என்று ஒரு வகை உண்டு. எழுத்தாளர்கள் எழுத்தாளர்களுக்கு எழுதி கொண்டது, எழுத்தாளர்கள் உறவினர்களுக்கு எழுதிக்கொண்டது என்று இந்த இலக்கியம் விரிகிறது. கண்மணி கமலாவுக்கு என புதுமைப்பித்தன் தனது மனைவிக்கு எழுதிய கடிதம்,
கு.அழகிரிசாமி கி.ராவுக்கு எழுதிய கடிதம், சுந்தர ராமசாமி கு.அழகிரிசாமிக்கு எழுதிய கடிதம் என தமிழில் பிரபலமான கடிதங்கள் நூலாக வெளியாகி இருக்கிறது.
அது போல 19-ம் நூற்றாண்டில் உ.வே.சா அவர்களுக்கு எழுதப்பட்ட 30 ஆண்டு கடிதங்களை ஆ. இரா. வேங்கடாசலபதி அவர்கள் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். இது 19-ம் நூற்றாண்டினைப் புரிந்துகொள்ள உதவும் வரலாற்று ஆவணம். எனவே வாசகர்கள் இதை வாங்கிப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
2. பா.செயப்பிரகாசம் கதைகள் - 2 தொகுப்பு - வம்சி பதிப்பகம்
சமீபத்தில் இயற்கை எய்திய எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அவர்களின் சிறுகதைகளை 2 தொகுப்பாக வம்சி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 1970களில் எழுதத் தொடங்கியவர் பா.செயப்பிராகாசம்.
கவிதை, சிறுகதை, நாவல் எனப் பல்வேறு நூல்களை எழுதியிருந்தாலும், இவரது சிறுகதைகள் மிக முக்கியமானது என்று குறிப்பிடலாம்.
குறிப்பாக அடித்தள மக்களின் வாழ்வியலை தன் எழுத்துக்களில் பிரதிபலித்தவர். ஒரு ஜெருசலேம், காடு , கிராமத்து இராத்திரிகள், என்பன இவரது சிறுகதைகளில் முக்கியமான தொகுப்புகளாகும்.
3. கவிதை பொருள்கொள்ளும் கலை - பெருந்தேவி
தமிழ்ச் சமூகம் கவிதையில் தொடர்ந்து இயங்கிக்கொண்டே வரக்கூடியது. சங்ககாலத்தில் இருந்து கவிதைக்கு நாம் பெரிய இடம் கொடுத்திருக்கிறோம். நமக்குக் கவிதை இல்லாத காலம் என்று ஒன்று கிடையவே கிடையாது. ஆனால் இப்போது நவீன காலத்தில் நவீனக் கவிதை, புதுக்கவிதை வந்ததற்கு பின்னர் கவிதையைப் புரிந்து கொள்வது என்பதில் எல்லோருக்குமே ஒரு சிரமம் இருப்பதை அறிய முடிகிறது.
நவீன கவிதையை எப்படி புரிந்து கொள்வது என்று நிறைய வாசகர்கள் புலம்புகிறார்கள். அந்த வகையில் கவிஞர் பெருந்தேவி அவர்கள் எழுதியுள்ள “கவிதை பொருள் கொள்ளும் கலை” என்ற நூல் மிக முக்கியமான ஒரு நூலாக நான் கருதுகிறேன்.
தமிழில் இருக்கக்கூடிய நவீன கவிஆளுமைகள் பலருடைய கவிதைகளை எடுத்துக்கொண்டு அந்த கவிதைகளில் இருக்கக்கூடிய நுட்பங்களை எப்படி புரிந்து கொள்வது, ரசிப்பது, சுவைப்பது என்பதை விவரித்து எழுதியுள்ளார். ஆக இது கவிதை வாசகர்களுக்கும் கவிஞர்களுக்கும் மிக முக்கியமான நூலாகும்.
4. அந்தரம் - தொ.பத்தினாதன் – காலச்சுவடு
அதற்கடுத்து இந்த கண்காட்சிக்கு பல நாவல்கள் வெளிவந்துள்ளன குறிப்பாக நான் சொல்ல விரும்புவது புலம்பெயர் தமிழர்களைப் பற்றியான ஒரு நாவல். அந்தரம் என்ற தலைப்பில் தொ.பத்தினாதன் எழுதி காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இது புலம்பெயர் மக்களைப் பற்றியான நாவல் என்று சொன்னாலும் அந்த புலம்பெயர் மக்களில் வேறுபாடுகள் உண்டு. புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் பிற உலக நாடுகளுக்கும் சென்றவர்கள் ஒரு வகை. புலம்பெயர்ந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள் ஒருவகை. ஈழத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து அகதிகளாக வாழக்கூடியவர்களைப் பற்றி நம்மிடம் அதிகமான பதிவுகள் கிடையாது.
அவர்களைப் பற்றி பத்தினாதன் அவர்கள் கட்டுரைகளாக சில நூல்களை எழுதியுள்ளார். அதனைத் தொடர்ந்து தன்னுடைய சொந்த அனுபவத்தையும் இப்போது ஒரு நாவலாக எழுதியுள்ளார். இங்கே அகதிகள் முகாம் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும், இன்றைக்கு வரைக்கும் தமிழ்நாட்டினுடைய வெவ்வேறு இடங்களில் அகதிகள் முகாமில் வாழக்கூடிய மக்களுடைய வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது என்று தெரியுமா? அதை மையமாகக் கொண்டு இந்த அந்தரம் என்ற நாவலை எழுதி இருக்கின்றார். அந்த நாவலை நான்காவதாக நான் பரிந்துரைக்க விரும்புகிறேன்.
அடுத்து இப்போது நம் தமிழ்நாட்டு அரசு நூல்களை வெளியிடுவதிலும் நூல்களை மொழிபெயர்ப்பதிலும் நூல்களை சந்தைப்படுத்துவதிலும் மிகுந்த கவனம் செலுத்துகிறது. தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம் என்பது 1960 களிலிருந்து இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய ஒரு நிறுவனம். அவர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டு இருக்கின்றார்கள். அவையெல்லாம் இன்றைக்கு மறுபதிப்பில் வந்திருக்கின்றன. இப்போது புதிய நூல்களையும் வெளியிட தொடங்கியிருக்கிறார்கள். அதில் மிக முக்கியமாக செம்மொழி இலக்கியங்களாகிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகியவற்றையெல்லாம் வெளியிடக்கூடிய திட்டம் வைத்திருக்கிறார்கள். அதில் இந்த புத்தகக் கண்காட்சியையொட்டி சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டு என்று சொல்லக்கூடிய 10 நூல்கள் இருக்கின்றன. அந்த பத்து நூல்களுக்கும் உரை எழுதி தனித்தனியாக தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் வெளியிட்டிருக்கின்றன.
இது மிக முக்கியமான ஒரு விஷயம். பழைய உரைகளாக இருந்தாலும் அவற்றை இன்றைய வாசகர்கள் படிப்பது என்பது கடினமாக இருக்கிறது. அதனுடைய மொழி, சொல்ல கூடிய விதம், எல்லாம் கடினமாக இருக்கிறது. ஆக, இன்றைக்கு இருக்கக்கூடிய நவீன உரைநடையில், நவீன முறையில், நவீன வாசகர்களை நோக்கி இந்த நூல்கள் செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் ஒவ்வொரு நூலையும் ஒவ்வொருவர் எடுத்துக்கொண்டு அதற்கு உரை எழுதியிருக்கின்றார்கள்.
தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் அதை மிகக் குறைவான விலைக்கு வெளியிட்டுள்ளது. 600 ரூபாய் தான் அதனுடைய ஒட்டு மொத்த விலையே. தமிழ் சமூகத்தினுடைய தமிழ் மொழியினுடைய மிகப்பெரும் வளத்தை எல்லா மக்களுக்கும் கொண்டு சேர்க்கக்கூடிய வகையில் அரசு செய்திருக்கிறது. ஆக இதனை அனைவருக்கும் நான் பரிந்துரைக்கிறேன் .
இந்த வாசிப்பு, படிப்பு இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. படிப்பு என்பது நம் கல்வி முறையில் படிக்கக்கூடியது. ஆனால் வாசிப்பு என்பது ஒரு சுதந்திரமான விஷயம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பிடிக்கும். அதை தேடி வாசிக்கக்கூடிய சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் உண்டு. மனிதனின் ஆயுட்காலம் 50, 60 ஆண்டுகள் அதிகபட்சம் 100 ஆண்டுகள் இதில் மனிதனுக்கு கிடைக்கக்கூடிய வாழ்க்கை அனுபவங்கள் என்பது மிக குறைவானது. ஆக நம்முடைய அனுபவத்தை நாம் விரிவாக்கி கொள்ள வேண்டுமென்று சொன்னால் அதற்கு வாசிப்பு தான் உதவும்.
வாசிப்பு நமக்கு பலவிதமான வாழ்க்கை முறையைக் காட்டுகின்றது. பல விதமான மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. அதனால் ஒரு புத்தகத்தை வாசிக்கிறோம் என்றால் ஒரு புது வாழ்க்கையை வாசிக்கிறோம் என்று அர்த்தம். வாசிப்பின் மூலமாக நம்முடைய வாழ்க்கை பார்வையை விரிவாக்கிக் கொள்ள முடியும். ஆகவே, அனைவரும் புத்தகம் வாசிக்க வேண்டுமென வேண்டுகிறேன்.
source https://www.vikatan.com/literature/arts/five-books-recommended-by-writer-perumal-murugan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக